பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்
                  
                     22 Feb,2017
                  
                  
                     
					  
                     
						
			  
			  
              

பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்
103 வயது பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் சென்னை மேற்கு அண்ணாநகர் டி.வி.எஸ்.காலனியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தூங்கிக்கொண்டு இருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆண்டனி மித்ரதாஸ் மரணம் அடைந்தார். இவர் 1913-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை அருளானந்தம் முதல் உலகப்போரில் கலந்து கொண்டவர். ஆண்டனி மித்ரதாஸும் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தவர். 1941-ம் ஆண்டு தனது முதல் படமான ‘தயாளன்’ படத்தை ஆண்டனி மித்ரதாஸ் டைரக்டு செய்தார். இதில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் இணைந்து நடித்தனர். அதன்பிறகு டி.ஆர்.துரைராஜ் அறிமுகமான ‘பிழைக்கும் வழி’ என்ற நகைச்சுவை படத்தை டைரக்டு செய்தார்.
பிரேம் நசீர் நடித்த பால்யசகி, அவகாசி, திக்குறிச்சி சுகுமாரன் நடித்த அரிச்சந்திரா ஆகிய மலையாள படங்களையும் டைரக்டு செய்துள்ளார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகாமி’ படத்தை கடைசியாக டைரக்டு செய்தார். மரணம் அடைந்த ஆண்டனி மித்ரதாஸுக்கு எலிசபெத் என்ற மனைவியும் உஷா என்ற மகளும் உள்ளனர். ஆண்டனி மித்ரதாஸ் உடல் தானம் செய்து இருந்ததால் இறுதி சடங்குகளுக்கு பிறகு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவரது உடலை எடுத்து சென்றனர்