ரம்’ படத்தில் நடித்தது நல்ல அனுபவம், நன்றாக தமிழ் பேசுகிறேன்: சஞ்சிதா ஷெட்டி
17 Feb,2017
(ரம்) படத்தில் நடித்தது நல்ல அனுபவம், நன்றாக தமிழ் பேசுகிறேன்: சஞ்சிதா ஷெட்டி
தற்போது நன்றாக தமிழ் பேசுவதாகவும் ‘ரம்’ படத்தில் நடித்து நல்ல அனுபவம் என்றும் சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்து திரைக்கு வந்துள்ள படம் ‘ரம்’. இதில் ரிஷிகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் தம்பியாக நடித்தவர். இசைஅமைப்பாளர் அனிருத் சித்தி மகன் சாய்பரத் இயக்கி உள்ள இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, மியாஜார்ஜ், விவேக், நரேன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி கூறிய இயக்குனர் சாய்பரத்....
“‘ரம்’ என்று பெயர் வைத்திருப்பதால் இது மதுவுடன் தொடர்புடைய படம் அல்ல. ரம் என்றால் தமிழ் அகராதிப்படி தீர்ப்பு என்பது பொருள். இது ஆக்ஷன் கலந்த திகில் படம்.
நரேன் வில்லனாக அசத்தி இருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அனைவரையும் கவரும் வித்தியாசமான படம்” என்றார்.
படத்தின் நாயகன் ரிஷிகேஷ், “ இந்தபடத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறேன். வித்தியாசமான கதை. சிறப்பாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
சஞ்சிதா ஷெட்டி கூறியதாவது,
“ஒரு கொள்ளை கூட்டதின் கதை என்றாலும், இதில் ஹாரர் உண்டு. ரிஷிகேஷ் ஜோடியாக நடித்திருக்கிறேன். விவேக் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். காமெடியில் கலக்கி இருக்கிறார். குணசித்திர வேடத்திலும் அசத்தி இருக்கிறார். படப்பிடிப்பு இடைவெளியில் அவருடன் பேசிக் கொண்டே இருப்பேன். இதில் நடித்தது நல்ல அனுபவம். இந்த படம் வரும் நாளில் நான் நடித்த ‘என்னோடு விளையாடு’ படமும் வெளியாகிறது. அடுத்த மாதம் நட்டி ஜோடியாக நான் நடித்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் வெளியாகிறது. நான் பெங்களூர் பொண்ணு, என்றாலும் `ரம்' உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருப்பதால் நன்றாக தமிழ் பேசுகிறேன். இப்போது வேலையை மட்டும் காதலிக்கிறேன். வேறு யாரையும் காதலிக்க வில்லை” காதலர் தினத்தில் கூட ‘ரம்’ பட நிகழ்ச்சியில் இருந்தேன் என்றார்