8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மிஷ்கினுடன் இணையும் பிரசன்னா
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு நரேன், விஜயலட்சுமி, அஷ்மல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘அஞ்சாதே’. இப்படத்தில் பிரசன்னா வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் பிரசன்னா வில்லனாகவே நடிக்கவிருக்கிறாராம். ‘துப்பறிவாளன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷால், ராகுல் பிரீத் சிங் நடிப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தில் அரோல் குரலி இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பாத விஜய் சேதுபதியின் நேர்மை
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவருடைய எதார்த்தமான நடிப்பு ஒவ்வொருவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டது கிடையாது.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய் சேதுபதியை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியானது. அதாவது, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்ததாக செய்தி வெளிவந்தது.
இதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ‘இந்த செய்தி உண்மையல்ல... மன்னிக்கவும்’ என்று விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு பைசாகூட செலவழிக்காமல் வீண் விளம்பரங்கள் தேடிக்கொள்ளும் சில நடிகர்கள் மத்தியில், விஜய் சேதுபதியின் நேர்மையான குணம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.
அஜித்தால் அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அப்புக்குட்டி. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், அஜித்துடன் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து கிராமத்து வேடங்களில், ஒரே பாணியில் நடித்துக் கொண்டிருந்த அப்புக்குட்டியின் திறமையை உணர்ந்த அஜித், அவருக்காக தனியாக போட்டோஷுட் ஒன்றை நடத்தி, அவரை விதவிதமான கோணங்களில் படம் பிடித்து அவர் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு உயர உதவியாக இருந்தார்.
இந்நிலையில், தற்போது அஜித் - சிறுத்தை சிவா இணைந்திருக்கும் புதிய படத்தில் அப்புக்குட்டி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது. இதற்காக விரைவில் அப்புக்குட்டி அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜித் நடிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட உள்ளது. இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
சுந்தர் சி.யின் சங்கமித்ராவில் ஜெயம் ரவி...?
சங்கமித்ராவின் பட்ஜெட் 250 கோடிகள் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. இதில் மகேஷ்பாபு நடிப்பார் என்றனர். பிறகு சூர்யா. அதன் பிறகு விஜய். இவர்கள் அனைவரும் சங்கமித்ராவில் நடிப்பதை மறுத்த நிலையில், ஜெயம் ரவியின் பெயர் அடிபடுகிறது.
இந்த மெகா பட்ஜெட் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த வருட இறுதிக்குள் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சங்கமித்ராவில் ஜெயம் ரவி நடிப்பதை இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மறுக்கவோ உறுதி செய்யவோ இல்லை