1. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம்
‘வசந்தசேனா’ என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தன்னைப் போலவே ஈகை குணத்துடன் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பழக்கமே இல்லாத மதுரம்மாவின் குணநலன்களே, என்.எஸ்.கே.வுக்கு அவர் மீது பிடிப்பு வரக் காரணமாக இருந்தது.
அப்போது ஏற்கெனவே என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திருமணமாகியிருந்தது. ஆனாலும் மதுரம் அம்மையார் மீது அதீத காதல் கொண்டுவிட்டார். ‘வசந்தசேனா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பீகாருக்கு ரயிலில் சென்றபோதுதான் மதுரம் அம்மாவிடம் தான் அவரை விரும்புவதாகச் சொல்லி தனது மனதைக் கலைத்து மதுரம்மாவின் மனதையும் கலைத்தார்.
மதுரம் அம்மாவும் மிகவும் யோசித்து அந்த ஷூட்டிங்கின்போதே தனக்கும் சம்மதம் என்று சொல்ல.. பீகாரிலேயே அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது.
ஆனால் சென்னை திரும்பிய பிறகுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது மதுரம் அம்மாவுக்குத் தெரிய வந்து சில நாட்கள் பேசிக் கொள்ளாமல் சண்டையிட்டபடியே இருந்ததும் நடந்திருக்கிறது.! மதுரம் அம்மாவுக்குக் குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. வாரிசு வேண்டும் என்பதற்காக மதுரம் அம்மாவின் தங்கை வேம்பு அம்மாளையும் கலைவாணர் திருமணம் செய்து கொண்டது வேறொரு கதை..!
2. எம்.ஜி.ஆர். – சதானந்தவாதி – வி.என்.ஜானகி
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி இறந்த பின் தனது தாயார் சத்யா அம்மையாரின் வற்புறுத்தலுக்காக சதானந்தவதியை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே சதானந்தவதி நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையானார்.
இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு முதல்முதலாக திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ‘மோகினி’, ‘நாம்’, ‘மருத நாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து வி.என்.ஜானகியுடன் ஜோடியாக நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும்போதுதான் வி.என்.ஜானகி எம்.ஜி.ஆரை தான் விரும்புவதாக அவரிடமே சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
எம்.ஜி.ஆர் சட்டென முடிவெடுக்காமல் தனது தாயார், மற்றும் தனது மனைவி சதானந்தவதியிடம் இது பற்றிச் சொல்லி அவர்கள் அனுமதியுடன்தான் ஜானகியை 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜானகியுடனான இந்தத் திருமணத்திற்குப் பிறகு 1968-ல் சதானந்தாவதி அம்மா மரணமடையும்வரையிலும் ஜானகி அம்மையாரும், அவரும் ஒரே வீட்டில்தான் எம்.ஜி.ஆருடன் வசித்து வந்தார்கள்.
தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே ஜானகியம்மா தானே விரும்பி எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். மிச்சமிருக்கும் இந்தக் தம்பதிகளின் காதல் கதை உலகமறிந்தது..!
3. சிவாஜிகணேசன்-ரத்னமாலா
இவருமா..? இருக்காது.. இல்லைவே இல்லை என்கிற நம்பிக்கையோடுதான் நானும் பல ஆண்டுகளாக இருந்து வந்தேன். ஆனால் சினிமா உலகத்திற்குள் கால் வைத்த பின்புதான் எனது அந்த நம்பிக்கை புஸ்ஸானது.
ஆம்.. நடிகர் திலகத்திற்கும் இன்னொரு குடும்பம் உண்டு. அவர் ரத்னமாலா என்னும் நடிகை. இவரும் ஆரம்பக் காலச் சினிமாக்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் இருந்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக நாடக வாழ்க்கையிலேயே ரத்னமாலா, சிவாஜிக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.
வெகு நாட்களாக சினிமாவுலகத்தில் மிக நெருங்கியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இரகசியத்தை வெளியிட்டவர் எம்.ஜி.ஆர்தான்.
4. எஸ்.எஸ்.ராஜேந்திரன் – விஜயகுமாரி
சிவாஜியைவிடவும் தெள்ளுத் தமிழைத் தீயாய் உச்சரிக்கும் பாங்கு உடையவர் என்று திரையுலகில் பாராட்டைப் பெற்றவர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்களால் பெண் என்பவளுக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட கண்ணகிக்கு உருவகம் கொடுத்தவர் விஜயகுமாரி.
அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு பங்கஜம் என்ற மனைவியும், மகன்களும் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து தனக்கு ஜோடியாக நடித்து வந்த விஜயகுமாரியை தீவிரமாக விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். எல்லாரும் செய்றதுதான..? நம்ம என்ன தப்பாவா பேசிட்டோம்.. செஞ்சிட்டோம் என்று நினைத்து விஜயகுமாரியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனத்தைத் துவக்கினார் எஸ்.எஸ்.ஆர்.
எல்டாம்ஸ் சாலை வீட்டில் முதல் மாடியில் முதல் மனைவியும், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியுடனும் குடியும், குடித்தனமுமாக இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
எந்த அளவுக்கு நடிப்பையும், அரசியலையும் விரும்பினாரோ அதே அளவுக்கு மதுவையும் விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். பல தலைவர்களிடம் சொல்லியும், பேசியும் பஞ்சாயத்து செய்தும் பலனளிக்காமல் போக, விஜயகுமாரி தன் மகன் ரவியோடு எஸ்.எஸ்.ஆரிடம் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. இன்றுவரையிலும் தொடர்பில்லாமல் தனித்துதான் இருக்கிறார் விஜயகுமாரி.
அவர் விலகிச் சென்ற சிறிது காலத்திலேயே தாமரைச்செல்வி என்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக்கிக் கொண்டு எல்டாம்ஸ் சாலை வீட்டின் மூன்றாவது மாடியில் குடி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். இத்தோடு இவரது காதல் முடிந்தது.
5. ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி
“என் சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பெண்களையாவது நான் பார்த்திருப்பேன்” என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொண்ட காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கையே இந்த விஷயத்தில் ஒரு பாடம்தான்.
ஜெமினியின் முதல் மாட்டுதல் புஷ்பவல்லியிடம்தான். ஜெமினி ஹீரோவாக அறிமுகமான ‘மிஸ் மாலினி’யின் ஹீரோயின் புஷ்பவல்லிதான். ஜெமினி ஸ்டூடியோவில் கேரக்டருக்குத் தகுந்தாற்போன்ற நடிகர்-நடிகையரைத் தேர்வு செய்யும் பொறுப்பான பதவியில் இருந்த ஜெமினியின் கண்களில் தானாக விழுந்தவர் புஷ்பவல்லி. இத்தனைக்கும் புஷ்பவல்லியின் தங்கையான சூர்யபிரபாதான் ஜெமினிக்கு முதல் பிரெண்டு. இந்த பிரெண்டு மூலமாகவே புஷ்பவல்லியும் பிரெண்டாக நட்பு ஓரளவோடு நின்றிருந்தது..!
இடையில் புஷ்பவல்லிக்கு வேறொருவருடன் திருமணமாகி ஒரு பையனும் இருந்த நிலையில்தான் மீண்டும் ஒரு முறை யதேச்சையாக ஜெமினிகணேசனை பீச்சில் சந்திக்கப் போய் வினையாகிவிட்டது. பரவுவதற்கு நல்லதொரு கொடி மரம் தேடிக் கொண்டிருந்த புஷ்பவல்லி, ஜெமினியை வலுக்கட்டாயமாக நெருங்க.. ஜெமினி சரண்டரானார்.
அடுத்த வருடமே பானுரேகா என்னும் ரேகாவும், தொடர்ந்து ராதா என்ற பெண்ணுமாக அவசரமாகப் பிறக்க.. தொடர்ந்து அவர்களது பிரிவும் அவசரமாகவே இருந்துவிட்டது. காரணம் ஈகோதான்.
சிறிய இடைவெளியாக இருந்த இந்த விஷயத்தை மீளவே முடியாதபடிக்கு மாற்றியது சாவித்திரியின் வருகை. ஹீரோயினாக ஜெமினியுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடி போட்ட சாவித்திரியிடம், ஜெமினியின் நட்பு குறித்து ஸ்டூடியோவுக்கே நேரில் போய் புஷ்பவல்லி வாய்ச்சண்டையெல்லாம் போட்டதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இதை ஒரு காரணமாக வைத்து ஜெமினியை விட்டு முற்றிலுமாக விலகினார் புஷ்பவல்லி..!
இந்த உறவு பத்திரிகைகளில் லேசுபாசாக மட்டுமே கிண்டி கிளறி எழுதிக் கொண்டிருந்த நிலையில், பானுரேகா அசத்தல் ரேகாவாக ஹிந்தியில் கொடி கட்டிப் பறந்தபோது, தன்னுடைய தந்தை ஜெமினிகணேசன்தான் என்று பேட்டியளித்த பின்புதான் எல்லாமே வெட்டவெளி்ச்சமானது.
இத்தனைக்கும் ஜெமினியும், புஷ்பவல்லியும் முறைப்படி திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்..!
