ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘புருஸ்லீ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்.
சமீபகாலமாக சிம்பு பாடும் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த குத்துப்பாடலும் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
‘புருஸ்லீ’ என்று இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவின் பெயரை வைத்திருந்தாலும், இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகி வருகிறது. பாலசரவணன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் இப்படத்தின் காமெடிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கற்பழிப்பு பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவிக்க சல்மான்கான் மறுப்பு
நடிகர் சல்மான்கான் மல்யுத்ததை மையப்படுத்திய ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இந்த பயிற்சியின் போது கற்பழிக்கப்பட்ட பெண் அடைந்த வேதனையை உணர்ந்ததாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மராட்டிய மாநில பெண்கள் ஆணையம் சல்மான்கான் வருகிற 29–ந்தேதி பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சல்மான்கானுக்கு எதிராக போராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து அவரது தந்தையும், சினிமா கதாசிரியருமான சலீம்கான் மன்னிப்பு கேட்டார். சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான் கூறும்போது, “சல்மான்கான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. கழுதைபோல் உழைக் கிறேன் என்று சொல்வோம் அல்லவா? அதுபோல் சொல்லி இருக்கிறார்” என்றார்.
இதற்கிடையே மும்பை விமான நிலையம் வந்த சல்மான்கானிடம் நிருபர்கள் இதுகுறித்து கருத்து கேட்க முயன்றனர். ஆனால் சல்மான்கான் மன்னிப்பு கேட்கவோ, கருத்து கூறவோ மறுத்து விட்டார். எந்த பதிலும கூறாமல் சென்று விட்டார்.
ரஜினிகாந்தின் கபாலி படம் தணிக்கைக்கு தயாராகிறது
ஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து குரல்பதிவு, இசைசேர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் இரவு-பகலாக நடக்கின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே இரு வாரங்கள் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.
‘கபாலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் மலேசிய நடிகர்கள் அதிகம் பேர் நடித்து உள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துள்ளது. அந்த நாட்டில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவேதான் மலாய் மொழியிலும் படத்தை திரைக்கு கொண்டு வருகின்றனர்.
கபாலி படத்தின் தமிழ் பதிப்புக்கான தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே அடுத்த வாரம் படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலாய் மொழிகளில் கபாலி படம் தணிக்கை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தெலுங்கு, இந்தி, மலாய் மொழி பதிப்புகளுக்கான தொழில்நுட்ப பணிகள் முடியாததால் இரண்டு வாரம் தள்ளிப்போகிறது. ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து இந்த மாதம் இறுதியில் சென்னை திரும்ப இருப்பதாகவும் அவர் வந்த பிறகு கபாலி வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜூலை 15-ந் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘கபாலி’ பாடல்கள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடல்களில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்,’ ‘உலகம் ஒருவனுக்கா உழைப்பவனுக்கா விடை தருவான் கபாலிடா,’ ‘நாங்க எங்க பிறந்தா அட உனக்கென்ன போடா தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்தான்டா,’ ‘மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது,’ போன்ற வரிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.
இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் வருகிறார். வெளிநாட்டில் வில்லன்களால் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறும் தமிழர்களை மீட்க அவர் நடத்தும் அதிரடி போராட்டமே படத்தின் கதை. இந்த படத்தை பா.ரஞ்சித் டைரக்டு செய்துள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
யாரையும் பின்பற்றாமல் எனக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நடிக்கவிருக்கிறேன்: மெட்ரோ சிரிஷ் பேட்டி
விதார்த் நடிப்பில் வெளிவந்த ‘ஆள்’ படத்தை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது ‘மெட்ரோ’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சிரிஷ் என்பவர் கதாநாயகனாக சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். பாபி சிம்ஹா, டாக்டர் மாயா, சென்ட்ராயன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
செயின் பறிப்பு சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘மெட்ரோ’ படத்தில் அறிமுகமாகியிருக்கும் சிரிஷ், படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறும்போது, “எனக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும் போது கலைராணி மேடத்திடம் நடிப்பு, பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஜெயந்தி மேடத்திடம் நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.
‘ஆள்’ படம் முடிவடையும் தருவாயில் இருந்தே எனக்கு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனைத் தெரியும். அதற்குப் பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் ‘மெட்ரோ’ கதையை தயார் செய்தவுடன் அதற்கான ஆடிசனில் கலந்து கொண்டு இக்கதையில் நடிக்க தேர்வானேன். இப்படத்தின் கதையை முழுமையாக தெரிந்து கொண்டு மீண்டும் கலைராணி மேடத்திடம் நடிப்புக்கு பயிற்சி எடுத்தேன்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கு கேமரா முன்னால் நடிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், படக்குழுவினர் தான் முழுக்க எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அதற்கு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் அவர்கள் யாரையும் பின்பற்றாமல் எனக்கு என்ன வருகிறதோ அதற்கு ஏற்றார் போல் கதையைத் தேர்வு செய்து நடிக்கத்தான் ஆசை.
இப்போது ஒரு ஹாரர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து முடிவானவுடன் முறையாக படக்குழு அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது” என்று சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார் சிரிஷ்
கொளஞ்சி டீசரை வெளியிடும் சிம்பு
சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கும் புதிய படம் ‘கொளஞ்சி’. இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘கொளஞ்சி’ என்ற 13-வது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
சிறுவனை பற்றிய கதை என்றாலும், இப்படம் சிறுவர் படமில்லை என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், ‘கொளஞ்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். இந்த டீசரை நடிகர் சிம்பு வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான நவீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் சந்தானம்
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நாளை இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். சந்தானத்தின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது இரட்டை விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
திகில் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ளார். சந்தானம், ஷான்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. எஸ்.தமன் இசையமைத்துள்ளர்.