சாய் ப்ரசாந்த்தின் தற்கொலை சொல்லும் பாடம் என்ன?
15 Mar,2016
சாய் ப்ரசாந்த்தின் தற்கொலை சொல்லும் பாடம் என்ன?
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்தின் எதிர்பாராத மரணம் சக துறைசார்ந்தவர்களை உலுக்கியிருக்கிறது. குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் இந்த விரும்பத்தகாத முடிவை எடுத்திருப்பதாக அவரது கடிதம் மூலம் தெரியவந்தாலும் தொடர்ச்சியாக திரைக் கலைஞர்கள் தற்கொலை எனும் முடிவைத் தேர்ந்தெடுப்பது நாம் ஆராய வேண்டிய விஷயம். கலகலப்பான மனிதர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் இப்படிப்பட்ட துயரமான முடிவுகளைத் தேடுதல் அதிர்ச்சிகரமானது தான்.
இது இன்று நேற்றல்ல.. சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கும் சோகம்தான். சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களிலும், அள்ளித்தந்த வானம், பாய்ஸ் போன்ற படங்களில் பெரிய திரையிலும் நடித்த முரளி மோகன் வாய்ப்புகள் குறைவானதால் 2014 ல் தற்கொலை செய்துகொண்டார். கடந்த வருடம் ‘அரசி’ உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன இறுக்கம் அதிகமாகித் தற்கொலை செய்துகொண்டார்.
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்கமுடியாமல் போனதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
இவையெல்லாம் உதாரணங்களே. இன்னும் பல இளம் நடிகைகளும் இந்தப் பட்டியலில் அடக்கம். அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மக்களின் அன்றாட பொழுதுபோக்கு ஊடகமான சின்னத்திரையில் நிகழும் இத்தகைய மரணங்கள் பலரையும் கவலைக்குள்ளாக்கும்.
பணிக்குச் செல்கிற மற்றும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிற பெண்களில் பெரும்பாலானோர்க்கு இரவுகளில் பொழுதுபோக்கும் கருவியாக இருப்பவை சின்னத்திரை நிகழ்ச்சிகளும் சிலபல மெகாத்தொடர்களுமே. அவற்றில் ஏற்படும் சூழல்கள் கவனிக்கப்படுகின்றன. மெகாத்தொடர்களில் வரும் நல்ல அல்லது தீய நிகழ்வுகள் அனைத்துமே மக்களுள் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் எனும்போது ஒரு கதாபாத்திரத்தின் மரணம் சற்று உலுக்கவே செய்யும்.
தொடரும் கலைஞர்களின் அதிர்ச்சி முடிவுகள்
தமிழ் திரை உலகில் நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது 1974 லேயே விஜயஶ்ரீ மரணத்தின் மூலம் தொடங்கிவிட்டது. இவரது மரணம் தற்கொலையா என்பதிலும் இன்னும் மர்மமே நீடிக்கிறது.
80 களின் தமிழ் சினிமாவில் அழிக்கமுடியாத இடம்பிடித்த ஷோபாவின் மரணமும் ஒரு வெளிப்படாத ரகசியம். புகழின் உச்சியில் இருந்தபோதே தூக்குக் கயிற்றில் தன் இறப்பைத் தானே தேர்ந்தெடு்த்ததற்கான காரணம் இன்றுவரை யாருமே அறிந்திராதது.
