எதிர்பார்ப்புள்ள ஹாலிவுட் படங்களுக்கு, அவை வெளியாவதற்கு முந்தைய தினம் இரவு ப்ரீமியர் காட்சிகள் நடத்தப்படும்.
இந்த ப்ரீமியர் காட்சியிலேயே அதிக பணத்தை குவிக்கும் படங்கள் இருக்கின்றன.
அதேபோல் என்னை அறிந்தால் படத்தின் ப்ரீமியர் காட்சிகளை நடத்த, அப்படத்தின் யுஎஸ் உரிமையை பெற்றிருக்கும் ATMUS என்டர்டெய்ன்மெண்ட் முடிவு செய்துள்ளது.
என்னை அறிந்தால் இங்கு வெளியாகும் அதேநாள் (ஜனவரி 29) யுஎஸ்ஸிலும் திரைக்கு வருகிறது. அதற்கு ஒருநாள் முன்பு ஜனவரி 28 ப்ரீமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஜீத் – கௌதம் வாசுதேவ மேனன் காம்பினேஷன் என்பதால் வெளிநாடுகளில் என்னை அறிந்தால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
புத்தாண்டையொட்டி 100 சினிமா கலைஞர்களுக்கு விருது
புத்தாண்டையொட்டி சென்னையில், 100 சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது.
கடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.
விழாவில், தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய 102 வயதான மூத்த டைரக்டர் மித்ரதாசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருடன் ஒளிபதிவாளர் என்.கே.விஸ்வநாதன், மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், கலை இயக்குனர் தோட்டாதரணி, வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், துணை நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
டைரக்டர் கே.பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். விருதும், ஆர்.பாண்டியராஜனுக்கு சிவாஜிகணேசன் விருதும் வழங்கப்பட்டது.
சிபிராஜ் (நாய்கள் ஜாக்கிரதை), ஆரி (நெடுஞ்சாலை), விமல் (மஞ்சப்பை), பாலாஜி (நாய்கள் ஜாக்கிரதை), யோகி தேவராஜ் (கயல்), பிளாரன்ட் பெரைரா (கயல்), அபினய் (ராமானுஜன்), சதீஷ் (மான்கராத்தே), நடிகைகள் தன்ஷிகா (பரதேசி), சஞ்சனாசிங் (அஞ்சான்) ஆகியோர் சிறந்த நடிகர்-நடிகைகளுக்கான விருது பெற்றார்கள்.
சிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான விருதுகளை விவேக், சூரி இருவரும் பெற்றுக்கொண்டார்கள். சிறந்த இசையமைப்பாளர்களுக்கான விருது டி.இமான், அனிருத் ஆகிய இருவருக்கும், சிறந்த பட அதிபருக்கான விருது மனோபாலாவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த டைரக்டர்களுக்கான விருதுகளை பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), எழில் (வெள்ளக் கார துரை), பிரபு சாலமன் (கயல்), ஞானராஜசேகரன் (ராமானுஜன்), விஜய் மில்டன் (கோலி சோடா), சுசீந்திரன் (ஜீவா), வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி), கவுரவ் (சிகரம் தொடு), ஆனந்த் சங்கர் (அரிமாநம்பி), வினோத் (சதுரங்க வேட்டை), ராஜபாண்டி (என்னமோ நடக்குது), முத்துராமலிங்கன் (சினேகாவின் காதலர்கள்), டீகே (யாமிருக்க பயமேன்), கார்த்திக் கிரிஷ் (கப்பல்), மகிழ்திருமேனி (மீகாமன்), பிரவீன்காந்த் (புலிப்பார்வை), கிருஷ்ணா (நெடுஞ்சாலை), இளையதேவன் (ஞானகிருக்கன்) ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
சிறந்த கதாசிரியருக்கான விருது ‘லிங்கா’ படத்துக்காக பொன்குமரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், சிறந்த வசனகர்த்தா பாலாஜி மோகன், சிறந்த ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் உள்பட மொத்தம் 100 சினிமா கலைஞர்கள் விருது பெற்றார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு, நெப்போலியன், வாகை சந்திரசேகர், நடிகைகள் குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம், சரண்யா பொன்வண்ணன், குட்டி பத்மினி, நளினி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர்கள் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், தனஞ்செயன், கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், சித்ராலட்சுமணன், பட்டியல் சேகர், அமுதா துரைராஜ், ருக்மாங்கதன், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா, கவிஞர் பிறைசூடன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
என்னை அறிந்தால் ட்ரெய்லர் – மகிழ்ச்சியில் த்ரிஷா
த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 1 புத்தாண்டில் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியான 36 மணிநேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் அந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர்.
