துயரத்தின் பின்னணி!
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திலிருந்து வெளியே வந்த இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களை நோக்கி நடந்துகொண்டிருந்தார். அப்போது அவரைப் பாதுகாக்க வேண்டிய இரண்டு பாதுகாவலர்களே துப்பாக்கிகளை எடுத்துச் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து வீழ்ந்தார் இந்திரா காந்தி எனும் பேராளுமையாளர்.. இந்தியா மட்டுமல்ல.. உலகமே அதிர்ந்த நாள் இன்றுதான்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர். 1971 போரில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் உருவாக முக்கியப் பங்காற்றியவர். வங்கிகளை நாட்டுடைமையாக்கியவர். அதேநேரத்தில் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து ஜனநாயக உரிமைகளை முடக்கியவர்.
இப்படி இந்திய அரசியலில் அழிக்க முடியாத தடங்களைப் பதித்த இந்திரா காந்தியின் வாழ்க்கை, அவர் நம்பிய பாதுகாவலர்களின் துப்பாக்கிக் குண்டுகளால் முடிவுக்கு வந்தது.
அப்போது அவருக்கு வயது 66.
இந்திரா காந்தியின் படுகொலை இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட அதிர்ச்சியான விஷயம், அவரைப் பாதுகாக்க வேண்டிய சீக்கியப் பாதுகாவலர்களான பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகிய இருவரே அவரைச் சுட்டுக் கொன்றதுதான்.
இந்திரா காந்தியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த அந்த இருவருக்கும் அவர் மீது அப்படி என்ன கோபம்? நாட்டின் பிரதமரையே கொலை செய்யும் அளவுக்கு அவர்களைத் தூண்டியது எது?
இதற்கான பதில், படுகொலை நடப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த சம்பவத்தில் இருக்கிறது.
1984 ஜூன் மாதம் சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமான பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்ப இந்திரா காந்தி உத்தரவிட்டார். ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கையில் சீக்கிய மதத் தலைவரான ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய இந்திரா காந்தியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரிடம் உருவானது. இந்தப் பின்னணியில்தான் இருவரும் திட்டமிட்டு இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றதாக வழக்கு விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்ப வேண்டிய நிலைமை இந்திரா அம்மையாருக்கு ஏன் ஏற்பட்டது? பஞ்சாபில் அப்போது என்ன நடந்துகொண்டிருந்தது? பிந்தரன்வாலே யார்? காலிஸ்தான் என்ற தனிநாட்டுக் கோரிக்கைக்கும் இந்த மோதலுக்கும் என்ன தொடர்பு?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் இந்திராவின் படுகொலைக்கான காரணமும் இருக்கிறது.
1917 நவம்பர் 19-ந் தேதி அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு, கமலா நேரு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்ஷினி.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவரான நேருவின் குடும்பத்தில் வளர்ந்ததால் சிறுவயதிலேயே அரசியல் சூழலை மிக நெருக்கமாக அறிந்துகொண்டார். மற்ற குழந்தைகளுக்குப் பள்ளியும் விளையாட்டும் முக்கியமானதாக இருந்த வயதில், இந்திராவின் வீட்டில் விடுதலைப் போராட்டமும் சிறைவாசமும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன.
1930-களில் விடுதலைப் போராட்டத்துக்கு உதவும் வகையில் சிறுவர்களை ஒருங்கிணைக்கும் வானர சேனை அமைப்பில் செயல்பட்டார். 1942-ல் பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பின்னணியில் சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்திரா காந்தி – பெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என இரண்டு மகன்கள் பிறந்தனர்.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஜவஹர்லால் நேரு பிரதமரானார். நேருவின் அரசியல் பணிகளுக்கு உதவிய இந்திரா காந்தி, பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்தார்.
1959-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கப்பட்டார் இந்திரா காந்தி; 1964-ல் நேரு மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரது அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா காந்தி பொறுப்பேற்றார்.
1966 ஜனவரியில் சாஸ்திரி திடீரென மறைந்தார். அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவரான மொரார்ஜி தேசாயை எதிர்த்து இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஜனவரி 24-ந் தேதி இந்தியாவின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார்.
நேருவின் மகள் என்பதால் இந்திராவுக்கு அரசியல் பாதை எளிதாக அமைந்துவிடவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர்களுடனேயே அதிகாரப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அவர்களால் எளிதில் கட்டுப்படுத்தப்படுவார் என்று கருதப்பட்ட இந்திரா, சில ஆண்டுகளிலேயே அவர்களுக்குச் சவாலாக மாறினார்.
