ராதிகா ஆப்தே ஜோடியாக நடித்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் வருகிற 22-ந்தேதி ரிலீசாக இருக்கிறது, ‘கபாலி’ படம். ரஜினிகாந்தின் 41-வருட சினிமா வாழ்க்கையில் இது அவரது 159-வது படமாக வருகிறது. இதில் அவர் தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பு ‘பாட்ஷா’ படத்தில் தாதாவாக நடித்து இருந்தார். முந்தைய படங்களான சிவாஜி, எந்திரன், லிங்கா படங்களுக்கு இல்லாத பரபரப்பும் வியாபாரமும் ‘கபாலி’ படத்துக்கு இருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. பாரீசில் 2 ஆயிரத்து 800 இருக்கைகள் கொண்ட உலக புகழ் பெற்ற ரெக்ஸ் திரையரங்கில் வருகிற 21-ந்தேதி சிறப்பு காட்சியாக திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் ‘கபாலி.’ விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையையும் கபாலி பெற்று இருக்கிறது.
‘கபாலி’யில் ரஜினிகாந்த் மூன்று வித தோற்றங்களில் வருகிறார். மலேசிய ரப்பர் தோட்டங்களில் உள்ளூர் முதலாளிகளால் அடிமைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அல்லல்படும் அப்பாவி தமிழர்களை தாதாவான ரஜினி எப்படி மீட்கிறார் என்பதே கதை.
இந்த படம் 22-ந்தேதி தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவதால் ஏற்கனவே இந்த மாதம் இறுதியில் திரையிட திட்டமிட்டு இருந்த தனுசின் ‘தொடரி’, திரிஷா நடித்துள்ள ‘நாயகி’ படங்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
எஸ்.வி.சேகரின் ‘மணல் கயிறு இரண்டாம் பாகம்,’ கவுண்டமனி கதாநாயகனாக நடித்துள்ள ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது,’ ராஜ்கமல் நடித்துள்ள ‘சண்டிக்குதிரை,’ ‘வாகா’ உள்பட மேலும் 8 படங்களின் ரிலீஸ் தேதிகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சும்மாவே ஆடுவோம், ஒன்பதிலிருந்து பத்துவரை, கிழக்கு சந்து, பிரபாஸ் பாகுபலி உள்பட சில படங்கள் கபாலி வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக நாளை (15-ந்தேதி) திரைக்கு வருகின்றன.
கபாலி படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசின் கேளிக்கை வரிவிலக்குக்கு இந்த படம் தகுதி பெற்றுள்ளது.
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி
ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதனால் இந்தியில் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார். இங்கு 2 இந்தி படங்களில் அவர் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.
டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-
“நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. கதைகள் தேர்விலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடித்தேன். நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.
எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால் இப்போது இந்தியில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வந்துள்ளன. இதன் மூலம் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன்.
இந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஆனாலும் நான் எனக்குரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு போராடுகிறேன். இந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.”
கொடி படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ்?
‘காக்கிசட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கொடி’. இப்படத்தின படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ‘கபாலி’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அண்ணன்-தம்பிகளாக நடித்து வந்ததாக கூறப்பட்டு வந்தநிலையில், தற்போது அப்பா-மகனாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குவினர் யாரும் உறுதி செய்யவில்லை.
இப்படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷின் காட்பாதராக இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.
அப்பா படத்தை பார்க்க பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பள்ளி நிர்வாகம்
நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அப்பா’. அப்பா, மகன்-மகள்களின் புரிதல் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்பதை இப்படத்தில் சொல்லியிருந்தார் சமுத்திரகனி. இப்படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையம் உள்ள தூய திரேசாள் முதனிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் ‘அப்பா’ படம் பார்க்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
“அப்பா படம் ஒவ்வொரு அப்பாவும் தவறாமல் அவசியம் பார்க்க வேண்டிய படம். அப்பா-பிள்ளைகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாழ்க்கைக்கான பாடமாக அமைந்துள்ளது.
இந்த படத்தை பார்க்க பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக சலுகை கட்டணம் வழங்க கோபி வள்ளி திரையரங்கம் முடிவுசெய்துள்ளது. வியாழக்கிழமை அன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பா படத்தை பார்க்க வேண்டும்” என பெற்றோர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சலுகை கட்டணத்துக்கான அடையாள அட்டையை குழந்தைகளிடம் கொடுத்தும் அனுப்பியுள்ளார். அந்த திரைப்படம் பார்த்த பள்ளி குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பள்ளியின் கல்வி வளர்ச்சி விழாவில் பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
ஒரு பள்ளி நிர்வாகமே ‘அப்பா’ படத்தை பார்க்க குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வலியுறுத்தியுள்ளது சமுத்திரகனியை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக அக்கறையுள்ள ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவும் அவரிடம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ‘அப்பா’ படத்தை பார்க்க வலியுறுத்திய பள்ளி நிர்வாகத்திற்கும் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் ரெமோ ரிலீஸ் தேதி வெளியானது
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெண் வேடத்திலும் நடித்துள்ளார். மேலும், பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, இப்படம் வருகிற அக்டோபர் 7-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை 24AM Studios நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலமாக கீர்த்திசுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் தற்போது மாவீரன் கிட்டுவானார்
விஷால்-ஸ்ரீதிவ்யா-சுசீந்திரன் கூட்டணியில் ‘ஜீவா’ படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். அது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இவர்கள் கூட்டணியில் உருவான படத்திற்கு தலைப்பு வெளியிட்டுள்ளனர்.
பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்திருக்கும் இப்படத்தின் தலைப்பை ‘மாவீரன் கிட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டுள்ளார். தலைப்பை வைத்து பார்க்கும்போது இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.