‘
வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்துவிட்ட நாயகன் சந்திரன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். இங்கு அவருக்கு நெருங்கிய நண்பராகிறார் வின்சென்ட்.
நாயகன் சந்திரனுடைய அப்பா பார்வையற்றவர். இவர் இறப்பதற்கு முன் சந்திரனிடம், நான் பார்க்காத இந்த உலகை பார்க்க நீ பிறந்திருக்கிறாய். ஆகையால், இந்த உலகை நீ நன்றாக ரசிக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
இதனால், சந்திரன் கிடைத்த பணத்தை சேர்த்து வைக்க நினைக்காமல் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறான். இதற்காக 6 மாதம் கடுமையாக உழைத்து, மீதி 6 மாதங்கள் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான்.
அதன்படி, ஒருநாள் கன்னியாகுமரிக்கு தனது நண்பனுடன் செல்கிறான். போகும்வழியில் இருவரும் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, ஒரு காதல் ஜோடி இவர்களை கடந்து ஓடிச் செல்கிறது.
ஊரைவிட்டு ஓடிச் செல்லும் அவர்கள் தங்கள் கையில் இருந்த பையை தவறவிடுகிறார்கள். இதை எடுத்துக் கொண்டு நண்பர்கள் இருவரும் அந்த காதல் ஜோடியை பின்தொடர்ந்து அவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
காதல் ஜோடியை துரத்தி வருபவர்கள் இதை பார்த்துவிடுகின்றனர். நண்பர்கள் இருவரும்தான் அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிச்செல்ல உதவியிருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்களை அடித்து உதைத்து, தங்களது இடத்துக்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு சென்றபிறகுதான் தெரிகிறது. ஒடிச் சென்ற பெண் அந்த ஊரின் பண்ணையாரான யோகி தேவராஜின் மகள் என்று. அவரிடம் தாங்கள் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று நண்பர்கள் முறையிடுகிறார்கள். ஆனால், தேவராஜோ இவர்களது பேச்சை கேட்பதாக இல்லை.
ஆகையால், அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கும்வரை அங்கேயே ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார்கள். இந்நிலையில், அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணான நாயகி ஆனந்தி, இவர்களிடம் சென்று பண்ணையாரின் மகள் பற்றி விசாரிக்கிறாள்.
அவளைப் பார்த்ததுமே அவள்மீது காதல்வயப்படுகிறார் சந்திரன். பண்ணையார் மகளைப் பற்றி தனக்கு தெரிந்தாற்போல் அவளிடம் காட்டிக் கொள்கிறான். இதையெல்லாம், ஆனந்தி, தான் மறைத்து வைத்திருந்த டேப்ரெக்கார்டரில் பதிவு செய்து பண்ணையாரிடம் கொண்டு சென்று ஒப்படைக்கிறார்.
சந்திரன் வேண்டுமென்றே தங்களிடம் உண்மையை மறைக்கிறான் என்று பண்ணையாரின் ஆட்கள் அவனை மேலும் அடித்து உதைக்கிறார்கள். ஒருகட்டத்தில், சந்திரன் தான் ஆனந்தியை விரும்புவதாகவும், அவள் தன்னிடம் பேசுவதற்காகத்தான் பண்ணையார் மகளைப் பற்றி தெரிந்ததாக கூறியதாக கூறுகிறான்.
ஆனால், அதை பண்ணையாரின் ஆட்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவனை எரித்து கொன்றுவிட துணிகின்றனர். அந்த நேரத்தில் ஊரைவிட்டு ஓடிச்சென்ற பண்ணையாரின் மகள் திரும்பி வந்துவிடுகிறாள்.
அவள் வந்து தான் ஊரைவிட்டு ஓடிச்சென்றதுக்கும், சந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பண்ணையாரிடம் சொன்னபிறகு, சந்திரனை ஊரைவிட்டே சென்றுவிடும்படி கூறி அனுப்பி விடுகின்றனர்.