1967 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்தாலும் அதன் செல்வாக்கு குறைந்திருந்தது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. காங்கிரஸுக்குள் இந்திரா காந்திக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. 1969 ஜூலை 19-ந் தேதி 14 பெரிய வணிக வங்கிகளை இந்திரா காந்தி அரசு நாட்டுடைமையாக்கியது.
வங்கிச் சேவைகளைப் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புறச் செல்வந்தர்களிடம் மட்டும் குவியவிடாமல், விவசாயிகள், சிறு தொழில்கள், கிராமப்புற மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் அறிவிக்கப்பட்ட நோக்கம்.
இந்த முடிவு இந்திரா காந்திக்கு இடதுசாரி அரசியல் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதே ஆண்டில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. இந்திரா காந்தி தலைமையிலான அணியும், மூத்த தலைவர்கள் தலைமையிலான அணியும் தனித்தனியாகச் செயல்பட்டன.
1971 மக்களவைத் தேர்தலில் ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திரா காந்தி பெரும் வெற்றி பெற்றார். முன்னாள் சமஸ்தான மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தனிப்பட்ட மானியங்களை ஒழிக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தமும் அவரது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
பசுமைப் புரட்சியின் விரிவாக்கம், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவையும் அவரது ஆட்சிக்காலத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன. ஆனால் பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாடு அதிகரித்தது, நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிந்தன என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம் 1971 இந்தியா – பாகிஸ்தான் போர். அப்போது பாகிஸ்தான், மேற்குப் பாகிஸ்தான் மற்றும் கிழக்குப் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது. 1970 தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் பெரும்பான்மை பெற்றது. ஆனால் அதிகாரத்தை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்கள் மறுத்ததால் அரசியல் நெருக்கடி உருவானது.
1971 மார்ச் மாதம் கிழக்குப் பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் கடுமையான ஒடுக்குமுறையைத் தொடங்கியது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வந்தனர். குடும்பங்கள் பிரிந்தன. சொந்த ஊரையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. சுமார் ஒரு கோடி அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்ததாகக் கணக்கிடப்பட்டது.
இந்திரா காந்தி அரசு அகதிகளுக்கான உதவிகளை மேற்கொண்டதுடன், வங்கதேச விடுதலைக்காகப் போராடிய முக்தி பாஹினி அமைப்புக்கும் ஆதரவளித்தது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்த நிலையில், 1971 ஆகஸ்டில் சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டது.
1971 டிசம்பர் 3-ந் தேதி இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியது. டிசம்பர் 16-ந் தேதி கிழக்குப் பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. வங்கதேசம் தனிநாடாக உருவானது. ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும் வெற்றி பெற்ற இந்திரா காந்தியின் அரசியல் செல்வாக்கு உச்சத்துக்குச் சென்றது.
1972-ல் பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவுடன் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1974 மே 18-ந் தேதி ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இவ்வாறு வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, அணுசக்தி ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகளை எடுத்த தலைவராக இந்திரா காந்தி உருவெடுத்தார்.
ஆனால் வெளிநாட்டுப் போரில் வெற்றிபெற்ற இந்திரா காந்தி, அடுத்த சில ஆண்டுகளில் சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.
1971 போருக்குப் பிறகு இந்திரா காந்தியின் அரசியல் செல்வாக்கு உயர்ந்திருந்தாலும், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது. பணவீக்கம், வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்தது. குஜராத்தில் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அரசுக்கு எதிரான இயக்கம் வலுப்பெற்றது. 1974-ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நடைபெற்ற நாடு தழுவிய ரயில்வே வேலைநிறுத்தமும் மத்திய அரசுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
இந்த நிலையில் 1975 ஜூன் 12-ந் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்திரா காந்தி 1971 தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரது தேர்தலைச் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி இரவு நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் இந்திரா காந்தி அம்மையார்.. அவரது வரலாற்றில் மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்திலும் கறுப்பு பக்கங்களாக காலத்தால் அழிக்கவே முடியாத துயரை உருவாக்கிவிட்டார் இந்திரா அம்மையார்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குப் பெற்றார்.
