‘லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி ஏற்கெனவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் ரஜினிகாந்த் ஆலோசனைப்டி பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் நஷ்டமடைந்தவர்களிடம் நஷ்டக் கணக்கைக் கேட்டு வாங்கினார். அதன் பின் அந்தக் கணக்கைப் பார்த்த தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், நஷ்டத் தொகையில் 10 சதவீதத்தை மட்டுமே திருப்பித் தருவேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு சம்மதிக்காத வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களது அடுத்த கட்டப் போராட்டம் குறித்து தெரிவித்தனர்.
அதன் படி விரைவில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து ‘மெகா பிச்சை’ எடுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், அதை பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஆரம்பித்து வைக்கப் போவதாகம் அறிவித்தனர்.
அது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“’லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ படத்தை வாங்கினோம். பட புரமோஷனில் பேசிய ரஜினிகாந்த் படத்தைப் பற்றியும், கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதை அடுத்து, இந்தப் படத்தை வாங்க முடிவுசெய்தோம்.
ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனவே, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சரியான பதில் இல்லாததால் கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம்.
அதன்பிறகு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத்தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் எங்களை தொடர்பு கொண்ட ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி, தயாரிப்பாளர் 10 சதவீத நஷ்ட ஈடு தொகை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இரண்டு மாத காலமாக எந்தவித முடிவுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன்வராதது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம். மனமில்லாத இவர்களை மல்லுக்கட்ட, பணமில்லாத எங்களுக்கு வேறு வழி கொடுக்காமல் அடுத்தக ட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளியுள்ளனர்.
இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வகை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து உண்மையை விளக்கி ‘மெகா பிச்சை’ என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இந்தப் போராட்டம் போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இருந்து துவக்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போட்டு போராட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இனி மேல் ரஜினிகாந்த் நடித்த படத்தை வாங்கி திரையிட்டால் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமாகவும், ரஜினிகாந்த்தை நம்பினால் நடுத் தெருவில்தான் நிற்கவேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த போராட்டம் இருக்கும்.
இந்தப் போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்தி பிச்சை எடுப்பார்கள். போராட்டத்தின் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
‘லிங்கா’ படத்தை திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி, அதன் அருகில் உண்டியல் வைக்கப்படும். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என்று பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
படங்களின் பெயரை பாட்டில் நுழைத்த கபிலன் வைரமுத்து
சரண் இயக்கத்தில் வினய் நாயகனாக நடிக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’. இந்தப் படத்திற்காக பரத்வாஜ் இசையமைப்பில் கபிலன் வைரமுத்து படத்திற்கான டைட்டில் பாடலை எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடலில் சரண் இயக்கிய படங்களின் பெயரையும் பாட்டிற்குள் நுழைத்திருக்கிறார். “காதல் மன்னன், அமர்க்களம், ஜேஜே, ஜெமினி, அட்டகாசம், அசல்,” ஆகிய படங்களின் பெயரையும் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.
இந்தப் பாடல் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையான உரையாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளதுஸ
பாடல் இதோஸ
பல்லவி
ஆண்:
மாங்கா பீசுல இந்த மாங்கா பீசுல
மொளகா பொடி முத்தத்தால
கலகம் செஞ்சு புட்ட
பெண்:
சுட்ட நரம்புல என் எச்சி பட்டதுல
கெக்க பெக்க கொழந்த பயன்
ரெக்க மொளச்சிட்ட
ஆண்:
காதலிக்கும்போது எனக்கு படபடங்குது
நீ அழைக்கும் நேரம் இங்க தொட நடுங்குது
தட்ப வெப்பம் கடந்து வர என்ன செய்யணும்?
தானைத்தலைவி என் திரைவிலக்கணும்
பெண்:
அட தொண்டா
ஒரு வண்டா
நீ என்னோடு ஓடி வா
சரணம் 1
ஆண்:
காதல் மன்னனாக நான் நெருங்கிவரும் நொடியில்
பாதர பார்வை பட்டு பரிதவிப்பேனே
பெண்:
கண்கள் ரெண்ட மூடி ஒரு காம வேர்வை மூட்டி
அமர்க்களமாய் அணைத்துக்கொண்டால் அவிழ்ந்திடுவேனே
ஆண்:
தயக்கங்களாலே நெருக்கங்கள் ஜேஜே
தவறுகளாலே இரவுகள் ஜேஜே
பெண்:
டேய் மாப்பி நான் பீப்பி
ஜெமினி பொம்ம போல என்ன வாசி
சரணம் 2
ஆண்:
சேல கட்டி முடிப்ப அந்த இடைவெளிய கொடுப்ப
தள்ளி நின்னு பாத்து பாத்து ரசித்திடுவேனே
பெண்:
அட்டகாசமாக நீ சட்ட மாட்டி வருவ
பட்டனெல்லாம் கழட்டிவிட்டு கட்டிக்கொள்வேனே
ஆண்:
அடங்கும் என் நெஞ்சம் பொய் எனத் தோன்றும்
உருகும் என் நெஞ்சே அசல் எனத் தோன்றும்
பெண்:
ஒரு உடம்பில் இரு இதயம்
இந்த படத்தின் தலைப்பு உனக்கு பொருந்தும்