ஜெர்மன் ஃபிராங்க்ஃபுர்ட்டில் கடைகள் சூறையாடப்பட்டு தீவைப்பு!

 

ஜெர்மனியில் வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கட்டாய ராணுவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஜென் ஜி ரெகெல்ட்’ என்ற அமைப்பின் சார்பில் நாட்டின் 34 நகரங்களில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. ஃபிராங்க்ஃபுர்ட் நகர மையப் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் அமைதிப் பேரணி கலவரமாக மாறியது. முகமூடி அணிந்த நபர்கள் கண்ணாடிகளை உடைத்துத் துப்பாக்கிக் கடை, காலணிக் கடை மற்றும் வாசனைத் திரவியக் கடைகளுக்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடினர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த முற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவசரக் காலப் பணியாளர்கள் மீது மொலோடோவ் ரக எரிகுண்டுகள் மற்றும் பட்டாசுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையைக் கலைக்கக் காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்தும் மிளகு தெளிப்பானைப் பயன்படுத்தியும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சூறையாடப்பட்ட துப்பாக்கிக் கடையில் இருந்து இரண்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஹெஸ்ஸே மாநில உள் துறை அமைச்சர் ரோமன் போசெக், தீவிர இடதுசாரிக் குழுக்கள் இந்த அமைதியான போராட்டத்திற்குள் ஊடுருவி வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பொதுமக்களும் வழிப்போக்கர்களும் நகர மையப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு ஃபிராங்க்ஃபுர்ட் காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.அரசுச் செய்திகள்

தற்போது ஃபிராங்க்ஃபுர்ட் நகரின் முக்கிய வணிக வீதிகள் மூடப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் வான்வழி கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நகரில் நிலையை சீரமைக்கவும், வன்முறையில் ஈடுபட்ட பிற நபர்களை அடையாளம் காணவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.