ஒரு நாள் கூத்து - திரைவிமர்சனம்
11 Jun,2016
ஒரு நாள் கூத்து - திரைவிமர்சனம்
கென்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ, ரித்விகா, நிவேதா, பால சரவணன், கருணாகரன், சார்லி மற்றும் பலர் நடித்த படம் தான் ஒரு நாள் கூத்து திரைப்படம்.
படத்தின் பெயரிலையே படத்திற்கான கதை கருவை வைத்திருக்கிறார்கள். ஒரு நாள் கூத்து, திருமணத்தை பற்றிய கதை. திருமணம் ஆகாத மூன்று பெண்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற அந்த ஒரு நாள் கூத்து எப்படி நடக்கிறது என்பதைத் தான் இயக்குனர் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் தினேஷும், நிவேதாவும் காதலிக்கிறார்கள். நன்றாக காதலிக்கும் இவர்கள் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தவுடன் தினேஷ் தன் குடும்பம் செட்டில் ஆகாமல் திருமணம் செய்ய மாட்டேன் என பின்வாங்குகிறார். இவர்களுக்கு நண்பராக வரும் பால சரவணன் படத்தின் நகைச்சுவைக்கும் கதைக்கும் பக்கபலமாக இருக்கிறார்.
மியா ஜார்ஜ் தனது தந்தை எப்பொழுது தன்னை திருமணம் செய்து வைப்பார் என காத்திருக்கிறார். வாத்தியாரான மியா ஜார்ஜின் தந்தை நல்ல வசதியான மாப்பிள்ளைக்காக மகளை கத்திருக்க வைக்கிறார்.
மீடியாவில் வேலை செய்வதால் மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கிறார் ரித்விகா. 28 வயதாகியும் தங்கை ரித்விகாவுக்கு திருமணமாகமல் இருப்பதால் காத்திருக்கும் அண்ணன் கருணாகரன்.
இப்படி மூன்று விதமான பெண்களின் அந்த ஒரு நாள் கூத்து, திருமணம் எப்படி நடக்கிறது என்பதை கூறியிருப்பது தான் படத்தின் மீதி கதை.
அட்டக்கத்தி தினேஷ் இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். வழக்கமாக வரும் கெட்டப்பை விட இந்த படத்தில் நல்ல புத்துணர்ச்சியாக வந்திருக்கிறார்.
மியா ஜார்ஜுக்கு படத்தில் அதிகமான வசனங்கள் இல்லையென்றாலும், தன்னுடைய உடல் பாவனை, முகம் நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார். கருணாகரன் இந்த படத்தில் சீரியசான வேடத்தில் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் தன்னுடைய அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார் சார்லி.
படத்தின் முதல் பாதியில் இருக்கும் வேகமும், கதையின் நகர்வும், இரண்டாவது பாதியில் இல்லாமல் போனது படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது. மூன்று கதைகள் வந்தால் அந்த மூன்றுக்கும் ஒரு டிவிஸ்ட் வைத்து ஏதாவது ஒரு தொடர்பை வைப்பது தான் பல படங்களின் கிளைமாக்ஸ். இந்த முயற்சி இந்த படத்தில் ரசிக்கும்படியாக இல்லை.
மூன்று கதைகளையும் ஒளிப்பதிவின் மூலம் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல். இந்த படத்தின் இசை படத்தின் பலம். கைதேர்ந்த அனுபவ இசையமைப்பளரை போல் இசையமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிராபகர். “அடியே அழகே” என்ற பாடல் அனைவரையும் முனுமுனுக்க வைக்கிறது.
மொத்தத்தில் ஒரு நாள் கூத்து ஆடம்பரம் இல்லாத திருமணம்.