அவரது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள் கடுமையான மனித உரிமை மீறல்களாக விமர்சிக்கப்பட்டன. வறுமையை ஒழிப்போம் என்று மக்களிடம் வாக்குக் கேட்ட இந்திரா காந்தியின் ஆட்சியில்தான், ஏழை மக்களின் குடியிருப்புகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன. நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய குடும்பத்தில் பிறந்தவரின் ஆட்சியில்தான், சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் உரிமை முடக்கப்பட்டது. இந்த முரண்பாடுகளை இந்திய அரசியல் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியாது.
1977-ல் நெருக்கடி நிலையை நீக்கிய இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்திரா காந்தியும் ரேபரேலி தொகுதியில் தோற்றார். மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்த இந்திரா காந்தியை, அடுத்த தேர்தலில் மக்களே அதிகாரத்திலிருந்து அகற்றினர். இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அப்போது பலரும் கருதினர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் அவர் மீண்டும் பிரதமரானார்.
ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களால் அதன் ஆட்சி நீடிக்கவில்லை. 1980 ஜனவரி மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது. ஜனவரி 14-ந் தேதி அவர் மீண்டும் பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால் அதே ஆண்டு ஜூன் 23-ந் தேதி அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். அரசியலில் எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்த இந்திரா காந்திக்கு, மகன் சஞ்சய் காந்தியின் மரணம் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பாக அமைந்தது. நாட்டின் பிரதமராக எத்தனையோ முடிவுகளை எடுத்தவரால், தனது மகனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அரசியலில் இருந்து விலகியிருந்த மூத்த மகன் ராஜீவ் காந்தி பின்னர் அரசியலுக்கு வந்தார். இந்திரா காந்தி மீண்டும் பிரதமரான காலகட்டத்தில்தான் பஞ்சாபில் சீக்கிய அரசியல் இயக்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது.
காலிஸ்தான் கோரிக்கையின் வரலாற்றை 1980-களிலிருந்து மட்டும் தொடங்க முடியாது. சீக்கிய மதம் 15-ஆம் நூற்றாண்டில் குரு நானக்கின் போதனைகளிலிருந்து உருவானது. பின்னர் சீக்கிய மத குருக்களின் வழிகாட்டுதலில் தனித்த மத, சமூக அடையாளத்தைப் பெற்றது. 19-ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் தலைமையில் பஞ்சாபை மையமாகக் கொண்ட சீக்கியப் பேரரசு செயல்பட்டது. 1849-ல் இந்தப் பேரரசின் பகுதிகளை பிரிட்டிஷார் தங்கள் ஆட்சியுடன் இணைத்தனர்.
1920-களில் சீக்கிய வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக உரிமைக்காக குருத்வாரா சீர்திருத்த இயக்கம் உருவானது. இதன் பின்னணியில் ஷிரோமணி அகாலி தளம், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி ஆகிய அமைப்புகள் உருவாகின. 1947 இந்தியப் பிரிவினையின்போது பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சீக்கியர்களின் முக்கிய வரலாற்று நகரமான லாகூர் பாகிஸ்தானுக்குச் சென்றது. சீக்கிய மதத்தின் முதல் குருவான குரு நானக் பிறந்த நன்கானா சாஹிப்பும் பாகிஸ்தானில் அமைந்தது. பிரிவினைக் கலவரங்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைத்துச் சமூகங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன.
ஒரே நிலப்பரப்பில் தலைமுறைகளாக வாழ்ந்த மக்கள் மதத்தின் பெயரால் பிரிக்கப்பட்டனர். ஒரே இரவில் எல்லைகள் மாறின. ஆனால் அந்தப் பிரிவினை ஏற்படுத்திய காயங்கள் அவ்வளவு எளிதாக மறைந்துவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று அகாலி தளம் போராடியது. 1966-ல் பஞ்சாப் மறுசீரமைக்கப்பட்டு பஞ்சாப், ஹரியானா எனத் தனித்த மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் சண்டிகர் நகரின் உரிமை, நதிநீர்ப் பங்கீடு, மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தன.
1973-ல் அகாலி தளம் ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானத்தை உருவாக்கியது. இதில் பஞ்சாபுக்கு அதிக மாநில சுயாட்சி, சண்டிகரைப் பஞ்சாபுடன் இணைத்தல், நதிநீர் உரிமைகள், சீக்கியர்களின் மத, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அகாலி தளத்தின் மாநில சுயாட்சிக் கோரிக்கையிலிருந்து வேறுபட்டு, இந்தியாவிலிருந்து பிரிந்து சீக்கியர்களுக்கெனத் தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற காலிஸ்தான் கோரிக்கையைச் சில அமைப்புகள் முன்னெடுத்தன.