6. ஜெமினி கணேசன் – சாவித்திரி
திரையுலகின் பொருத்தமான ஜோடிகள் என்று தென்னிந்திய திரையுலகமே போற்றிப் புகழும் வண்ணம் வாழ்ந்த காதல் ஜோடிகள் இவர்கள்..!
ஆந்திராவில் பிறந்து வளர்ந்து 1955-ல் எல்.வி.பிரசாத் இயக்கம் செய்த ‘மிஸ்ஸியம்மா’வில் ஹீரோயினாக அறிமுகமான சாவித்திரி அந்தப் படம் முடிவடைவதற்குள் தன்னுடன் இணைந்து நடித்த ஜெமினிகணேசனிடம் தனது மனதைப் பறி கொடுத்தார்.
ஏற்கெனவே ‘மனம் போல மாங்கல்யம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்து அதிலேயே இவர்களது காதல் ஆரம்பித்து எல்.எஸ்.எஸ். பேருந்து போல் நான் ஸ்டாப்பாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போதும் வளர்ந்து கொண்டேயிருந்தது. புஷ்பவல்லி மீதான உறவில் ஜெமினிக்கு இருந்த வருத்தத்தையெல்லாம் சர்ப் பவுடர் போட்டுத் துடைத்தது சாவித்திரியின் நட்புதான்.
சாவித்திரி தனது அப்பாவின் தொல்லை தாங்காமல் ஒரு இரவு நேரத்தில் ஜெமினியின் வீட்டிற்கே சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ள. இப்படித்தான் இந்தத் தெய்வீகக் காதல் தம்பதிகளின் காதல் திருமணம் நடந்தேறியது.
அப்போது ஜெமினிகணேசனுக்கு பாப்ஜியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும், புஷ்பவல்லியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும் காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று இருவரின் கண்ணையும் மறைத்தது..! திருமணம் செய்தார்கள்..பின் பிரிந்தும் விட்டார்கள்.
9. ரவிச்சந்திரன் – ஷீலா
ஒரு சின்ன ஸ்லிப்தான் வாழ்க்கையை திசை திருப்பியது என்பார்கள். அது இவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. பாசம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக டி.ஆர்.ராமண்ணாவால் அறிமுகப்படுத்த ஷீலா, ஜோஸப் தளியத்தால் மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் மலையாள உலகின் உச்சத்திற்கே போயிருந்தார். அந்தச் சூழலில் அவ்வப்போதுதான் தமிழ்ப் படங்களில் தலை காட்டுவார்.
அப்படி நடிக்கத் துவங்கிய இவர்களது நட்பு மலையாளப் படங்களுக்கு ரவிச்சந்திரனை சிபாரிசு செய்யும் அளவுக்கு ஷீலாவை கொண்டு சென்றது..! ரவிச்சந்திரனுக்கு அப்போது விமலா என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தது..
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ஷீலா முறைப்படி டைவர்ஸ் செய்து கொண்டு மகனுடன் வெளியேற.. ரவிச்சந்திரன் மறுபடியும் தனது முதல் மனைவியுடன் இணைந்து கொண்டார்.
10. விஜயகுமார் – மஞ்சுளா
தமிழ்ச் சினிமாவில் மேற்கண்ட ஜோடிகளைப் போல திருமணம் செய்து கொண்டு இன்றுவரையிலும் ஒற்றுமையாக இருப்பவர்கள் விஜயகுமார்-மஞ்சுளா ஜோடிதான்.
எம்.ஜி.ஆர். படவுலகில் இருந்து விடுபட்டு கோட்டையில் முதலமைச்சராக அமர்ந்த பிறகு அடுத்த நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவுடன் எடுத்த எடுப்பிலேயே ஜோடி போட்டுவிடவில்லை விஜயகுமார். இரண்டாவது கதாநாயகன், ஹீரோவின் நண்பன் என்றுதான் பல படங்களில் மஞ்சுளாவுடன் நடித்து வந்தார்.
இந்த இருவரும் அல்லி தர்பார் படத்தில்தான் முதலில் ஜோடியாக நடித்தார்கள். பின்பு சங்கர், சலீம், சைமன், குப்பத்து ராஜா என்று வரிசை தொடர்ந்து போது தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் வாழ்ந்து வந்தார் விஜயகுமார்.
ஸ்ரீப்ரியா, சுஜாதா, லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீதேவி என்று தனக்குப் போட்டிக்கு ஆட்கள் நிறைய வந்துவிட்டதால் மஞ்சுளாவும் தன்னுடைய ரிட்டையர்டுமெண்ட் பற்றி யோசித்து வந்தவேளையில் விஜயகுமார் மஞ்சுளாவின் தனது காதலைத் தெரிவிக்க, அவர் “எங்கம்மாகிட்ட வந்து பேசுங்க..” என்று பொறுப்பாகப் பதில் சொன்னாராம்.
