செஞ்சிட்டாளே என் காதல – விமர்சனம்
09 Apr,2017
.........................
என்றும் மாறாத தன்மையுடன் இருப்பது காதல் மட்டுமே. அதனால்தானோ என்னமோ இன்னமும் தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
மணிரத்னம் முதல் இன்று அறிமுகமாகும் இயக்குனர்கள் வரை காதலை எப்படி எப்படி எல்லாம் சொல்ல முடியுமோ அப்படியெல்லாம் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய காதல் நிறையவே இருக்கிறது போலிருக்கிறது.
அறிமுக இயக்குனர் மற்றும் நடிகர் எழில் துரை ஒரு இயல்பான காதலை இந்தப் படத்தில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் எழில் துரைக்கு பள்ளிப் பருவ காலத்திலிருந்தே மதுமிலா மீது ஒரு காதல். எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் தன் காதலைச் சொல்லி விடுகிறார். இருவரும் தீவிரமாக காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். எம்பிஎ படித்துக் கொண்டிருக்கும் மதுமிலாவிற்கு உடன் படிக்கும் மற்றொருவர் மீது திடீரென நட்பு ஆரம்பமாக எழில் துரையை தவிர்க்க ஆரம்பிக்கிறார். இதனால் நடக்கும் சண்டையில் எழில் துரையும், மதுமிலாவும் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
உண்மைக் காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் எழில் துரை இயல்பாகவே நடித்திருக்கிறார். நாம் விரும்பும் காதலி கிடைத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வோமோ அனைத்தையும் செய்கிறார். காதலிக்கும் காட்சிகளை விட ஏமாந்து தவிக்கும் காட்சிகளில் அவருடைய சோகத்தை நமக்கும் பகிர்கிறார்.
டிவி சீரியல்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த மதுமிலா இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அவர் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்களை முன்கூட்டியே அவரது கண்கள் சொல்லிவிடுகிறது. அவரது அந்தப் பார்வையில்தான் ஆயிரமாயிரம் அர்த்தங்கள். இவரைப் போன்ற திறமைசாலிகளை மற்ற இயக்குனர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாயகன், நாயகி தவிர நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமாவும், தங்கையாக நடித்திருப்பவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். எழில் துரையை ஒருதலையாகக் காதலிக்கும் அபிநயாவும் மனதில் இடம் பிடிக்கிறார்.
நாயகன், நாயகி இருவருக்கிடையேயான காதல் மோதல்தான் படத்தில் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் இன்னும் புதிய காட்சிகளையும், சில டிவிஸ்ட்டுகளையும் வைத்திருந்தால் இந்த ஆண்டின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்திருக்கும்.
அடுத்த படத்தில் இந்தக் குறைகளை களைந்துவிட்டால் எழில் துரையும் வளரும் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடுவார்.