தனது வசீகரப் பார்வையால் வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை சகட்டுமேனிக்குத் தன்பால் ஈர்த்த சில்க் சுமிதாவும் 80 களில் கொடிகட்டிப் பறந்தார். ஐட்டம் டான்சை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவரது தற்கொலைக்குப் பிண்ணனியில் கடன் தொல்லை, மதுப்பழக்கம் எனப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவரது கடிதம் வேறு யாரேனும் காரணமாக இருக்கலாம் என சர்ச்சையைக் கிளப்பியது. உண்மை என்னவென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
‘அவள் ஒரு தொடர்கதை’ படாபட் ஜெயலெக்ஷ்மி தூக்கமாத்திரை உட்கொண்டு மரணத்தைத் தழுவினார். 90 களில் பிரபலமாக இருந்த இந்தி நடிகை திவ்யபாரதி தனது பத்தொன்பதாவது வயதிலேயே கட்டிடத்தில் இருந்து குதித்து உயிர்விட்டார். அதற்கான காரணம் கடைசிவரை கண்டறியப்படவே இல்லை. ‘காதலர் தினம்’ குணால் குடும்பப் பிரச்சினையால் தன் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பின்னர் கொலை என சந்தேகிக்கப்பட்டு நடிகை லவீட் பாட்டியா கைது செய்யப்பட்டது தனிக்கதை. இவரோடு படங்களில் சேர்ந்து நடித்த மோனலும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி. மலையாள நடிகை மயூரி தன் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்துவிட்டதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை பிரதியுஷா தன் காதலரோடு காரில் அமர்ந்து ‘புன்னகை மன்னன்’ பட பாணியில் குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து அருந்தியதில் பிரதியுஷா மட்டும் மரணமடைந்தார். பின்னர் அவரது காதலர் கைது செய்யப்பட்டு அவரது மரணத்தில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகப் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இந்தச் சம்பவங்களைத் தழுவி ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்றொரு திரைப்படம் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு மட்டும்தான் திரையுலகினரில் இப்படியான தற்கொலை மரணங்கள் அரங்கேறுகின்றனவா எனக் கேட்டால் இல்லைதான்.
ஹாலிவுட் திரைப்பட உலகைத் தன் கடைக்கண் பார்வையால் சொக்கவைத்து பலரது கனவுக்கன்னியாய்த் திகழ்ந்த மர்லின் மன்றோ மரணத்தின் சர்ச்சை கூட இன்னும் தீரவில்லை. அமெரிக்க ஆட்சியாளர்களால் தற்கொலை எனக் கூறப்பட்ட அச்சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை எனவும் பரவலாக நம்பப்படுகிறது. “ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கல்ல; மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே” என வெளிப்படையாய்ச் சொன்ன இவரின் மரண ரகசியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவிழ்ந்தபாடில்லை.
டிவி நிகழ்ச்சிகளில் நடித்தும் ஸ்டேண்ட் அப் காமெடியானகவும் பிரபலமான ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ் சுயநினைவில்லாத நிலையில் தற்கொலை செய்துகொண்டார். அவ்வை ஷண்முகியின் மூலமாக கருதப்படும் ‘மிஸஸ் டவுட்ஃபயர்’, ‘குட் வில் ஹண்டிங்’ , ‘ஜுமாஞ்சி’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். ஆஸ்கார் வென்றவர் போன்ற பெருமைகள் கொண்ட அவரது முடிவு சோகமானது. பலரை மகிழ்வித்த அந்தக் கலைஞன் கடைசியில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டது கொடுமையின் உச்சம்.
பிரபல இத்தாலிய நாடகக் கலைஞர் ரபேல் ஷூமேக்கர் ஒரு நாடகத்தின் தற்கொலைக் காட்சியில் நடித்தபோதே கயிறு இறுகி மரணமடைந்தார். அவர் வேண்டுமென்றே சில காட்சிகளை மாற்றியதாகவும் அவர் திட்டமிட்டே தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் உள்ள மர்மங்கள் வெளிஉலகிற்கு என்றுமே தெரியப்படாதவை.
மலரினும் மெல்லியது கலைஞர்கள் இதயம்!
பிரபலமானவர்களின் வாழ்க்கையைப் போலவே மரணமும் உற்றுநோக்கப்படுகிறது. நடிகர்களின் அந்தரங்கங்கள் எளிதாய்ப் பரவிவிடுகின்றன. எனவே, அவர்கள் தங்கள் கவலைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் மறைக்கவே முயல்கிறார்கள். தற்கொலைகள் மன இறுக்கத்தினால் முடிவெடுக்கப்பட்டதாய் இருக்கின்றன. வாழ்தல் கடினமெனும் சூழலுக்குத் தள்ளப்படும்போது பெரும் வாய்ப்பாக அங்கே மரணம் கைதட்டி வரவேற்கிறது. தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும்போது சின்ன சறுக்கல் ஏற்பட்டாலும் துவண்டுபோய் தவறான முடிவைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
இவர்கள் பிரபலம் எனும் பிம்பத்தில் இருப்பதால், தங்கள் சோகத்தை, சுமையை பிறரிடம் சொல்லாமல் அழுத்தி வைப்பதாகவே படுகிறது.
