ஹீரோக்களுக்காக படங்கள் பண்ண மாட்டேன்! 'பூ' பார்வதி
தமிழில் சசி இயக்கிய பூ படத்தில் லீடு ரோலில் நடித்தவர் பார்வதி. அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தபோதும் அதன்பிறகு உடனடியாக
அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் தாய்மொழியான மலையாளத் துக்கு சென்று நடித்துக்கொண்டிருந்த பார்வதியை, தனுஷின் மரியான் படத்துக்காக மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்தனர். அந்த படத்திலும் பூ படத்தைப்போலவே சிறப்பாக நடித்து கைதட்டல் பெற்றார் பார்வதிமேனன். இருப்பினும், அதன்பிறகு கதாநாயகியாக இல்லாமல் சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் போன்ற படங்களில் நடித்தவர், தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் -என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு மலையாளத்திலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தான் நடிக்கும் எந்தவொரு படத்தையும் முன்னணி ஹீரோ, டைரக்டர் படங்கள் என்பதற்காக அவர் ஏற்றுக்கொள்வதில்லையாம்.
இதுபற்றி பார்வதி கூறுகையில், எந்த கதையாக இருந்தாலும் நடிகர்களை மட்டுமே முன்வைத்து கதை பண்ணுவதில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. ஒரு கதை என்றால் அதில் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கும். அதனால் அந்தந்த கேரக்டர்களுக்கேற்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அதேபோல், படத்துக்குப்படம் நான்தான் லீடு ரோலில் நடிக்க வேண்டும் என்கிற மனநிலையும் எனக்கு இல்லை. சிறிய வேடமாக இருந்தாலும் எனக்கு பிடித்து விட்டால் நடிப்பேன். அந்த கேரக்டரின் காட்சிகளுக்கு என்னால் முடிந்தவரை உயிர் கொடுப்பேன் என்று கூறும் பார்வதி, பெரிய ஹீரோ படம் என்பதற்காக எனக்கு பிடிக்காத வேடங்களில் ஒருபோதும் நான் நடிக்க மாட்டேன். அதன்காரணமாக தேடிவந்த சில படங்களில்கூட நடிக்க மறுத்திருக்கிறேன் என்கிறார்.
இது நம்ம ஆளு படத்துக்கு தடை கேட்டு வழக்கு
சிம்பு, நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘இதுநம்ம ஆளு’. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தயாரிக்க ‘டேக் எண்டர்டைன்மென்ட்’ நிறுவனத்திடம் ரூ.2.50 கோடியை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் டி.ராஜேந்தர் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை, படம் வெளியாவதற்கு முன்பு வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த பணத்தை திருப்பித் தராததால், இது நம்ம ஆளு படத்தை வெளியிட தடை கேட்டு ஐகோர்ட்டில் ‘டேக்’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, கடன் தொகையை கொடுத்து விடுவதாக டி.ராஜேந்தர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜராகி, ‘கடன் வாங்கிய அசல் தொகையை மட்டும் கொடுத்து விட்டு படத்தை வெளியிட எதிர்மனுதாரர் கோரிக்கை வைக்கிறார்.
இதை ஏற்க முடியாது. எனவே, கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து ரூ.3.31 கோடியை கொடுக்கவும், அதன்பின்னரே படத்தை வெளியிட வேண்டும் என்றும் டி.ராஜேந்தருக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு டி.ராஜேந்தர் தரப்பின் கருத்தை தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 4–ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
எந்திரன் 2 படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெளியானது
ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார். இருப்பினும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படமான ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பும் மறுபுறம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் எமி ஜாக்சன் ஒரு ரோபோவாக நடிப்பதாக ஏற்கெனவே செய்தி வெளிவந்தது. ஆனால், இப்போது ரோபோ தயாரிக்கும் ரஜினிக்கு உதவியாளராக நடிக்கிறாராம்.
இதன் படப்பிடிப்பு தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
பெங்களூரில் இன்று நடிகை சங்கவி திருமணம்: தொழில் அதிபரை மணக்கிறார்
1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார் ஜோடியாக அறிமுகமானவர், சங்கவி. விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, ‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். சங்கவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், வெங்கடேஷ். தொழில் அதிபர். சங்கவி-வெங்கடேஷ் திருமணம் பெங்களூரில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியில் இருந்து 10-30 மணிக்குள் நடக்கிறது. ‘‘இது, காதல் திருமணம் அல்ல. இரண்டு பேரின் பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
திருமணத்துக்குப்பின், நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்’’ என்று சங்கவி தெரிவித்தார்.
ப்ரணிதாவின் மெகா ப்ளான்!
தமிழில் உதயன், சகுனி, மாஸ் ஆகிய படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கன்னட நடிகையாக இவர், சகுனி படத்தில் நடித்தபோது தமிழ் சினிமாவில்
அடுத்து முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படத்தின் தோல்வி காரணமாக பின்னர் ப்ரணிதாவுக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார்.
இருப்பினும், தமிழில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற முயற்சிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தவருக்கு சூர்யா நடித்த மாஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் அதிக நம்பிக்கையோடு அந்த படத்தில் நடித்து வந்தார் ப்ரணிதா. ஆனால் அவர் ராசியோ என்னவோ அந்த படமும் தோல்வியாக அமைந்தது. அதனால் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்த நிலையில் திரும்பிச்சென்றார்.
இந்நிலையில், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகிறார் ப்ரணிதா. இப்படத்தில் சமந்தா, காஜல்அகர்வால் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் ப்ரணிதா, இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிக்கொண்டிருப்பதால், முந்தைய படங்கள் தன்னை கைவிட்ட போதும் இந்த படம் வெற்றிபெற்று தன்னை காப்பாற்றும் என்று எதிர்பார்க்கிறாராம். அதோடு கவர்ச்சிகரமான வேடம் என்பதால், இந்த படம் தமிழில் கைகொடுத்தால் அதிரடி நாயகியாக பிரவேசிக்கவும் மெகா திட்டம் வைத்திருக்கிறாராம் ப்ரணிதா.