திகில் நிறைந்த பேய் படத்தில் முன்னணி ஹீரோயினாக நடிக்கும் விசாகா சிங்!
சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் விசாகா சிங். இப்படத்திற்கு பிறகு சந்தானம், சேது மீண்டும் இணைந்த ‘வாலிப ராஜா’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார். இப்படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையில் கண்ணன் இயக்கிய ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விசாகா சிங், புதுமுக இயக்குனர் மணிசர்மா இயக்கும் பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது முழுக்க முழுக்க திகில் நிறைந்த பேய் படமாக உருவாகவிருக்கிறது. மேலும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் விசாகா சிங்தான் முன்னணி ஹீரோயினாக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் மூணாரில் தொடங்கவிருக்கின்றனர். அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர்.
மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறார். விரைவில் அதுகுறித்து விரிவான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மணிசர்மா, ‘ஈரம்’ படத்தின் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ அறை கதவை நள்ளிரவில் தட்டிய தமன்னா
டாப் ஹீரோயின்கள் சக ஹீரோக்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிவிடுகின்றனர். அதுபோல் சிக்கியவர்களில் ஒருவர் தமன்னா. தற்போது மற்றொரு கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘பாகுபலி’ பட ஷூட்டிங் அவுட்டோரில் நடந்தபோது நள்ளிரவில் தன் அறையைவிட்டு புறப்பட்ட தமன்னா பட ஹீரோ பிரபாஸ் தங்கி இருந்த அறை கதவை தட்டினார். கதவை திறந்த பிரபாஸ் தமன்னாவை கண்டதும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். ‘இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே’ என்று தமன்னாவிடம் கேட்டார்.
‘நாளைக்கு சண்டை காட்சியில் நடிக்க வேண்டி இருக்கிறது. அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கு நீங்க ஐடியா தர்றதா சொன்னீங்க. மறந்துட்டீங்களா’ என்றார். என்னமோ ஏதோ என்று பதறிப்போன பிரபாஸ் நிம்மதி அடைந்தார். பின்னர் சண்டை காட்சி பயிற்சிக்கான சில டிவிடிகளை தமன்னாவுக்கு கொடுத்தார் பிரபாஸ்.
அதிலிருந்து சண்டை காட்சியில் நடிப்பதற்கான நிறைய விஷயங்களை கற்றதாக சொல்கிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் இம்மாதம் வெளிவரவுள்ள நிலையில் இதன் இந்தி பட புரமோஷனுக்கு தமன்னாவை முன்னிலைபடுத்தி உள்ளாராம் இயக்குனர் ராஜமவுலி.
முதன் முறையாக பொலிஸ் உடையில் கலக்கவுள்ளார் பிரியாமணி!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு, சில படங்கள் இவர் நடித்திருந்தாலும், ‘பருத்திவீரன்’ படம் இவருக்கு சிறந்த நடிகை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதுகூட கிடைத்தது.
இதன்பிறகு, பிரியாமணிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. இதனால் இவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன. இதனால், தமிழை தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2012-ஆம் ஆண்டு ‘சாருலதா’ என்ற படம் வெளிவந்தது. இப்படம் கன்னடம் மொழியிலும் உருவாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியாமணி காக்கி உடை அணிந்து சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.
இவர் சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும், இவர் போலீஸ் வேடத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இப்படத்தை பட்நாயக் என்பவர் இயக்குகிறார்.
சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிப்பதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொண்டு இந்த படத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் முன்னாள் நடிகை விஜயசாந்தியை நினைவுபடுத்தும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக வியப்பை தரும் என்றும் கூறுகின்றனர்.
இப்படத்தை பட்நாயக் இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள்கள்
தமிழ், இந்தி பட உலகில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்தி பட அதிபர் போனி கபூரை மணந்த பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் புலி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷிகபூர் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வளர்ந்து விட்டனர். எனவே இருவரையும் கதா நாயகிகளாக அறிமுகப்படுத்த ஸ்ரீதேவி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஜான்வியும், குஷியும் நடனம் கற்று வருகிறார்கள். நடிப்பு பயிற்சியும் எடுக்கிறார்கள்.
விரைவில் இவர்கள் நடிக்கும் படத்துக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா
‘மெட்ராஸ்’ படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கேத்ரின் தெரசா. இதில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து கேத்ரினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள ‘கணிதன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது இவர் சிம்புவுக்கு ஜோடியாக ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தையடுத்து கேத்ரின், விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க தேர்வு செய்யப்பட்டது. பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகினார். இதையடுத்து படக்குழுவினர் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசாவை தேர்வு செய்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.