உளவியல் நிபுணரின் பார்வை
உளவியல் நிபுணர் சுரேகாவிடம் இதைப் பற்றிக் கருத்து கேட்டபோது அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் முக்கியமாகப் பட்டது.
‘சினிமா கலைஞர்கள்கூட அவர்கள் நடித்த படத்தைப் பார்ப்பதுண்டு. சீரியல் நடிகர்கள் பிஸியாக இருப்பதாலோ என்னவோ, அவர்கள் நடித்த காட்சிகளை அவர்களே தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பதால் என்ன ஆகும் என்றால், ஒரு அழுகை காட்சியில் அவர்கள் நடித்திருந்தாலும், அதைப் பார்க்கும்போது கூட நடித்தவர்கள் நடந்து கொண்டது, இந்தக் காட்சிக்கு எத்தனை கஷ்டப்பட்டோம் என்றெல்லாம் யோசித்து மன அழுத்தம் குறைந்துவிடும் அவர்களுக்கு. நடித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்ப்பதே – அவர்களைப் பொறுத்தவரை – ஒரு ஜாலியான நிகழ்வாக இருக்கும்’ என்றார் அவர்.
‘கோலங்கள்’ மெகாத்தொடர் வெளிவந்தபோது அதன் நாயகி கதாபாத்திரம் ‘அபி’ யாகவே தம்மை உருவகித்து பல இடையூறுகளைக் கடந்து சாதித்த சில பெண்களும் இருக்கிறார்கள். இன்றைக்கும் ராதிகாவை சின்னத்திரை நாடகங்களில் பார்த்து எதுவந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்று தைரியமாக தம்மை முன்னிறுத்திக் கொள்கிற எத்தனையோ பெண்கள் உண்டு. எனில், சாய் பிரசாந்த் போன்றோரின் மரணம் எத்தகைய எதிர்விளைவுகளை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் தானே ?
என்ன செய்ய வேண்டும் சின்னத்திரை கலைஞர்கள் / திரைப்படக் கலைஞர்கள் சங்கம்?
ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சி என்றால் ஸ்பான்ஸர் பிடித்து கோடிக்கணக்கில் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஒரு ரியாலிட்டி ஷோ என்றாலும் அப்படித்தான். CCL க்ரிக்கெட் போன்ற மன அழுத்தத்தைப் போக்கும் பொழுதுபோக்குகளும் சின்னத்திரைக் கலைஞர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. அப்படியே எல்லாரும் ஒன்று கூடும் நிகழ்வென்றால், அதுவும் ஒளிபரப்பப்பட்டு, அதிலும் மன அழுத்தம் கூடும் வண்ணமே வடிவமைக்கப்படுகிறது எனலாம்.
அவ்வப்போது சுற்றுலாக்கள், விளையாட்டுகள் தாண்டியும் இவர்கள் செய்யவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. நடிகர், நடிகைகள் தனிப்பட்ட முறையில்தான் தங்களுக்கான உளவியல் ஆலோசனை பெறுகின்றனர். பெரும்பாலானோர் உளவியல் நிபுணரை நாடுவதே இல்லை. சங்கங்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் லைட் பாய் முதல் அனைவருக்குமே உளவியல் ஆலோசனை வழங்கவேண்டியது மிக மிக முக்கியம். இது நிச்சயம் அவர்களது மன அழுத்தத்தைத் தணிக்கும்.
எங்களுக்கு, இவர்கள் போன்ற கலைஞர்கள் எப்போதும் தேவை. காரணம் நடிப்புக்காக மட்டுமல்லாமல், கலைஞர்களை தோழனாய், தோழியாய், ஆதர்சமாய்ப் பார்ப்பவர்கள்தான் நாங்கள்.
-விக்னேஷ் சி. செல்வராஜ்