.........................
தமிழ்த் திரையுலகில் வெளியாகும் புதிய படங்களை சாட்டிலைட் டிவிக்களுக்கு விற்றுக் கொடுப்பதில் பல வருட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ‘சாட்டிலைட்’ ஸ்ரீதர்.
சில வருடங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டில் ‘அலிபாபாவும் அற்புத காரும்’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார். அது பற்றி அப்போதே பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.
“ஒரு கார், ஒரு பெண் இருவரை மையப்படுத்திய கதை. அந்தப் பெண்ணை கொலை செய்து, காரையும் மறைத்து வைத்து விடுகிறார்கள். அதன் பின் அந்தக் கார் அதுவாகவே பயணம் செய்து பெண்ணின் கொலைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையில் வரும் காருக்காக சில லட்சங்கள் செலவு செய்து வித்தியாசமான கார் ஒன்றையும் வடிவமைத்தோம்.
என்னுடைய படத்திற்கு மீண்டும் பைனான்ஸ் வாங்கி ஆரம்பிக்கலாம் என்று அணுகியபோதுதான் இதே கதையில் ‘டோரா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.
அது பற்றி தயாரிப்பாளர் கில்டு உள்ளிட்ட அமைப்புகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
என் வீட்டு மாடியில்தான் ‘டோரா’ படத்தைத் தயாரிக்கும் சற்குணத்தின் உதவியாளர்கள் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களிடம் இந்தக் கதை குறித்து விவாதித்திருக்கிறேன்.
அதனால், அவர்கள் மூலமாக கதை வெளியில் சென்றிருக்கலாம். என்னுடைய ‘அலிபாபாவும் அற்புத காரும்’ படத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்துள்ளேன்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் வரை செல்வேன்,” என ‘சாட்டிலைட்’ ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நயன்தரா நடிப்பில், இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள ‘டோரா’ படம் மார்ச் மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.
எங்கிட்ட மோதாதே’ – ரஜினி, கமல் ரசிகர்களின் மோதல்
இன்றைக்கு எப்படி அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்களோ, 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.
ஆனால், அப்போதெல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் கிடையாது. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் போதும், டீக்கடைகளில் வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருக்கும் போதும் ரஜினி, கமல் இருவரில் யார் சிறந்த நடிகர் ? என வாக்குவாதம் இல்லாமல் எந்த சந்திப்பும் முடியாது.
அந்த 80களின் ரஜினி, கமல் ரசிகர்களின் மோதலை ஒரு சுவாரசியமான படமாக ‘எங்கிட்ட மோததோ’ என்ற தலைப்பில் இயக்கி இருக்கிறார் ராமு செல்லப்பா.
‘சதுரங்க வேட்டை’ நாயகன் நட்ராஜ், ‘மூடர் கூடம்’ நாயகன் ராஜாஜ், ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராதாரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
“நட்ராஜ், ரஜினி ரசிகராகவும், ராஜாஜ் கமல் ரசிகராகவும் அப்படியே வாழ்ந்துள்ளார்கள்ஸஇல்லை இல்லைஸசண்டை போட்டுள்ளார்கள். இருவருமே கட்-அவுட் வரையும் ஓவியர்கள். ஒருவர் ரஜினி படங்களை மட்டுமே வரைவார், மற்றொருவர் கமல் படங்களை மட்டுமே வரைவார்.
சிறு வயதில் எங்கள் ஊரான திருநெல்வேலியில் நான் பார்த்த, கேட்ட பல சுவாரசியமான சம்பவங்களை இந்தப் படத்தில் வைத்திருக்கிறேன்.
நண்பர்கள், ரசிகர்களாக எதிரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் ஒரு பொது எதிரி வரும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
87ல் படத்தின் கதை நடக்கிறது. கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, ரஜினிகாந்த் நடித்த ‘மனிதன்’ ஆகிய படங்கள் அந்தக் காலக்கட்டத்தில் வந்தது. அந்த சமயத்தில் நடைபெற்ற சில அரசியல் விஷயங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு மாறுபட்ட படத்தைப் பார்க்கும் திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும்,” என்கிறார் இயக்குனர் ராமு செல்லப்பா.
‘எங்கிட்ட மோதாதே’ மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக 25,000 கொடுத்த ‘ஒரு கனவுல போல’ குழுவினர்
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’.
வி.சி. விஜயசங்கர் இயக்கத்தில் ராம் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை முதன் முறையாக பென்டிரைவில் வெளிட்டுள்ளனர்.
விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் சார்லி, அசோக், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம், கார்த்திக் சுப்புராஜ், நடிகை ரோகிணி, பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸி சண்முகம், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் ‘ஒரு கனவு போல’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் விஷால்,
“நான் இப்போது நடிகனாகவோ நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை. ஒரு மனிதனாகப் பேசுகிறேன். காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும் இறங்க இருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அது சம்மந்தமாக இப்போதுதான் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.
நான் இந்த விழாவிற்கு நடிகர் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால் தான் வந்தேன். ஆனால் பொதுவாக நான் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன். இந்த விழாவிற்குத் தான் வந்திருக்கிறேன். இப்போது ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா எல்லோரும் எங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள வரவில்லை என்று நிச்சயமாக கலாட்டா செய்வார்கள். அதனால் இனி அவர்கள் விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.
சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும் தான் பேசப்படுவான். ஆனால், ‘ஒரு கனவு போல’ மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்.
விழாவில் கலந்து கொண்டதற்கு விஷாலுக்கு பரிசு ஒன்றைத் தருவதாக சௌந்தர்ராஜா கூறினார், ஆனால் விஷால் அவருக்கு அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதனால் படத்தின் தயாரிப்பாளர் சி.செல்வகுமாரும், நடிகர் சவுந்தர்ராஜாவும், “நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிக்கு உதவ முதல் நன்கொடையாக நாங்கள் இதைத் தருகிறோம், என்று 25,000 ரூபாயை நன்கொடையாக கொடுத்தனர்”.