கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
28 Mar,2017
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ஊட்டி உசிலமேடு மற்றும் தொட்டபெட்டா சந்திப்பு ஆகிய இடங்களில் தனியார் கல்லூரிகள் இயங்கி வந்தன. இங்கு ஓட்டல் நிர்வாகம், சமையற்கலை மற்றும் பொறியியல் படிப்பு ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை கல்லூரி நிர்வாகத்தினர் புதுப்பிக்காமல் விட்டு, விட்டதாக தெரிகிறது. இதனால் இந்த கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த கல்லூரியில் படித்த உடுமலைபேட்டையை சேர்ந்த மாணவர் பிருத்திவிராஜ் கடந்த 2012-ம் ஆண்டு ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி கோர்ட்டில் ஆஜராக வந்த போது எடுத்த படம்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கல்லூரி நிர்வாகிகளான நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி, ஷாலினி, கல்லூரி நிர்வாகிகள் அசோக்குமார் மற்றும் அசோக்சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஊட்டி உரிமையியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதுதொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றும் மாமனாருக்கு சம்மன் அனுப்பப்பட்டும், அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி, கல்லூரி நிர்வாகிகள் அசோக்குமார் மற்றும் அசோக் சிவக்குமார் ஆகிய 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்