'பேர்ட்மேன்' திரைப்படத்துக்கு 4 'ஆஸ்கர்' விருது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமான விழா
திரைப்படத் துறைக்கு வழங்கப்படும், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில், நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், 'பேர்ட்மேன்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட, நான்கு விருதுகளைத் தட்டிச் சென்றது.
சர்வதேச அளவில் திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் விருதுகளில், ஆஸ்கர் விருதுக்கு பிரதான இடம் உண்டு. 'அகாடமி விருது' என்ற பெயரில் அழைக்கப்படும், இந்த ஆஸ்கர் விருது பெறுவதை, ஹாலிவுட் நட்சத்திரங்களும், திரைப்பட கலைஞர்கள் பலரும், தங்கள் வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளனர். கடந்தாண்டில் வெளியான திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கு, பல சுற்று தேர்வுகள் நடந்தன. இதன் அடிப்படையில், இறுதிப் பட்டியல் தயாரானது. இதில், ஆஸ்கர் விருது பெற்றவர்களின் பெயர்கள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில், நேற்று நடந்த, 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இதில், 'பேர்ட்மேன்' என்ற திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உட்பட நான்கு விருதுகள், இந்த படத்துக்கு கிடைத்தன. 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்' என்ற திரைப்படமும், ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம், தயாரிப்பு டிசைனிங், ஒரிஜினல் இசை ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த நடிகராக, எடி ரெட்மேனும், சிறந்த நடிகையாக ஜூலியான் முரேவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியா சார்பில் ஒரு படம் கூட, ஆஸ்கர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு தேர்வாகவில்லை. இதனால், இந்திய திரைப்படத் துறையினரும், ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விழா துளிகள்
* வழக்கமாக, ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தன் படக் குழுவினர், சுற்றத்தார், குடும்பத்தார் என்று பட்டியலிட்டு நன்றி தெரிவிப்பதற்குள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட, 45 வினாடிகள் முடிந்துவிடும். 2015ம் ஆண்டு ஆஸ்கர் ஏற்புரை, சற்று வேறுபட்டதாக இருந்தது. 'விருது எனக்குக் கிடைத்தாலும், மற்ற படங்களில் எல்லாருமே சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்' என்ற ரீதியில், பல ஆஸ்கர் பெற்றவர்கள் அடக்கி வாசித்தனர்.
* பெரும்பாலும், எல்லாருமே ஏதாவது ஒரு பொதுநல செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டனர், 'பேர்ட்மேன்' இயக்குனர் அலெக்சாண்ட்ரோ இனாரிடு, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு வருவோர் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக பேசினார்.
* ' பெண்களுக்கு சமத்துவமும், மரியாதையும் தேவை, ஆப்ரிக்க அமெரிக்கர்களின் உரிமைகள், தற்கொலைக்கு எதிரான அறைகூவல், அல்சைமர் போன்ற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு' போன்ற விஷயங்களையும் விருது பெற்றவர்கள் பேசினர்.
* ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், அவ்வப்போது உடை மாற்றி வருவது வழக்கம். இந்த வருட தொகுப்பாளர், நீல் பேட்ரீக் ஹாரிஸ், திடீரென்று டைட்டான வெள்ளை நிற 'அண்டர்வேர்' உடையில் வந்தார். முதலில் அரங்கம் திகைத்தது; பின், கலீரென்று சிரித்தது. 'பேர்ட்மேன்' படத்தில் வரும் அந்த, 'அண்டர்வேர்' காட்சியை கிண்டல் செய்யத்தான் அவர் இப்படிச் செய்தாராம்.
* 'சவுண்ட் ஆப் மியூசிக்' படத்தில் நடித்த ஜூலியா ஆண்ட்ரூஸ் விருது வழங்க வருவதற்கு முன், பிரபல பாப் பாடகி லேடி காகா, அந்தப் படத்தின் சில பாடல்களைப் பாடி அசத்தினார்.
விருது பெற்ற படங்களின் கதை சுருக்கம்
பேர்ட்மேன்:
முன் 'பேர்ட்மேன்' என்ற பாத்திரமாக நடித்த ஒரு நடிகரின் (மைக்கேல் கீட்டன்) புகழ் மெல்ல மெல்ல மங்குகிறது. எல்லாம் அந்தக் கால பேர்ட்மேனைப் பற்றித் தான் பேசுகின்றனர். இது நடிகருக்கு மன உளைச்சலைத் தருகிறது. பிரபலமான பிராட்வே நாடகம் ஒன்றில் திறமையை நிரூபிக்க, அவருக்கு வாய்ப்பு வருகிறது. அதற்கிடையில் நடிகரின் மனப் போராட்டங்களை நையாண்டியாகச் சொல்கிறது படம்.