1970-களில் ஜக்ஜித் சிங் சவுகான் போன்ற தலைவர்கள் வெளிநாடுகளிலும் இந்தக் கோரிக்கையைப் பரப்பினர். பஞ்சாப்புக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்டவர்களும் இருந்தனர். இந்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடு வேண்டும் என்று கேட்டவர்களும் இருந்தனர். இந்த இரண்டு கோரிக்கைகளும் ஒன்றல்ல. ஆனால் பஞ்சாபில் அரசியல் மோதல் தீவிரமடைந்தபோது இந்த வேறுபாடும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதே காலகட்டத்தில் பஞ்சாபில் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்ற மதப் பிரசாரகர் அரசியல் செல்வாக்குப் பெறத் தொடங்கினார்.
யார் இந்த பிந்தரன்வாலே?
1947-ல் பிறந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, சீக்கிய மதப் போதனை அமைப்பான தம்தமி தக்சாலின் தலைவராக 1977-ல் பொறுப்பேற்றார். சீக்கிய இளைஞர்கள் மத ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும், போதைப் பழக்கங்களைக் கைவிட வேண்டும், சீக்கிய மத அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். அவரது பேச்சுகள் பஞ்சாபின் கிராமப்புற இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற்றன. பஞ்சாபில் அகாலி தளத்தின் அரசியல் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காக பிந்தரன்வாலேயை காங்கிரஸின் சில தலைவர்கள் ஆரம்பத்தில் ஊக்குவித்ததாக வரலாற்று ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக சஞ்சய் காந்தி, பின்னாளைய ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் ஆகியோரின் பெயர்கள் இந்த விவாதத்தில் இடம்பெறுகின்றன. அகாலி தளத்துக்குப் போட்டியாக ஒரு மதத் தலைவரின் செல்வாக்கைப் பயன்படுத்த நினைத்ததாகக் கூறப்படும் காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் கணக்கு, பின்னாளில் பஞ்சாபின் மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்றாக மாறியது.
1978 ஏப்ரல் 13-ந் தேதி அமிர்தசரஸில் நிரங்காரி அமைப்பினருக்கும் மரபுவழிச் சீக்கியக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 13 சீக்கியர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பஞ்சாபில் மதரீதியான பதற்றம் அதிகரித்தது. 1980-ல் நிரங்காரி தலைவர் குர்பச்சன் சிங் படுகொலை செய்யப்பட்டார். 1981-ல் பஞ்சாப் கேசரி பத்திரிகை ஆசிரியர் லாலா ஜகத் நாராயண் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிந்தரன்வாலே கைது செய்யப்பட்டு, பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
1982-ல் அகாலி தளம் தொடங்கிய தரம் யுத் மோர்ச்சா போராட்டத்தில் பிந்தரன்வாலேயும் இணைந்தார். பஞ்சாபின் மாநில சுயாட்சி, நதிநீர் உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. அதேவேளையில் பஞ்சாபில் ஆயுத வன்முறைகளும் அதிகரித்தன. 1983 ஏப்ரல் 25-ந் தேதி அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்த பஞ்சாப் காவல்துறை டிஐஜி ஏ.எஸ். அத்வால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிந்தரன்வாலே தனது ஆதரவாளர்களுடன் பொற்கோயில் வளாகத்தில் தங்கியிருந்தார். பின்னர் அகால் தக்த் பகுதியில் ஆயுதங்களுடன் அவரது ஆதரவாளர்கள் நிலைகொண்டனர். முன்னாள் இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் ஷாபேக் சிங், பிந்தரன்வாலேயின் ஆதரவாளர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் ராணுவப் பயிற்சியிலும் உதவியதாகக் கூறப்படுகிறது. பஞ்சாபில் நிலைமை மோசமடைந்த நிலையில் 1983 அக்டோபரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1984-ல் பஞ்சாபில் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. பொற்கோயில் வளாகத்தில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து தாக்குதல்கள் திட்டமிடப்படுவதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியது. இந்திரா காந்தி அரசு அகாலி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும் அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் பொற்கோயிலுக்குள் இருந்த பிந்தரன்வாலே மற்றும் ஆயுதக் குழுக்களை வெளியேற்ற இந்திய ராணுவத்தை அனுப்ப இந்திரா காந்தி முடிவெடுத்தார்.
இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் “புளூ ஸ்டார்” என்று பெயரிடப்பட்டது. 1984 ஜூன் 1-ந் தேதி தொடங்கிய நடவடிக்கையின் முக்கியத் தாக்குதல் ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்துக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது. பிந்தரன்வாலேயின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்ததால் ராணுவம் டாங்கிகளையும் பயன்படுத்தியது. அகால் தக்த் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. ஜூன் 6-ந் தேதி பிந்தரன்வாலே, ஷாபேக் சிங் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் 83 ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று பல்வேறு தரப்பினர் கூறினர். துல்லியமான எண்ணிக்கை தொடர்பான சர்ச்சை இன்றும் நீடிக்கிறது.
இந்திய அரசைப் பொறுத்தவரை அது ஆயுதக் குழுக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை. ஆனால் சீக்கியர்களில் பலருக்கு அது தங்களது புனிதமான வழிபாட்டுத் தலத்தின் மீதான தாக்குதல்- அரச பயங்கரவாதம். பிந்தரன்வாலேயின் அரசியலை ஆதரிக்காத சீக்கியர்கள்கூட புனிதத் தலத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையை விமர்சித்தனர். இந்திரா காந்தி அரசு, நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதக் குழுக்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விளக்கமளித்தது.
ஆனால் ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்திருக்க முடியாதா? பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருக்க முடியாதா? பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்ற கேள்விகள் எழுந்தன. ராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது. பிந்தரன்வாலேயும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் பொற்கோயில் தாக்குதல் ஏற்படுத்திய கோபம்.. வலி.. அத்துடன் முடிந்துவிடவில்லை.
ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு இந்திரா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருந்தது. அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உளவுத்துறை, இந்திரா காந்தியின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவில் இருந்த சீக்கியர்களை வேறு பணிகளுக்கு மாற்றப் பரிந்துரைத்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மத அடையாளத்தின் அடிப்படையில் பாதுகாவலர்களை மாற்றுவது மதச்சார்பற்ற நாட்டின் கொள்கைக்கு எதிரானது என்று இந்திரா காந்தி கருதினார். அதனால் அந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. தன்னிடம் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் பணியாற்றிய பியாந்த் சிங் மீதும் இந்திரா காந்தி நம்பிக்கை வைத்திருந்தார். அரசியலில் பலரையும் சந்தேகித்த இந்திரா காந்தி, தனது உயிரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்தவர்களை நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கையே பின்னர் பெரும் கேள்விக்குள்ளானது.
1984 அக்டோபர் 30-ந் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திரா காந்தி உரையாற்றினார். தனது உயிர் குறித்து அவர் பேசிய வார்த்தைகள், அடுத்த நாள் நடந்த படுகொலைக்குப் பிறகு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றன.
“நான் இன்று இங்கே இருக்கிறேன். நாளை இல்லாமலும் போகலாம்” (I am here today, I may not be here tomorrow) என்று பேசிய இந்திரா காந்தி, தான் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டுக்குச் சேவை செய்வதைத் தொடர்வேன் என்றும், தனது கடைசி மூச்சுவரை மக்களுக்காகப் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
“எனது கடைசி மூச்சுவரை தொடர்ந்து சேவை செய்வேன். நான் இறக்கும்போது, எனது ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் இந்தியாவுக்குப் புத்துயிர் அளித்து அதை வலுப்படுத்தும் என்று என்னால் சொல்ல முடியும்” (I shall continue to serve until my last breath and when I die, I can say, that every drop of my blood will invigorate India and strengthen it) என்றும் அந்த உரையில் தெரிவித்தார்.
அந்த உரையை நிகழ்த்தியபோது மறுநாள் காலை தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பது இந்திரா காந்திக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது கடைசிப் பொதுக்கூட்ட உரை, அடுத்த நாளே வேறொரு அர்த்தத்தைப் பெற்றது.