த்ரிஷா நடித்த ஒரு தமிழ்ப் படத்தின் ட்ரெய்லரை குறுகிய நேரத்தில் இவ்வளவு பார்வையாளர்கள் பார்த்தது இதுவே முதல்முறை.
இதுகுறித்து ட்விட் செய்திருக்கும் த்ரிஷா, ட்ரெய்லருக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த வருடம் சிறந்த வருடமாக இருக்கப் போகிறது எனவும் கூறியுள்ளார்.
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் ஜனவரி 29 திரைக்கு வருகிறது.
விஷாலின் மகா மகாராஜு
.
பொங்கலுக்கு என்னை அறிந்தால், காக்கி சட்டை, கொம்பன் ஆகியவை பின்வாங்க ஐ -யுடன் ஆம்பள மட்டுமே மோதுகிறது.
விஷாலுக்கு ஆந்திராவில் சின்னதாக ரசிகர்வட்டமும், வியாபாரமும் உள்ளது யாவரும் அறிந்த பழைய செய்தி.
வழமையாக ஆம்பளயும் தெலுங்கில் வெளியாகிறது. அதன் பெயர்தான், மகா மகாராஜு.
ஹன்சிகா, சந்தானம், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண், மதுரிமா, மாதவி லதா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே ஆம்பளயில் நடித்துள்ளது
உயிருக்கு போராடும் ரசிகை – நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்
ஆயிரம்தான் விமர்சனங்கள் இருக்கட்டுமே. விளம்பரத்துக்காக செய்கிறார் என்றும் சொல்லட்டுமே. இக்கட்டான நிலையில் இருப்பவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு விஜய் என்றுமே தயக்கம் காட்டியதில்லை.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சனா. வயது 25. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் வினோத நோய் அர்ச்சனாவையும் தாக்கியது. இந்தநோயின் பாதிப்புக்குள்ளானவர்களால் நடக்க, பேச இயலாது. மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு மருந்தோ தீர்வோ கிடையாது.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட அர்ச்சனாவை வீட்டில் வைத்து அவரது பெற்றேnர் கவனித்து வருகின்றனர்.
அர்ச்சனா விஜய்யின் தீவிர ரசிகை. அவரை சந்திக்க விரும்பியிருக்கிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற அர்ச்சனாவின் பெற்றேnர் முயற்சி எடுத்துள்ளனர்.
இந்த விவரங்கள் விஜய்க்கு தெரிய வந்ததும், அர்ச்சனாவின் பிறந்தநாளில் அவரது வீட்டிற்கு வந்து அவரை சந்தித்தார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் (பேச முடியாதே தவிர பேசுவதை அர்ச்சனாவால் கேட்க உணர முடியும்).
நடக்க முடியாத அவரை தூக்கி நாற்காலியில் அமர வைத்ததும் விஜய்தான். அர்ச்சனாவுக்கும் அவரது பெற்றேnருக்கும் ஆறுதல் கூறியவர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைகூறி அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
திரையில் லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்விப்பதைவிட நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறிய இந்த குடும்பத்தின் மகிழ்ச்சிதான் அவர்மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்துகிறது
அலைபாயுதேயின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் – பி.சி.ஸ்ரீராம்
மணிரத்னம் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ் நடிப்பில் ஓகே கண்மணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தவேளை மணிரத்னம் எடுத்த படம், அலைபாயுதே. மாதவன், ஷாலினி நடித்த அப்படத்துக்கும் பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ராவணன், கடல் என்று மணிரத்னத்துக்கு இப்போதும் தொடர் தோல்விகள். இந்நிலையில் அவர் இயக்கிவரும் படம்தான், ஓகே கண்மணி. இது அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்ற பேச்சு இருந்தது.
அதனை உறுதிப்படுத்துவது போல், ஓகே கண்மணியை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம். ஆனாலும் இதன் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த காதல் கதை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓகே கண்மணிக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒரு பாடலை ரஹ்மானின் மகன் பாடியுள்ளார்.
பொங்கலுக்கு புலி வரும்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்துக்கு ரசிகர்களும், மீடியாவும் பெயர் வைக்க ஆரம்பித்தனர். சிம்புதேவன் செய்ய வேண்டிய வேலை.
மாரீசன், கருடா என்ற அந்த பெயர்களை சிம்புதேவன் மறுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக புலி என்ற பெயரை புதிதாக உலவ விட்டிருக்கிறார்கள்.
இப்படியே போனால் அவர்களே பெயர் வைத்து போஸ்டர் அடித்துவிடுவார்கள் என்பதால் வரும் பொங்கலுக்கு விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பெயரை அறிவிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
புலிக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, மீடியா கிளப்புகிற கிலிக்கு பயந்தாக வேண்டியிருக்கிறது.