புதிய துணிகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்
சென்னை நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் வந்து குவிகின்றன. நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண் டர்கள் மழை வெள்ளம், கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும் நடந்து சென்று வீடு வீடாக உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
டைரக்டர் மணிரத்னம் அவரது மனைவி சுஹாசினி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று அரிசி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள். வீடுகளுக்கு இவர்கள் வழங்கும் பைகளில் 10 கிலோ அரிசி, 10 கிலோ வெங்காயம், உருளைகிழங்கு, புளி, உப்பு, மஞ்சள்பொடி, 1 லிட்டர் எண்ணை, மசாலா பொருட்கள், குழந்தை களுக்கான பால் பவுடர், டெட்டால், மருந்து பொருட்கள், பெண்களுக்கு தேவையான பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இசை அமைப்பாளர் இளையராஜா 1 லட்சம் போர்வைகளை வட சென்னை பகுதியில் வழங்கி உள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களும் அண்டை வீட்டை சேர்ந்தவர்களுக்கு உதவுகிறார்கள்.
சிலர் பழைய துணிகள் மற்றும் பொருட்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஹாசினி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:– பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மனிதாபிமானம். அதையும் பாதுகாப்பாக உதவுங்கள். பீரோவில் அடைத்துக் கொண்டிருக்கும் பழைய உடைகளையோ, வீட்டில் தேவை இல்லாமல் இருக்கும் பழைய பொருட்களையோ கொடுக்க வேண்டாம்.
நீங்கள் பயன்படுத்திய உடைகள் நல்ல நிலையில் இருந்தால் அதை உங்கள் உறவினருக்கு கொடுக்கலாம். அதைவிட்டு அநாதையாக தவிப்பவர்களுக்கு அதை கொடுக்க வேண்டாம். 120 ரூபாய்க்கு சேலை கிடைக்கிறது. எனவே உதவி செய்ய விரும்பினால் புதிய துணி, புதிய பொருட்களை வாங்கி கொடுங்கள். பழைய பொருட்களை கொடுக்கும் முன்பு சில நிமிடங்கள் யோசியுங்கள். உண்மையான நல்ல நோக்கத்துடன் உதவி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
திருமண செலவுக்கு ஒதுக்கிய பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கும் சந்தியா
‘காதல்’ படம் மூலம் புகழ் பெற்ற சந்தியாவை, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் திருமணத்தை சென்னைக்கு பதில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்தலாம் என சந்தியாவின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் பேசி முடிவு எடுத்தனர்.
அதன்படிநேற்று காலை குருவாயூர் கோவிலில் சந்தியா- வெங்கட் சந்திரசேகரன் திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தனது திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை சென்னை மழை நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக சந்தியா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் பருவநிலை காரணமாகத்தான் கல்யாணத்தை எளிமையாக கேரளாவிலேயே முடித்துவிட்டோம். வரவேற்பு நிகழ்ச்சி கூட சென்னையில் நடத்தப்போவதில்லை. மேலும் பிரம்மாண்டமாக சென்னையில் கல்யாணத்தை மேற்கொண்டிருந்தால் அதற்காக ஆகியிருக்கும் செலவை, சென்னை மழை நிவாரண நிதிக்கு கொடுப்பது என என் பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள்" என்றார்.
சிங்கம்–3 படத்தில் சிஐடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்
மழை காரணமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் – 3’ படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. ‘சிங்கம் – 2’ படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இதில் கல்லூரி மாணவியாக ஹன்சிகா நடித்தார்.
சிங்கம் – 3’ படத்திலும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா தான் நடிக்கிறார். இதில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்க இருக்கிறார். என்றாலும் மற்றொரு நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். சூர்யா எதிரிகளை விரட்டிக் கொண்டு நாடு நாடாக பயணம செய்ய இருக்கிறார்.
அவருக்கு உதவி செய்யும் சி.ஐ.டி.யாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவரும் சூர்யாவுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது.
இதில் சூர்யாவுடன் சுருதிஹாசனும் கலந்து கொள்கிறார். அப்போது வில்லன்களை எதிர்க்கும் சூர்யாவுக்கு சி.ஐ.டி.யாக வரும் சுருதிஹாசன் உதவுவது போன்ற காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 2–வது கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் அனுஷ்கா நடிக்கிறார். பல்வேறு நாடுகளில் ‘சிங்கம் – 3’ படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் ஏற்பட்ட கனமழையால் பரிதவித்து போன சமந்தா
தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருடைய தாய் மொழி தமிழ்தான் என்பதும், இவர் சென்னையை அடுத்த பல்லாவரத்தில்தான் பிறந்து, வளர்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
இவர், கடந்த வாரம் பெய்த கனமழையின் போது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னையை புரட்டிப் போட்ட கனமழையில் இவருடைய பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் பெரிதும் பரிதவித்து போயுள்ளார் சமந்தா.
இதுகுறித்து அவர் கூறும்போது, சென்னை ஏற்பட்ட கனமழையின் போது 3 நாட்களாக எனது பெற்றோரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் போன வாரம் முழுவதும் என்னால் தூங்கக்கூட முடியவில்லை. என்னுடைய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள்கூட இந்த வெள்ளத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் மிகவும் பரிதவித்துப் போனேன். அதுமட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தில் ஏராளமான பொதுமக்களும் சிக்கி, உணவு, தண்ணீர்கூட இல்லாமல் பரிதவித்தது எனக்கு மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.
சமந்தா, தெலுங்கு திரையுலகம் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக தொடங்கியுள்ள ‘மான மெட்ராஸ் கோஷம்’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.