இதனால், சந்திரன் அந்த ஊரைவிட்டு கன்னியாகுமரிக்கு செல்கிறான். அவன் சென்றபிறகு, அவன் நினைவாகவே இருந்து வருகிறாள் ஆனந்தி. இதையறியும் அவளது பாட்டி, சந்திரன் கன்னியாகுமரிக்குத்தான் சென்றிருக்கிறான்.
அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுடனே சேர்ந்து வாழ் என்று செலவுக்கு பணம் கொடுத்து அவளை அனுப்பி வைக்கிறாள்.
சந்திரனை தொடர்புகொள்ள எந்த வழியுமே இல்லாத நிலையிலும், அவனைத் தேடி புறப்படுகிறாள் ஆனந்தி. இறுதியில், அவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாளா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் நாயகன் சந்திரனுக்கு ரொம்பவும் யதார்த்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கு இதுதான் முதல்படம் என்றாலும் நடிப்பில் அது தெரியவில்லை. இவருடைய நண்பராக வரும் வின்சென்டும் நடிப்பில் கலக்கியிருக்கிறார்.
ஆனந்தி, ஒரு கிராமத்து பெண்ணாக நம் மனதில் எளிதாக பதிகிறார். படம் முழுக்க பாவாடை சட்டையில் வலம் வரும் இவர் பார்க்க சிறுபெண்ணாக இருந்தாலும் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவரிடம் இருக்கும் திறமைகளை நன்றாக வேலை வாங்கி வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பிரபு சாலமன்.
இதுவரையிலான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த யோகி தேவராஜுக்கு, இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்.
யதார்த்தமான மனிதர்கள், வித்தியாசமான கதைக்களம், ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு புதுமை என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் கொடுப்பதில் பிரபு சாலமனுக்கு நிகர் அவரே. இப்படத்திலும் அந்த வித்தியாசத்தை காணமுடிகிறது.
நாயகனை தேடி செல்லும் பரபரப்பான சூழ்நிலையிலும், ஜமீன் தாத்தாவை வைத்து கதையோடு பயணிக்கும் காமெடியை கொண்டுவந்து கலகலப்பூட்டியிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில் நாயகனை அறிமுகப்படுத்தும்போது, பின்னணியில் பிரபு சாலமன் பேசும் வசனங்கள் அனைத்தும் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி மிகவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. ஆனால், பிற்பாதி முழுக்க நாயகி, நாயகனை தேடுவதிலேயே கதை நகர்வதால் சற்று போரடிக்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுனாமி வரும் காட்சிகளும் அருமை.
டி.இமான்-பிரபு சாலமன் கூட்டணி என்றாலே பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை டி.இமான் இந்த படத்தில் ஓரளவுக்குத்தான் நிறைவேற்றியிருக்கிறார் என்று சொல்ல முடியும். ஒருசில பாடல்களை தவிர, மற்ற பாடல்கள் எல்லாம் சுமார்தான். பின்னணி இசையில் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளில் பலே சொல்ல வைக்கிறது.
மொத்தத்தில் ‘கயல்’ மயில் போல அழகு.
என்றுமே ஆனந்தம் – திரை விமர்சனம்
மயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் யுவராணியின் மகனாக வளர்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். தந்தையை இழந்த மகேந்திரன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது யுவராணியின் கனவு.
மகேந்திரனும் நன்றாகப் படித்து பிளஸ்-2 பாஸாகி, தாயின் ஆசையை நிறைவேற்ற மருத்துவ படிப்புக்காக காத்திருக்கிறார்.
ஒருநாள் நண்பருடன் கடற்கரையில் சென்று கொண்டிருக்கும் போது நாயகி ஸ்வேதா, தற்கொலை செய்வதற்காக கடலில் குதிக்கிறார். அவரை மகேந்திரன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்கிறான்.
பிறகு நண்பனிடம் இதைப் பற்றி கூறுகிறான். அதற்கு நண்பன், அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காதல் தான் காரணமாக இருந்திருக்கும் என்று கூறுகிறான்.
