...............................
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி 2’ படம் மிகப் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘ராஜமாதா’ சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி நடித்தால் 10 கோடி சம்பளம், ஒரு ஹோட்டலின் ஒரு மொத்த தளம், 10 உதவியாளர்கள், ஹிந்தி உரிமை ஆகியவற்றைக் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியது.
‘பாகுபலி 2’ வெளியீட்டு சமயத்தில் ராஜமௌலி அளித்த வீடியோ பேட்டி ஒன்றில் ‘ஸ்ரீதேவியை நடிக்க வைக்க நினைத்திருந்தோம். அவர் கேட்ட சில விஷயங்களால் நல்ல வேளையாக அந்த முடிவை மாற்றிக் கொண்டு ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தோம்’ என்று சொல்லியிருந்தார்.
ஸ்ரீதேவி தற்போது ‘மாம்’ படத்தின் பிரமோஷனுக்காக பல ஊர்களைச் சுற்றி வருகிறார். ஹிந்தியில் மட்டுமல்லாது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்திற்காக ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ‘பாகுபலி’ படத்தில் நடிக்காதது ஏன் என்பது குறித்து ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டது. முடிந்து போன விஷயத்தை எதற்காக மீண்டும் பேச வேண்டும் என அவர் அந்தக் கேள்விகளைத் தவிர்த்தார்.
ஆனால், தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் ஸ்ரீதேவி இது பற்றி பேசிய போது ராஜமௌலி குறித்த தன்னுடைய கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீதேவி அவருடைய பேட்டியில்,
“சென்னை, மும்பை, டெல்லி எங்கே சென்றாலும் இது பற்றியே கேட்கிறார்கள். ராஜமௌலி இயக்கிய ‘ஈகா’ படத்தை மிகவும் ரசித்தேன். அவர் அமைதியானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் போன்ற சிறந்த கலைஞருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், ராஜமௌலியின் பேட்டியை எனது நலம் விரும்பி ஒருவர் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், காயப்பட்டேன்.
என்னுடைய திரையுலக வாழ்க்கையில் பல படங்களில் நான் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆனால், ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் வெளியான பின்னும் நான் அதில் நடிக்காதது ஏன் என்று பேசுவது எனக்குப் புரியவில்லை.
நான் 10 கோடி கேட்டேன், ஹோட்டலின் ஒரு தளம் முழுவதையும் கேட்டேன், பத்து விமான டிக்கெட்டுகள் கேட்டேன் என்பதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். நான் அப்படியெல்லாம் கேட்பவளாக இருந்தால் எப்படி 50 வருடங்களில் 300 படங்களைத் தாண்டியிருக்க முடியும்.
எனது கணவரும் ஒரு தயாரிப்பாளர்தான், அதனால் தயாரிப்பாளர்களின் வலி என்ன என்று எனக்குத் தெரியும். தயாரிப்பாளர் ஒரு வேளை ராஜமௌலியிடம் இது பற்றி தவறாகச் சொல்லியிருக்கலாம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். இனி, இது பற்றி நான் பொதுவில் பேச விரும்பவில்லை,” என ஸ்ரீதேவி அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ராஜமௌலி பற்றி வெளிப்படையாக ஸ்ரீதேவி கருத்து தெரிவித்துள்ளதால் ‘பாகுபலி 2’ படத்தின் சாதனையில் மூழ்கிப் போயிருந்த ரசிகர்கள் தற்போது கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்ரீதேவியின் கருத்துக்கு ராஜமௌலி என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதைக் கேட்க தெலுங்குத் திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்