சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான சோனாக்ஷி சின்ஹா, லிங்கா படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அவர் அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்:
தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதற்கு, இதற்கு முன்பும் உங்களுக்கு வாய்ப்புகள் வந்திருக்கும். ஆனால் நீங்கள் ‘லிங்கா’வைத் தேர்வு செய்தது ரஜினிக்காக மட்டும்தானா?
‘தபாங்’கில் நான் நடித்ததில் இருந்து எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் நான் பாலிவுட்டில் ஏற்றுக்கொண்ட படங்கள் காரணமாக என்னால் அந்த வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை.
ஒரு வழக்கமான நடிகையாகத் தோன்ற விரும்பாவிட்டாலும், என்னால் எப்படி ‘தபாங்’ படத்தை மறுக்கமுடியவில்லையோ, அதைப் போலத்தான் ‘லிங்கா’வும். தென்னிந்திய சினிமாவில் எனக்கு இதைவிட ஒரு நல்ல பிரவேசம் அமைந்திருக்க முடியாது.
இந்தப் படத்தில் நான் நடிக்க ரஜினியும் ஒரு முக்கியக் காரணம். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து நடித்ததை பெரும் கவுரவமாகக் கருதுகிறேன்.
‘லிங்கா’ உங்களின் முதல் தென்னிந்திய மொழிப் படமாக இருந்தாலும், ஏற்கனவே நீங்கள் 5 தென்னிந்திய மொழிப் படங்களின் ‘ரீமேக்’குகளில் நடித்திருக்கிறீர்கள் அல்லவா?
ஆமாம். நான் பல ‘ரீமேக்’ படங்களில் நடித்திருக்கிறேன். பிரபுதேவா, ஏ.ஆர். முருகதாஸ் என்று தென்னிந்திய இயக்குநர்களின் இயக்கத்திலும் நடித்திருக்கிறேன். எனவே, தென்னிந்தியத் திரையுலகத் தொடர்பு ஏற்கனவே எனக்கு இருக்கிறது. நான் பேசாத, எனக்குப் புரியாத தமிழில் ‘பேசி’ நடிப்பதுதான் எனக்கு இருந்த ஒரே சவால்.
ரஜினிகாந்தை ஒரு சூப்பர் ஸ்டாராக பிடித்திருக்கிறதா அல்லது சிறந்த மனிதராகப் பிடித்திருக்கிறதா?
எல்லோருக்கும் ஒரு சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்தை பிடிக்கும். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமையும், மனிதத்தன்மையும்தான். அவர் ஓர் அற்புதமான மனிதர்.
அறுபது வயதைத் தாண்டிய ஒருவருடன் கதாநாயகியாக நடிப்பது குறித்து யோசித்தீர்களா?
ஆரம்பத்தில் அதுகுறித்த எண்ணம் என் மனதில் ஓடியது உண்மை. ஆனால் ரஜினிகாந்துக்கும், எனக்கும் படத்தில் சங்கடமான எந்த விஷயமும் இல்லை.
அவர் எனது தந்தையின் நண்பர் என்பதால், நான் சங்கடப்படுகிற மாதிரி எதுவும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால் கடைசியில், நாங்களெல்லாம் தொழில்முறை நடிகர்கள் என்பதால், எதுகுறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறோம் என்பதைத் தவிர ‘லிங்கா’வில் நீங்கள் ரசித்த விஷயம்?
புதிய தோற்றத்தில், ஒரு புதிய மொழி பேசி நடித்ததும், முற்றிலும் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தன.
1940–ம் ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரமாக நீங்கள் ‘லிங்கா’வில் நடித்திருக்கிறீர்கள். ஏற்கனவே ஒரு பழைய கால பாத்திரமாக ‘லூட்டேரா’வில் நடித்திருந்தீர்கள். அதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
‘லூட்டேரா’ படத்தில் ஒரு வங்காளப் பெண்ணாக தீவிரமான காதல் கதையில் நடித்திருந்தேன். ‘லிங்கா’வில் ஒரு தென்னிந்தியப் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதில் தேசபக்தி அம்சமும் உண்டு.
ஏ.ஆர். ரகுமான் இசையில் முதல்முறையாக நடித்திருப்பது எப்படி இருக்கிறது?
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எனது சினிமா வாழ்க்கையையே ஏ.ஆர். ரகுமான் இசையுடன் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறேன். ஆனால் எனது முதல் தமிழ்ப் படத்திலாவது அந்த வாய்ப்பு அமைந்ததே என்று ஆனந்தப்படுகிறேன்.