வெற்றிவேல் திரைவிமர்சனம்
.
சசிக்குமார், அனந்த் நாக் ,மியா ஜார்ஜ் ,நிகிலாவிமல் , வர்ஷா... உள்ளிட்டோர் இணைந்து நடித்து டி.இமான் இசையில் , புதியவர் வசந்த மணி இயக்கத்தில் லைக்கா புரடக்ஷன்ஸ் வெளியிட ., ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படமே வெற்றிவேல் .
கதைப்படி ., தஞ்சை மாவட்டத்து கிராமத்தைச் சார்ந்த வெற்றிவேல் - சசிக்குமாரும் , சரவணன் - அனந்த்நாக்கும் அண்ணன்-தம்பிகள் .வாத்தியார் இளவரசு வீட்டு வாரிசுகள் . தம்பியின் காதலுக்காக, ஊர் பெரிய மனிதர் பிரபுவின் பெண்ணைத் தூக்க களம் இறங்கும் வெற்றி - சசி., அங்கு பெண் மாறியதால் தன் காதலை மறந்து வேறு ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டிய சூழலில் சிக்குகிறார்! அதனால் , அவர் அனுபவிக்கும் பாசப்போராட்டமும் ,மனப் போராட்டமும், காதல் போராட்டமும் தான் வெற்றிவேல் படத்தின் கரு , கதை , களம் காட்சிப்படுத்தல் எல்லாம் ! இக்கதையினூடே ., பிரபு - விஜி சந்திரசேகரின் அண்ணன் - தங்கை விரோதம் , குரோதத்தையும் கலந்து கட்டி வெற்றி வேலை - வீரவேலாக்க முயன்று அதில் பாதி வெற்றியும் ,பழைய பாணி கதை , காட்சியமைபபு களால தோல்வியும் கண்டிருக்கின்றது நடிகர் சசிக்குமார் , இயக்குனர் வசந்த மணி கூட்டணி.
படிக்காத அறிவாளியாக சசிக்குமார் ., வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார்.
அவங்கள்ளம் பசங்களுக்கு பாடம் சொல்லி வளர்க்கிறாங்க .. நான் பயிறுக்கு உரம் போட்டு வளர்க் கிறேன் ...நானும் படிக்கலைன்னாலும் வாத்தியார் தான் ...
அவள் என் காலை மிதித்து காதலை பதித்து விட்டாள் ... எனும் பன்ச் டயலாக்குகளுடன் தன் பாணியில் கிராமத்தானாக வழிந்தபடி ., சசிக்குமார் வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார்.
உங்களுக்கு மண்ணை பத்தி டீடெயில் வேணுமா ., இல்லை என்னைப் பற்றி டீடெயில் வேண்டுமா ? என எடுத்த எடுப்பிலேயே பளிச் என கேட்டு சசியின் காதலில் விழும் ஓருநாயகி ஜனனியாக, மியா ஜார்ஜ் , மற்றொரு நாயகி நிகிலா விமல் , வர்ஷா உள்ளிட்ட நாயகியர் மூவரும் கிளாமர் கல்கண்டு சேர்த்து செய்த ஹோம்லி குல்கந்து . ரசிகனுக்கு செம விருந்து!
இது ,மொபைல்ல பேசுற விஷயமல்ல ... முகத்தைப் பார்த்து பேசுற விஷயம் என வெட்கப்படும் காட்சிகளில் ... ஜனனி - மியா ஜார்ஜ்யாக வரும் நாயகி நச் - டச் ! அதே மாதிரி அப்பனை பறிகொடுத்து ,யார் என்றே தெரியாதவனுக்கு கழுத்து நீட்டும் நாயகி நிகிலா விமலும், பிரபுவின் பெண்ணாக சசியின் தம்பி சரவணன் - அனந்த்நாக்கின் காதலியாக வரும் நாயகி வர்ஷாவும் கூட நடிப்பிலும் , இளமை துடிப்பிலும் சபாஷ் வாங்கி விடுகின்றனர்.
"எந்த ஜாதிக்காரனும் வேற மதம் மாறலாம் ... வேற ஜாதி மாற முடியுமா .? எனவேறு ஜாதி இளவரசு தன் மகனுக்காக பெண் கேட்டு வரும் போது பக்குவமாக பேசி அனுப்பும் நடிகர்பிரபு ஊர் பெரிய மனிதராக கச்சிதம். இளம் மனைவியை சூரியன், சந்திரன் , குரு , ராகு உள்ளிட்டவர்களிடமிருந்து பாது காக்கபடாத பாடுபடும் ,ஒத்தாசை -தம்பி ராமைய்யா , நாடோடிகள் ப்ளாஷ்பேக்குடன் நண்பர்களாக வரும் சமுத்திரகனி , விஜய் வசந்த், பாண்டி உள்ளிட்டவர்களும் இளவரசு , ரேணுகா ,விஜி சந்திரசேகர் அந்த சசியின் தம்பி சரவணன்கேரக்டரில் வரும் அனந்த் நாக் உள்ளிட்ட எல்லோரும் கச்சிதமோ கச்சி தமாக நடித்துள்ளனர்.
சசிக்குமார் , தம்பி ராமைய்யா இருவரும் நாயகி மியாவிடம் கடலை போட கேட்டு செல்லும் இடமும் , ஜோசியர் ஜெயச்ச ந்திரன் ௐத்தாசை - தம்பி ராமைய்யா ஜோசியம் ஹாஸ்யம் உள்ளிட்டவைகளும் டபுள் மீனிங் டமாக்கா டயலாக்குகள்.
அதே மாதிரி .,
மைதா மாவுல மன்மத வித்தை காண்பிக்கிறான் சார் ... என தம்பி ராமைய்யா வின்சவுண்டு... அதற்கு அவர் இளம் மனைவி வாடா மல்லியின் கமெண்ட் எல்லாம் நாராசம் என்றாலும் ரசிக்கலாம்!
"ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ... " ,அடியே உன்ன பார்த்திட பார்த்திட நான் கொலஞ்சேனே ... , அதுவா , இதுவா இவ எப் பத் தான் சொல்லுவாளோ ... , உன்னப் போல ஒருத்தரை பார்த்ததே இல்ல ... "உள்ளிட்ட பாடல்கள் டி .இமானின் இசையில் எங்கோ கேட்ட ஞாபகம் என்றாலும் இதம், பதம் !
டி .இமானின் இனிய இசை மாதிரியே , எஸ்.ஆர். கதிரின் கிராமிய அழகு நிரம்பிய ஒவிய ஒளிப்பதிவு , ஏ.எல். .ரமேஷின் முன் பாதி பக்கா படத்தொகுப்பும் (பின்பாதி சற்றே இழுவை என்றாலும் ... ) உள்ளிட்ட ப்ளஸ் பாயின்ட்டுகள் வசந்த மணியின் இயக்கத்திற்கு பெரிய ப்ளஸ்!
அதே நேரம் , தஞ்சை வயலில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்கும் சசியின் படிக்காத அம்மா ரேணுகா அசால்ட்டாக மகனுக்கு வந்த கொரியரை ஸ்டெலா க பேனா பிடித்து கையெழுத்துப் போட்டு வாங்குவது., ஆரம்பம் முதல் அடிக்கடி நிகழும் தற்கொலைகள் , தற்கொலை முயற்சிகள் ... உள்ளிட்ட சோகங்களையும் பின்பாதி நீளத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வசந்த மணியின் இயக்கத்தில் வெற்றிவேல் - வித்தியாசவேல்!