இந்து–கிறிஸ்தவ முறைப்படி அசினுக்கு இன்று திருமணம்: தொழில் அதிபரை மணந்தார்
கேரளாவைச் சேர்ந்த நடிகை அசின் கடந்த 2001–ம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனார். ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி‘ படம் தான் நடிகை அசின் நடித்த முதல் தமிழ் படமாகும்.
2005–ல் சூர்யாவுடன் அவர் சேர்ந்து நடித்த ‘கஜினி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் தமிழ் நடிகைகளில் அவர் நம்பர்–ஒன் இடத்தைப் பிடித்தார். 2006–ல் ‘வரலாறு’, 2007–ல் ‘போக்கிரி’, 2008–ல் ‘வேல்’, ‘தசாவதாரம்’ ஆகிய அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. ‘கஜினி’ படத்தின் இந்தி தயாரிப்பிலும் அசின் நடித்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
தமிழ் தவிர தெலுங்கிலும் இவர் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். தெலுங்கில் அவர் நடித்த ‘லட்சுமி நரசிம்மா’, ‘கர்சனா’ படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அங்கும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு இந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார். அப்போது பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் மூலம் அசினுக்கு மைக்ரோ மேக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ராகுல் சர்மாவுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அசினும், ராகுல் சர்மாவும் காதலர்களாக மாறினார்கள்.
அவர்கள் திருமணத்துக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. நடிகை அசின் கொச்சியை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர். ராகுல்சர்மா வட மாநிலத்தை சேர்ந்த இந்து ஆவார். எனவே எந்த மத முறைப்படி திருமணம் செய்வது என்று இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
இறுதியில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரே நாளில் காலையில் கிறிஸ்தவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் 2 தடவை திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அசின்–ராகுல் சர்மா திருமணத்துக்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஓட்டலின் ஒரு பகுதியில் கிறிஸ்தவ சர்ச் போன்று செட் அமைத்திருந்தனர். மற்றொரு பகுதியில் இந்து கோவில் போன்று செட் போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி இரு தரப்பினரும் தங்கள் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரையும் திருமணத்துக்கு அழைக்கவில்லை. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை அசின்–ராகுல் சர்மா திருமணம் ஓட்டலில் உள்ள சர்ச்சில் நடந்தது. சுமார் 50 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும் அசினும், ராகுலும் 10 அடுக்கு கொண்ட பிரமாண்ட வெண்ணிலா கேக்–கை வெட்டினார்கள்.
இன்று மாலை அசினுக்கும், ராகுல் சர்மாவுக்கும் ஓட்டலில் மற்றொரு பகுதியில் உள்ள இந்து கோவிலில் திருமணம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 200 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு திருமணம் நடக்கும் அதே ஓட்டலில் விருந்து கொடுக்கப்படுகிறது. சைவ உணவு வகைகள் மட்டும் விருந்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (புதன் கிழமை) ராகுல்சர்மா டெல்லியில் உள்ள தனது சோனாலி பண்ணை வீட்டில் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அசின்–ராகுல் திருமண வரவேற்பு வருகிற 23–ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்களுக்கு அசின் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.