சென்னை மெட்ரோ ரெயிலில் டூயட் பாடும் சிவகார்த்திகேயன்–கீர்த்தி சுரேஷ்
பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதற்கான பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.
இதை சென்னையில் நடத்துகிறார்கள். அப்போது மெட்ரோ ரெயிலிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்து வெளிநாடுகளிலும் இந்த பாடல் காட்சியின் ஒரு பகுதியை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அறிமுக பாடல் காட்சியாக அமைய உள்ளது. ரூ.2 கோடி வரை செலவு செய்து இந்த பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். ராஜூ சுந்தரம் நடன காட்சிகளை அமைக்கிறார்.
இந்த பாடல் காட்சியில் கம்ப்யூட்டர் கிராபிக்சும் இடம் பெறுகிறது. பாலிவுட் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்ற உள்ளனர். சிவகார்த்திகேயன் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அதில் இந்த பாடல் காட்சி பிரமாண்டமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
நகைச்சுவை நடிகர் விவேக் மகன் மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் பல படங்களில் காமெடி, குணச்சித்திரம் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அதுமட்டுமல்லாது, பல்வேறு சமூக நலப் பணிகளும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், விவேக்கின் மகன் பிரசன்னா இன்று மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். பிரசன்னா கடந்த 40 நாட்களாகவே மூளைக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். மறைந்த பிரசன்னாவுக்கு வயது 13-தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் விவேக்கின் அப்பா காலமானார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விவேக் மகன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அனுஷ்காவை மகளாக தத்தெடுத்துள்ளேன்: நாசர் தகவல்
ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, நான் இந்த விழாவுக்கு ஒரு நடிகராகவோ, நடிகர் சங்க தலைவராகவோ வரவில்லை. ஒரு அப்பாவாக வந்திருக்கிறேன்.
ஆம், நான் அனுஷ்காவை எனது மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, அனுஷ்கா என்னிடம் வந்து இந்த படத்தின் கதையை சொன்னார். குண்டான வேடத்தில் நடிக்க சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ, தானே சிரத்தை எடுத்து இதில் நடிப்பதாக கூறினார். அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதையை அது காட்டுகிறது.
அதுபோல், ஆர்யா எப்போதும் பெண்களுடன் மட்டுமே பேசுவார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. அவர் எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடன் நான் 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் இருந்தால் அந்த படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும். அவருடன் நடித்தது எல்லாம் மறக்கமுடியாது என்று கூறினார்.
சொந்த குரலில் பேச ஆர்வம் காட்டும் நடிகைகள்
ஆரம்பகாலத்தில், சொந்த குரலில் பேசினால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என்ற கட்டாயம் இருந்தது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் காரணமாக பேசத் தெரியாதவர்களும் வாய் அசைத்தால் போதும் எந்த மொழி படங்களிலும் நடிக்கலாம் என்ற நிலை வந்தது.
தமிழ் படங்களில் நடிப்பதற்காக தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் இருந்து நடிகைகள் வந்ததால் அவர்களுக்கு யாராவது டப்பிங் குரல் கொடுத்து வருகிறார்கள். நன்றாக தமிழ் தெரிந்த நடிகைகளும் யாரையாவது ‘டப்பி’ பேச சொல்லிவிட்டு ‘எஸ்கேப்’ ஆகிக் கொண்டு இருந்தனர்.
இப்போது காலம் மீண்டும் மாறிவிட்டது. சொந்தக் குரலில் பேசினால்தான் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் என்று ஏற்கனவே கமல் கூறி வந்தார். இப்போது தமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் 5 பேர் தங்கள் படத்தில் சொந்த குரலிலேயே பேசுகிறார்கள்.
திரிஷா ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் சொந்த குரலில் பேசி இருந்தார். இப்போது கமலுடன் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்திலும் சொந்த குரலில் பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசவும் முடிவு செய்துள்ளார்.
இதுவரை ‘டப்பிங்’ குரலை நம்பி இருந்த நயன்தாரா ‘நானும் ரௌடிதான்’ படத்தில் சொந்த குரலில் பேசி பாராட்டு பெற்றுள்ளார். அவரும் இனி எல்லா தமிழ் படங்களிலும் சொந்த குரலில் பேச முடிவு செய்து இருக்கிறார்.
‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் சமந்தா சொந்த குரலில் பேசி இருக்கிறார். சுருதிஹாசனும் தனது படங்களில் சொந்த குரலில்தான் பேசுகிறார். லட்சுமிமேனனும் சொந்த குரலில் பேசி வருகிறார். நடிகைகள் சொந்த குரலில் பேசுவதற்கு மவுசு இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும்
புகைபிடிக்கும் காட்சி: சமந்தாவுக்கு விநியோகஸ்தர்கள் கண்டனம்
விக்ரம், சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘10 எண்றதுக்குள்ள.’ இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சமந்தா, கதாநாயகி, வில்லி என இருவேடங்களில் வருகிறார். வில்லி கதாபாத்திரம் குரூரமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சாதி வெறி பிடித்த உயர்சாதி பெண்ணாக வந்து கொலைகள் செய்கிறார்.
சுருட்டு பிடித்து மூக்கில் புகை விடுகிறார். ஓடும் ரெயிலில் ஆக்ரோஷமாக சண்டையும் போடுகிறார். புகைபிடிக்கும் வில்லி வேடத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் திருட்டு வி.சி.டியில் இருந்து சமந்தா புகைபிடிக்கும் காட்சி படங்களை சிலர் பிரதி எடுத்து அவற்றை இணைய தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
அந்த திருட்டு வி.சி.டி. படங்களை சேகரித்து சமந்தா தனது டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் நடவடிக்கை திருட்டு வி.சி.டியை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று விநியோகஸ்தர்கள் கண்டித்துள்ளனர்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் இதுபற்றி கூறும்போது,
‘‘புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக போய் புகைபிடிப்பதால் வரும் தீமைகளை எடுத்துச்சொல்லி வருகிறார்கள். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பது இல்லை என்று உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சமந்தா புகைபிடிக்கும் காட்சியில் நடித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அது படத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்தால் திருட்டு வி.சி.டியில் இருந்து எடுத்து வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த புகைபிடிக்கும் படங்களை சமந்தா தனது டுவிட்டரில் வெளியிட்டு பெருமைப்பட்டு இருக்கிறார். இது பெண்களை புகைபிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டுவது போல் உள்ளது. திருட்டு வி.சி.டிக்கு ஆதரவான செயலாகவும் இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.