............................
,
எவ்வளவு பொறுமையா இருக்கணுமோ, அவ்வளவு பொறுமையா இருக்கிறார்!’ -ரம்பா பற்றி அவரது உறவினர்
திரைத்துறையில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் பலரும் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தே வருகிறார்கள்.
பிரச்னைகளோடு பிரிவது, பரஸ்பரமாகப் பிரிவது என இரண்டு வகையான பிரிவுகளில் ஏதாவது ஒன்றின் மூலம் பிரிந்து வாழ்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை ரம்பாவின் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல.
நடிகை ரம்பா
நடிகை ரம்பா 2010 ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தார் நடிகை ரம்பா.
இதில் தன்னுடைய கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி தற்போது ரம்பாவின் வழக்கு முடிவுக்கு வரும் தருவாயை எட்டியுள்ளது. இது குறித்து நடிகை ரம்பாவிடம் கருத்துக் கேட்க முயற்சித்தோம், இறுதியில் அவருடைய உறவினர் ஒருவரிடமே பேச முடிந்தது,
‘எப்ப இந்தப் பிரச்னை ஆரம்பிச்சது?’
”2012 ல் இருந்து ரம்பா அதிகப்படியானப் பிரச்னைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிட்டுத்தான் இருந்தாங்க.
77 கோடி ரூபாய் கடனை அடைக்கிறதுக்காக ரம்பாவுடைய சொத்துக்களை தன்னோட பேர்ல எழுதி கொடுக்கணும், அப்படி இல்லனா இரண்டு குழந்தைகளையும் தூக்கிட்டுப் போயிடுவேனு மிரட்ட ஆரம்பிச்சாரு.
அப்படி மிரட்டித்தான் ஒரு முறை குழந்தைகளை அவரே சென்னைக்கு கூட்டிவந்து ஸ்கூல்லயும் சேர்த்துவிட்டார்.
ஆனா, ‘என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க’னு அவரே கம்ப்ளைன்ட்டையும் கொடுத்தார்.
ஒரு பொண்ணு எவ்வளவு பொறுமையா இருக்க முடியுமோ அவ்வளவு பொறுமையாகத்தான் இருந்து பார்த்தாங்க. ஆனா, அளவுக்கு மீறிப் போனதாலத்தான் அவங்க நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது”.
‘அப்படி என்ன பிரச்னை இரண்டு பேருக்குள்ளும்? ஏன் இப்போ தன்னோட கணவர் கூட சேர்த்து வைக்கச் சொல்றாங்க?’
”அவர் தொழில் அதிபரா இருந்ததால எதிர்காலம் நல்லா இருக்கும்னு நினைச்சுத்தான் அவருக்கு திருமணம் செய்து வச்சோம். ஆனா,
அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது அவர் அவ்வளவு வசதியானவர் இல்லங்கிறது. இதெல்லாம் தெரிஞ்சும் ரம்பா அனுசரிச்சுட்டுத்தான் போனாங்க.
ரம்பாவோட சொத்துக்களை இந்திரன் மீது எழுதி வைக்க அடிக்கடி மிரட்டியிருக்காங்க. அதுக்கு இவங்க ஒத்துக்கல. அதுக்கபுறம்தான் இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வரவேண்டியதாயிடுச்சு. இன்னும் சொல்லப் போனா அவரு கனடாக்காரரும் இல்லை. அவர் ஶ்ரீலங்காவைச் சேர்ந்தவர்.”
‘ரம்பாவின் குணநலம் எப்படி?’
”ரம்பாவைப் போல அவ்வளவு சாஃப்டான பொண்ணைப் பார்க்கவே முடியாது. ரொம்ப பொறுமைசாலி. அவரோட கணவர் கூடப் பிறந்தவங்க நான்கு பேர்.
எல்லோருமே ஆண்கள். அவங்க வீட்டுல ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தா ரம்பாகிட்ட இப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்.
ரம்பாவுக்கு ரெண்டும் பெண் குழந்தைகள். அதைவைச்சு அவங்க படுத்தின அத்தனை கொடுமைகளையும் ரம்பா பொறுத்துகிட்டாங்க. ஆனா பெண் குழந்தைகளை வெறுத்த அவங்க மனப்பான்மைதான் ரம்பாவை சோர்வைடைய வைச்சிருச்சு.”
‘இப்போ என்ன முடிவு பண்ணியிருக்காங்க?
”லான்யா, சாஷாங்கற தன்னோட குழந்தைகளோட எதிர்காலத்துக்காகத்தான் அவரோட சேர்ந்து வாழணும்னு முடிவெடுத்திருக்காங்க.
அவரை விட்டுப் பிரியணும்னு ரம்பா நினைக்கல. ரம்பாவோட சொத்தெல்லாம் தன்னோட பேர்ல எழுதி வைங்கனு அவங்க கணவர் மெயில் மூலமா கேட்டது எல்லாம் நாங்க அழிக்காம வைச்சிருக்கோம். ஆனா இப்ப அப்படியெல்லாம் கேட்கலைனு சொல்றார்.
திருமணத்திற்கு பின்னாடி ஒரு பி.எம்.டபிள்யூ ரம்பாவுக்காக இந்திரன் வாங்கினார். வெளி உலகத்துக்கு ரம்பாவுக்காக வாங்கிக் கொடுத்தமாதிரி காட்டிக்கிட்ட இந்திரன், அதை அவங்க அண்ணன் பேர்ல வாங்கினார்ங்கிறது பத்து நாளைக்கு அப்புறமா தெரிஞ்சது.
இப்படி எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் அதை எல்லாம் தள்ளி வைச்சுட்டு, இனிமேல தன்னோட குழந்தைகளுக்காகவாவது அவரோட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறாங்க ரம்பா.
நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இன்னும் நிலுவையில இருக்கு. அந்த தீர்ப்புக்காகத்தான் காத்துட்டு இருக்கோம்” என்றவரிடம் ரம்பா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டோம்,
”அவருக்குனு கடமைகள் இருக்கில்லியா.. அதனாலதான் இப்போ விஜய் டி.வில ஒளிபரப்பாக கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராகவும், Z தெலுங்கு சேனல்ல நடன நிகழ்ச்சிக்கு ரம்பாவும், சினேகாவும் நடுவர்களாக இருக்காங்க. இப்போ வரைக்கும் ரம்பாவும், குழந்தைகளும் எங்களோட பாதுகாப்புலதான் இருக்காங்க.” என்றார்.
சென்னை: கணவன், மனைவி இடையேயான பிரச்சனையை இன்று மாலை 6 மணிக்குள் பேசித் தீர்க்குமாறு நடிகை ரம்பாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ரம்பாவுக்கும், கனடாவில் செட்டிலான தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடாவில் செட்டில் ஆனார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான அவர் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியா வந்துவிட்டார்.
இந்தியா வந்த பிறகு ரம்பா தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
2 குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக வாழ முடியவில்லை என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
ரம்பா மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பா தனது 2 மகள்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, கணவனும், மனைவியும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை சமரச மையத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்றது.
ரம்பாவுக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்ததால் தான் அவர் கணவரை பிரிந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் கணவருடன் சேர உள்ளார்.