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்:
ஜுப்ரோவ்கா குடியரசு என்ற கற்பனை நாடு. அதில் ஒரு ஹோட்டல். அதன் உரிமையாளர், எடுபிடி பையன், வந்து தங்கும் வாடிக்கையாளர்கள். இவர்களைச் சுற்றிலும் நடக்கும் விறுவிறுப்பான கதையில் ஒரு ஓவியம், ஒரு உயில் சம்பந்தமான அடிதடி போன்ற அம்சங்களும் உண்டு. கதை நடப்பது இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் என்பதும் படத்தின் வித்தியாசமான கதைக் களத்திற்கும், சம்பவங்களுக்கும் உதவுகிறது.
பாய்ஹூட்:
'வளர்ந்து பெரியவன் ஆவது' என்றால் என்ன என்பதை, மேசன் என்ற சிறுவனின் பார்வையில் (எலார் கோல்ட்ரேன்) காட்டுகிறது படம். நடிகர்களை மாற்றாமல், 12 ஆண்டுகள் படிப்படியாக பாத்திரங்களின் வளர்ச்சியை படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ரிச்சர்ட் லிங்க்லேடெர். தி தியரி ஆப் எவ்ரிதிங் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்சின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை. கேம்ப்ரிட்ஜில் 1960களில் படித்துக் கொண்டிருந்த ஸ்டீபனுக்கு, 21 வயதில் அபூர்வ நோய் தாக்குகிறது. இரண்டே ஆண்டுகள் தான் ஆயுள் என்று டாக்டர்கள் சொல்லிவிட, அவருக்கு ஆறுதல், பிடிப்பு எல்லாம் சக மாணவி ஜேன் வைல்டின் காதல் தான். நோய், அவரை படிப்படியாக உருக்குலைத்து, சக்கர நாற்காலியில் தள்ள, இருவரின் காதல் சோதனைக்குள்ளாகிறது.
ஸ்டில் ஆலிஸ்:
ஆலிஸ் ஹோலாண்ட் (ஜூலியான் முரே) ஒரு பிரபலமான மொழியியல் பேராசிரியை. அவரது ஆராய்ச்சியே மொழிகள், வார்த்தைகளைப் பற்றியது தான். ஆனால், அவருக்கு திடீரென சில சொற்கள் மறந்து போகின்றன. அதற்குக் காரணம், அவருக்கு ஒரு அபூர்வ நோய் என்கின்றனர் டாக்டர்கள். அதன் பிறகு ஆலிசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உள்ள உறவு சோதனைக்குள்ளாகிறது.
இடா (போலந்து):
கடந்த, 1960களில் ஆதரவற்ற குழந்தையாக வளரும் அன்னா, கன்னியாஸ்திரி ஆக முடிவெடுக்கிறார். அவர் உறுதிமொழி எடுப்பதற்கு முன், அவரது குடும்பத்தின் இருண்ட ரகசியம் தெரிய வர, தன் ஒரே உறவினரான வாண்டா என்ற பெண்ணை சந்திக்கச் செல்கிறார். அவர், அன்னாவின் குடும்பம் யூத மதத்தைச் சேர்ந்தது என்று சொல்ல, இருவரும் சேர்ந்து தேடலை துவங்குகின்றனர்.
விருது பட்டியல்
சிறந்த படம் பேர்ட்மேன்
சிறந்த இயக்குனர் அலெக்சாண்ட்ரோ இனாரிடு (பேர்ட்மேன்)
சிறந்த நடிகர் எடி ரெட்மேன் (தி தியரி ஆப் எவ்ரிதிங்)
சிறந்த நடிகை ஜூலியான் முரே (ஸ்டில் ஆலீஸ்)
சிறந்த துணை நடிகர் ஜே.கே.சிம்மன்ஸ்( விப்லாஷ்)
சிறந்த துணை நடிகை பாட்ரிகா அர்க்யூட் (பாய்ஹூட்)
சிறந்த ஆடை மிலேனா கனொனரா ( தி கிராண்ட் புடாபெஸ்ட் வடிவமைப்பாளர் ஹோட்டல்)
சிறந்த ஒப்பனை மற்றும் பிரான்ஸ் ஹானன் மற்றும் மார்க் கிளவுசியர் சிகையலங்கார நிபுணர் (தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த திரைக்கதை அலெக்சாண்ட்ரோ இனாரிடு, நிக்கோலஸ், அலெக்சாண்டர் ஜூனியர் (பேர்ட்மேன்)
சிறந்த அனிமேஷன் படம் பிக் ஹீரோ சிக்ஸ்
சிறந்த ஒளிப்பதிவாளர் இமானுவெல் லுபெஸ்கி (பேர்ட்மேன்)
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் இடா (போலந்து)