..........................
தூறல் நின்னு போச்சு படத்தில் செந்தாமரையை ‘’மாமா மாமாஸஸஏனுங்க மாமா’’ என்று நாய்க்குட்டி போல மசிந்து, குழைந்து கடைசியில் கட்டை வண்டி அச்சாணியால் அடி வயிற்றில் குத்திக் கொல்வது ஒரு கதாபாத்திரம்.
அதை அவ்வளவு ‘அசலாக’ செய்திருந்தார் சூரியகாந்த். பெயரில் என்னவோ ஒளியடிக்கிறது. நிறத்தில் அமாவாசைக்கு வண்ணம் குழைக்கலாம். தோற்றத்தில் கச்சடாப்பேர்வழியோ என்ற அச்சம்.
திரைப்படத்தில் நடிக்கவேண்டுமென்ற ஆர்வத்தில் எதை எதையோ இழந்தவர். தஞ்சை மாவட்டம், பூண்டியில் பிறந்த இவர் ’போண்டியே’ ஆகியிருக்கிறார்.
படித்துக்கொண்டிருந்த பி.ஏ., முதலாமாண்டு படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்டது. திரைப்படங்களில் வேஷம் கொடுப்பார்கள் என்று நம்பிப் போலி படத்தயாரிப்பாளர்களிடம் அவ்வப்பொழுது பணம் கொடுத்து ஏமாந்தது திரைப்படங்களுக்காக.
எம்.ஏ.காஜா இயக்கத்தில் உருவான ‘வசந்த காலம்’ இவரது முதல் படம். ஒரு சிறிய வேடம் செய்தார். ‘அடிச்சுவடுகள்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தூறல் நிண்ணு போச்சு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நின்றிருக்கிறாய். அவசரப்பட்டு எதையும் செய்து பேரைக் கெடுத்துக் கொள்ளாதே. நல்ல வில்லன் பாத்திரமாக பார்த்துச் செய். நல்ல நிறுவனத்தின் படங்களையே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கே.பாக்யராஜ் அறிவுரைச் சொல்லியிருக்கிறார்.
‘இன்று போய் நாளை வா’ படத்தில் அருமையான ஓர் உதார் மைனர் வேஷத்தை சூரியகாந்துக்கு அளித்து ஓரு அழுத்தமான அறிமுகம் கொடுத்தவர் கே.பாக்யராஜ்.
1984-ஆம் ஆண்டு வெளிவந்த ‘குடும்பம்’, 1985-ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுயுகம்’, 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ’கண்ணத்தொறக்கணும் சாமி’, இதே ஆண்டு வெளிவந்த விசுவின் ‘மீண்டும் சாவித்திரி’, பாலு ஆனந்த் இயக்கத்தில் ‘ரசிகன் ஒரு ரசிகை’, 1988-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’, 1992-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாக்யராஜின் ‘ராசுகுட்டி’ என பல்வேறு தமிழ்ப் படங்களில் வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளவர் சூரியகாந்த்.
இவ்வளவு வெற்றிப்படங்களில் நடித்தும் நிலையான ஒரு இடம் கிடைக்காமல் இன்னும் ஒரு பழைய சைக்கிளில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டபடிதான் இருக்கிறார்.
வயதும் ஆகிவிட்டது. வருமானமும் இல்லை. நடிகர் சங்கம் மனது வைத்தால் உதவலாம்.