தனது முதல் மனைவியின் ஒப்புதலுடன்தான் மஞ்சுளாவை திருமணம் செய்தார் விஜயகுமார்.
11. பாலுமகேந்திரா – ஷோபா – மெளனிகா
சாவித்திரிக்குப் பிறகு நடிப்பு என்பதற்கு அடையாளம் இவர்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டவர் ஷோபா. நவீன தமிழ்ச் சினிமாவின் துவக்கப் புள்ளியில்தான் இவரும் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘கோகிலா’, ‘அழியாத கோலங்கள்’, ‘மூடுபனி,’ ஆகிய படங்களில் நடித்த ஷோபா, ‘பசி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற ஷோபா, ஏன் இந்த முட்டாள்தனத்தை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிர்ஸ!
பாலுமகேந்திராவுடனான காதலை வளர்த்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷோபா, பாலுமகேந்திராவின் முதல் மனைவி அகிலா தன்னை ஏற்றுக் கொள்ளாத சோகத்திலும், இது தொடர்பாக பாலுமகேந்திராவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையிலும் சட்டென்று எடுத்த ஒரு முடிவால் தமிழ்த் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகையை இழந்துவிட்டது.
‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் செய்துவைத்த மெளனிகாவுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டு. இப்போது துணைவியாகவும் ஆக்கிக் கொண்டார் ..அவர் இறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள்..!
கமல்ஹாசன்-வாணி என்கிற நட்சத்திர ஜோடியின் திருமணம் சட்டென்று நடந்து முடிந்ததா? அல்லது நீண்ட நாள் காதலின் முடிவுதானா? என்பது பற்றி இப்போது பேச்சில்லை. ஆனால் சர்ச்சைகள் இருந்ததுண்டு. இதுவும் நன்றாகத்தான் இருந்தது பத்தாண்டுகள் வரையிலும்..
திடீரென்று கமல்ஹாசன், “சரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நான்தான்” என்று அறிவிக்கும்வரையில், இந்தத் தம்பதிகளின் உட்பூசலும், பிரச்சினையும் வெளியில் வரவே இல்லை.
செய்தி வந்த பின்பு நடந்த சமரசப் பேச்சுக்களும், சில அடிதடிகளும் எந்தவிதத்திலும் வாணிக்கு உதவாமல் போனது அவரது துரதிருஷ்டம்தான்.
கர்ப்பமாக இருந்த சரிகாவை பெங்களூரில் வழிமறித்த கூலிப்படைகளிடம் இருந்து காப்பாற்ற, நடுரோட்டில் டாக்ஸியில் இருந்து ரிக்ஷா வண்டிக்கு மாற்றியனுப்பி சரிகாவை பாதுகாக்கும் அளவுக்கு ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய கமலின் அப்போதைய நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான்.
ஆனால் இந்த அடிதடியே கமலுக்குள் வைராக்கியத்தை விதைத்துவிட, “பாத்ரூமில் தாலியைக் கழட்டி வீசியெறிந்து அலட்சியப்படுத்தும் இவருடன் நான் எப்படி வாழ்வது?” என்ற அக்மார்க் தமிழ் கணவனின் பேச்சைப் போன்ற கமல் தரப்பு நியாயத்தைக் கேட்டு பேஸ்த்தடித்துப் போனது கோடம்பாக்கம்.
கடைசியில், பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டுடன் ‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடிக்க சென்னைக்கு வந்து இங்கேயே மருமகளாக செட்டிலான வாணி கமல்ஹாசன், வாணி கணபதியாக மீண்டும் உருமாறி தனது சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.
இந்தக் காதல் நீடித்தது பத்தாண்டுகள் என்றால் அடுத்து சரிகாவுடனான கமலஹாசனின் காதலும் முறிந்ததை விதி என்று சொல்லலாமா..? யாராலும் நம்ப முடியவில்லை. அதிலும் ஆழ்வார்பேட்டை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு ஆபத்தான நிலைமையில் இருந்த சரிகாவை கண்ணும், கருத்துமாக கவனித்து வந்தார் கமல்ஹாசன்.
சரிகா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி மூன்று மாதங்களுக்குள் அதே ஆழ்வார்ப்பேட்டை தெருக்களில் ‘குமுதம்’ பத்திரிகை ஒட்டியிருந்த “சரிகாவிடமிருந்து பிரிந்துவிட்டேன்” என்று அறிவித்தார் கமல்.
இந்த முறிவுக்குப் பின்பு இடையில் ஒரு மெல்லிய தென்றலாய் புகுந்தார் இடையழகி சிம்ரன். ‘விருமாண்டி