விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காது ஏமாற்றம் .சினிமாவில் இஷ்டப்பட்டு நடிப்பதை காட்டிலும், கஷ்டப்பட்டு, உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே. அதில் முதன்மையானவர் நடிகர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், அந்நியன் என்று அவரின் நடிப்பு பரிமாணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமானவை. அதிலும் ஷங்கர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த 'ஐ' படத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. உடலை எந்தளவுக்கு வருத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான். உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும், மேக்கப்பிற்காகவே பல மணி நேரம் கஷ்டப்பட்டும், ஐ படத்தில் நடித்தார். இந்தப்படம் வெளியான போது விக்ரமின் உழைப்பை பார்த்த பலரும் விக்ரமிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார்கள். இந்நிலையில், 63வது தேசிய விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 'ஐ' படத்தில் நடித்த விக்ரம், தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், ஐ படத்திற்கு எந்த பிரிவிலும் விருது கிடைக்கவில்லை. இதனால், விக்ரம் உள்ளிட்ட அந்தப் படக் குழுவினர் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.