சினிமா செய்தித் துளிகள் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா
13 Feb,2015
சூர்யா – அமலாபால் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் “இது நம்ம ஆளு” விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து பாண்டிராஜ் “பசங்க” பாணியில் ஒரு படம் எடுத்து வருகிறார்.
சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடிக்கும் இப்படத்திற்கு “ஹைக்கூ” என்று பெயரிடப்பட்டுள்ளதை பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சூர்யா துவங்கியுள்ள 2டி எண்டர்ட்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா, அமலாபால் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் பிந்துமாதவியுடன் சிறுவர்கள் பலர் நடித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாஸ்” படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் சூரியா. சூர்யா, அமலா பால் இணைந்து நடிக்கும் முதல் படம் “ஹைக்கூ” என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் உலகை புரிந்து, படம் எடுத்து ரசிகர்களையும், சினிமா விமர்சகர்களையும் ஈர்த்த பாண்டிராஜின் அடுத்தப் படைப்பான “ஹைக்கூ”குழந்தைகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்குமாம்.
கார்த்தி-நாகர்ஜூனா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது
‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவுடன் இணைந்து தமிழ் படமொன்றில் கார்த்தி நடிக்கவிருப்பதாக செய்தி வெளியானது. அப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது.
இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. கார்த்தி நடித்த சில படங்கள் தெலுங்கிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கும், கார்த்திக்கென்று ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. எனவே, அவரை இப்படத்திற்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்தி-நாகர்ஜூனா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. வம்சி பைடிபாலி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிடவுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹாவுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்
தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘மெளன குரு’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளிவந்த செய்திதான். இந்த படத்தில் அருள்நிதி நடித்த கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ள செய்தியும் நாம் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் மிக முக்கிய வில்லன் கேரக்டரான காவல்துறை அதிகாரியின் கேரக்டருக்கு பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘பாம்பே டாக்கீஸ், யூத், அக்லி போன்ற பல திரைப்படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர்.
மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆர்.டி. ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே கடந்த 2005ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை இயக்கி முடித்த பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து விஜய் அல்லது விக்ரமுடன் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபிகா கையில் ’மைக்’கை கொடுத்த ரகுமான் : ரசிகர்கள் தயாரா?
ஃபாரா கான் இயக்கிய ’ஓம் ஷாந்தி ஓம்’ என்ற படத்தின் மூலம் பிரபலமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து பல மில்லியன் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
தற்போது பாலிவுட்டின் வசூல் நாயகியாக வலம் வருகிறார். இவர் நடித்த அனேக படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதுவரை நடிகையாக பாலிவுட்டை கலக்கி வந்த தீபிகா தற்போது பாடகியாகவும் அறிமுகமாகி பாலிவுட்டை கலக்க இருக்கிறார்.
இவர் இப்போது இம்தியாஸ் அலி இயக்கும் தமாஷா என்ற படத்தில்ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சாஜித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் பிஸியாக நடந்து வரும் வேளையில் இன்னொரு பக்கம் படத்திற்கான இசையமைப்பு வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக தீபிகா கையில் மைக்கை கொடுத்துவிட்டாராம் ரகுமான். அட, அதாங்க தீபிகா பாட போறாங்களாம். இதன்மூலம் தீபிகா பாடகியாக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் தற்போது ‘புலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள அட்லி, படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார்.
அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் நயனின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மீண்டும் ‘கத்தி’ நாயகி சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சமந்தாவின் பெயரை விஜய்யே பரிந்துரை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன..
மேலும் இந்த படத்தின் இன்னொரு நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரவுள்ள சமந்தாவும், ‘ஐ’ படத்திற்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தனக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பாக எமி ஜாக்சனும் கருதி வருவதாக கூறப்படுகிறது.
சித்தார்த் இடத்தை பிடித்த சர்வானந்த்?
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேய்ஸ்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தாங்கள் நடிக்கவில்லை என சித்தார்த் மற்றும் சமந்தா சமீபத்தில் கூறியதை அடுத்து இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சர்வானந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே ஏராளமான தெலுங்கு படங்களிலும், எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை போன்ற தமிழ் படங்களிலும் நடித்தவர்
சர்வானந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரன் ராஜா ரன்’ மற்றும் மல்லி மல்லி இடிராணி ரோஜு’ ஆகிய படங்களின் வெற்றியே பெங்களூர் டேய்ஸ்’ ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரீமேக் ஆகவுள்ள இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஆர்யா மற்றும் நித்யா மேனன் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிக்கேற்றவாறு படத்தில் சில மாறுதல்கள் செய்யப்படும் என இந்த படத்தின் இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.