இதை ஏற்காத மகேந்திரன், ஸ்வேதாவின் தோழியின் மூலம் ஸ்வேதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை தெரிந்து கொள்ள செல்கிறான். அங்கு ஸ்வேதாவின் தோழி, உண்மையை கூறுகிறார். ‘ஸ்வேதா காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை.
அவளுக்கு இரண்டு மாமாக்கள். இருவரும் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ள தீவிர முயற்சி செய்கிறார்கள். அது அவளுக்கு பிடிக்கவில்லை.
இதற்கு ஸ்வேதாவின் சித்தியும் உடந்தையாக இருக்கிறாள்’ என்று மகேந்திரனிடம் கூறுகிறாள் தோழி.
மறுநாள் மகேந்திரன், ஸ்வேதாவை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறான். அங்கு ஸ்வேதா ‘என்னை ஏன் காப்பாற்றினீர்கள்?’ என்று திட்டுகிறாள்.
அவருக்கு பொறுமையாக அறிவுரைகளை கூறி விட்டு செல்கிறான் மகேந்திரன். இதிலிருந்து ஸ்வேதாவிற்கு மகேந்திரன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
மற்றொரு நாள் மகேந்திரன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை கோவிலில் விட்டு செல்கிறான். இதை ஸ்வேதா எடுத்து வந்து மகேந்திரனிடம் தருகிறாள்.
அதிலிருந்து மகேந்திரன் ஸ்வேதா மீது காதல் வயப்படுகிறான்.
இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஸ்வேதாவின் மாமன்கள் ஸ்வேதாவை திருமணம் செய்வதில் தீவிரம் காண்பித்து வருகிறார்கள். ஸ்வேதாவும் மகேந்திரனும் காதல் செய்வது மாமன்களுக்கு தெரிய வருகிறது.
இதனால் கோபமடையும் மாமன்கள் ஸ்வேதாவை கண்டித்து விட்டு மகேந்திரனை தேடிச் சென்று அடித்து விடுகிறார்கள். ஸ்வேதா தன் வீட்டிற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறாள். அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் மகேந்திரன் ஸ்வேதாவை தேடி சென்னைக்கு செல்கிறான்.
இறுதியில் ஸ்வேதாவை தேடிக் கண்டுபிடித்து காதலில் ஜெயித்தானா? தன் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றினானா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், நடனம், காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிறப்பாக தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக காதல் வயப்பட்டவுடன் சந்தோஷமடையும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் சென்டிமென்ட் காட்சிகளிலும் நடிப்பால் மிளிர்கிறார். நாயகி ஸ்வேதா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிற்பாதியில் வரும் ராம்ஜி அவருக்கே உரிய பாணியில் நடனம் நடிப்பு என திறம்பட செய்திருக்கிறார். மகேந்திரனின் நண்பர்களாக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். இவர்களின் டீக்கடை காமெடி பெரிதாக எடுபடவில்லை.
வில்லியம் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. கண்மணி ராஜாவின் இசையில் 2 பாடல்கள் ரசிக்கலாம்.
காதல் கதையை மையமாக வைத்து அதில் வாழ்க்கையை ரசித்தால் என்றுமே ஆனந்தமாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர் விவேகபாரதியை பாராட்டலாம்.
ஆனால், திரைக்கதையில் வலுவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. சில இடங்களில் காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதை சரி செய்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘என்றுமே ஆனந்தம்’ ஆனந்தம்.
கப்பல் – திரை விமர்சனம்
ஒரு கிராமத்தில் 5 சிறுவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதில் ஒருவன் நாயகன் வைபவ். இந்த 5 சிறுவர்களும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றார்கள்.
அந்த கிராமத்தில் கெத்தாக வாழ்ந்து வரும் ரோபோ சங்கரை இவர்களுக்கு ரோல் மாடலாக நினைத்து வருகிறார்கள்.
