பீப் பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசார் முன் சிம்பு ஆஜரானார்
22 Feb,2016

பீப் பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசார் முன் சிம்பு ஆஜரானார்
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நடிகர் சிம்பு இன்று கோவை போலீசார் முன் ஆஜரானார். நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதுபோன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குபதிவு செய்தனர். இதுபோல வேறு சில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதத்தில் கோவை போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நடிகர் சிம்பு கோவை போலீஸ் நிலையத்தில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இதற்கிடையே ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு வருகிற 24-ந்தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து 24-ந் தேதிக்குள் நடிகர் சிம்பு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று மாலை கோவைக்கு வந்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இரவு 7 மணியளவில் தனது வக்கீலுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் செல்வராஜை சந்தித்து தனது மகன் மீதான வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜரானார். அவருடைய வக்கீல்களும் அங்கு வந்துள்ளனர். சிம்புவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் சிம்புவின் வருகையை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.