ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி 2’ திரைப்படம் இன்று 1000 கோடி ரூபாயை வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
ஹிந்தித் திரையுலகில் 100 கோடி ரூபாய் கிளப் என்பது கடந்த சில வருடங்களாக பெருமையாகப் பேசப்பட்டது. அதன் பின் அதை 200 கோடி, 300 கோடி கிளப் என பெருமைபட்டுக் கொண்டார்கள். ஆமீர்கான் நடித்து வெளிவந்த ‘தங்கல்’ திரைப்படம் 700 கோடி ரூபாயை வசூலித்து நேற்று வரை முதலிடத்தில் இருந்தது.
அந்த சாதனையை ‘பாகுபலி 2’ படம் முறிடியத்துள்ளது. ஒரு பிராந்திய மொழி திரைப்படம் இந்த அளவில் சாதனை புரிந்துள்ளதை பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்னும் ‘பாகுபலி 2’ பற்றி வாயைத் திறக்காமல் இருக்கிறார்கள்.
இனி, 1000 கோடி கிளப் என்பதுதான் இந்தியத் திரையுலகின் புதிய கிளப்பாக ‘பாகுபலி 2’ படம் மூலம் மாறியுள்ளது.
‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அமரேந்திர பாகுலி, மகேந்திர பாகுபலியாக டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபாஸ் இன்று உலக அளவில் தெரிந்துள்ள நடிகராக மாறியுள்ளார்.
தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, ‘பாகுபலி 2’க்கு கிடைத்துள்ள இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத் தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக் காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது.
மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்,” என பிரபாஸ் கூறியுள்ளார்.
1000 கோடி படத்தின் முதல் நாயகன் ஹிந்தித் திரையுலக நாயகன் இல்லை, தென்னிந்தியத் திரையுலக நாயகன் என்பது தென்னிந்திய ரசிகர்களுக்குப் பெருமையான ஒன்று