ஒருநாள் ரோபோ சங்கர் தாடி வைத்து சோகமாக இருக்கிறார். அப்போது ஒருவர் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்க, அதற்கு ரோபோ சங்கர், கல்யாணம் செய்ததால் நான் நல்ல நண்பர்களை இழந்து விட்டேன். நண்பர்களை இழக்க கூடாது என்றால் கல்யாணம் செய்யக் கூடாது என்று கூறுகிறார்.
இதை கேட்கும் சிறுவர்கள், நாமும் பிரிந்து விடக்கூடாது என்பதால் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று அனைவரும் சத்தியம் செய்துகொள்கிறார்கள்.
ஆனால், வைபவ் மட்டும் சத்தியம் செய்ய மறுக்கிறார். பின்னர் நண்பர்கள் எல்லாம் வைபவை வலுக்கட்டாயமாக சத்தியம் செய்ய வைக்கிறார்கள்.
பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்கிறார்கள். அங்கு வைபவ் ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார். அதை நண்பர்கள் கெடுத்து விடுகிறார்கள்.
இதன்பிறகு வைபவ் சென்னைக்கு சென்று ஒரு பெண்ணை காதலித்து ஊர் சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். இதற்காக நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு செல்கிறார்.
சென்னையில் விடிவி கணேஷ் வீட்டில் தங்குகிறார் வைபவ். வேலை செய்து வரும் விடிவி கணேஷ், பெண்களுடன் ஜாலியாக பழகி வருகிறார். இதனால் ஒரு பெண்ணுடன் பழக வேண்டும் என்று கணேஷிடம் ஐடியா கேட்கிறார் வைபவ்.
அதற்கு அவர் பப்பிற்கு சென்றால் அங்கு நிறைய பெண்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பெண்ணை நீ தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறார்.
அதன்படி வைபவ்வும் பப்பிற்கு செல்கிறார். அங்கு பெண்களுடன் வந்தால் தான் உள்ளே அனுமதி என்று கூறுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பப்பின் வாசலில் நிற்கிறார்.
அப்போது நாயகி சோனம் பாஜ்வாவை பார்க்கிறார். அவரும் தனியாக வருவதால் அவரிடம் பேசி இருவரும் பப்பிற்கு செல்கிறார்கள்.
அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருக்கிறார்கள். அப்போது சோனம் பாஜ்வாவிடம் பேசி அவருடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் விலாசத்தையும் பெற்றுக் கொள்கிறார்.
மறுநாள் சோனம் பாஜ்வாவை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார் வைபவ். அங்கு அவரை யார் என்றே தெரியாது என்று கூறுகிறார் சோனம்.
முதல் நாள் நடந்த விஷயங்களை ஞாபகபடுத்த முயற்சி செய்கிறார். சோனம் பாஜ்வா போதையில் இருந்ததால் யார் என்று தெரியாது என்று கூறி அவரை அனுப்புகிறார்.
ஆனால், சோனம் பாஜ்வாவை காதலித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து அவர் பின்னாலேயே அலைகிறார். இதனால் கடுப்பாகிறார் சோனம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் எண்ணி வைபவிடம் பேசுகிறார்.
அதற்கு வைபவ் என்னிடம் 2 நாட்கள் பழகிப்பாருங்கள் என்று கூறி இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது.
இந்நிலையில் ஊரில் இருந்து நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். வைபவ் காதலித்து வருவது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் நண்பர்கள் வைபவ் காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.
கல்யாணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நண்பர்கள் வைபவின் காதலை பிரித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் வைபவ் முழுநீள நகைச்சுவை படத்தில் கதாநாயகன் பொறுப்பேற்று சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களான கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகள் காதலுக்காக அடிவாங்குவதும் இவர் செய்யும் சேட்டைகள் என ரசிக்கும் படி செய்திருக்கிறார்.
நாயகி சோனம் பாஜ்வா முதல் படத்திலேயே மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். அழகாக வந்து கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். நண்பர்களாக நடித்திருக்கும் கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
முழு நீள நகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் என்று பாடல் காட்சிகளில் தெரிகிறது.
நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கப்பல்’ நீண்ட பயணம்.