1984 அக்டோபர் 31-ந் தேதி காலை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் சாலை இல்லத்தில் இந்திரா காந்தி வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார். பிரிட்டிஷ் நடிகரும் ஆவணப்பட இயக்குநருமான பீட்டர் உஸ்தினோவுக்கு நேர்காணல் அளிப்பதற்காக அவர் சென்றுகொண்டிருந்தார். காலை சுமார் 9.20 மணியளவில் அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டனர். பியாந்த் சிங் தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். சத்வந்த் சிங் தானியங்கித் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. பிற்பகல் 2.23 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்திரா காந்தி உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பியாந்த் சிங் மற்ற பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சத்வந்த் சிங் உயிருடன் பிடிபட்டார். இந்தப் படுகொலைச் சதியில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட கேஹர் சிங்கும் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின் முடிவில் சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1989 ஜனவரி 6-ந் தேதி இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய இந்திரா காந்தியைப் பழிவாங்குவதற்காக இந்தப் படுகொலை நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. நாட்டின் பிரதமரைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அவரையே கொன்ற சம்பவம், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திரா காந்தி மறைந்ததைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றார்.
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. 1984 அக்டோபர் 31-ந் தேதி மாலையிலேயே தாக்குதல்கள் தொடங்கின. நவம்பர் 1 முதல் 3 வரை வன்முறை தீவிரமடைந்தது. சீக்கியர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. ஏராளமானோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாகப் பின்னர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைகள் தன்னிச்சையாக மட்டும் நடைபெறவில்லை என்றும், சில காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்முறையைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கூறிய ஒரு வாசகம், 42 ஆண்டுகளுக்குப் பிறகும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
1984 நவம்பர் 19-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜீவ் காந்தி, இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாட்டில் கலவரங்கள் நடந்ததாகக் குறிப்பிட்டார். அப்போது, “ஒரு பெரிய மரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்” (When a big tree falls, the earth shakes) என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டதை ஒரு இயல்பான எதிர்வினையாக ராஜீவ் காந்தி சித்தரித்ததாகக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்திரா காந்தியின் படுகொலைக்கு நீதி கேட்கும் அதேநேரத்தில், எந்தக் குற்றமும் செய்யாத சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியையும் ராஜீவ் காந்தியின் அந்த வாசகம் எழுப்பியது.
இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஆணையம், பல தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கண்டறிந்தது. சில காங்கிரஸ் தலைவர்கள் மீது மேலதிக விசாரணை நடத்தவும் பரிந்துரைத்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் சிலர் தண்டிக்கப்பட்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் தொடர்பான வழக்கிலும் தண்டனை வழங்கப்பட்டது.
இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் இரண்டு பேர். ஆனால் அவர்களது செயலுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் உயிரிழக்க நேர்ந்தது. தங்களது பிரதமரைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டிய சட்டம் இருந்த நாட்டில், எந்தக் குற்றமும் செய்யாத மக்களைப் பாதுகாக்க அந்தச் சட்டம் ஏன் தவறியது என்ற கேள்வி இன்றும் மிச்சமிருக்கிறது.
இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகும் நீடித்த பஞ்சாப் பிரச்சினை
ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கையில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டாலும் காலிஸ்தான் ஆயுத இயக்கம் முடிவுக்கு வரவில்லை. மாறாக, பொற்கோயில் ராணுவ நடவடிக்கையும், இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளும் பஞ்சாபில் பதற்றத்தை மேலும் அதிகரித்தன. 1985 ஜூலை 24-ந் தேதி பிரதமர் ராஜீவ் காந்தியும் அகாலி தளத் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவாலும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். சண்டிகர், நதிநீர்ப் பங்கீடு, பஞ்சாபின் அரசியல் கோரிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த ஒப்பந்தம் முயன்றது. ஆனால் அடுத்த மாதமே லோங்கோவால் படுகொலை செய்யப்பட்டார்.
1980-களின் இறுதியிலும் 1990-களின் தொடக்கத்திலும் பஞ்சாபில் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அதேவேளையில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1990-களின் நடுப்பகுதியில் ஆயுதக் கிளர்ச்சியின் தீவிரம் பெருமளவு குறைந்தது. இருப்பினும் காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கையைச் சில அமைப்புகள் வெளிநாடுகளில் இன்றும் முன்னெடுத்து வருகின்றன. இந்திரா காந்தி இந்திய அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்களை அவரது சாதனைகளை மட்டும் வைத்துப் புரிந்துகொள்ள முடியாது.
வங்கதேசம் உருவாக முக்கியப் பங்காற்றியவர் அவர்தான். நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து ஜனநாயக உரிமைகளை முடக்கியவரும் அவர்தான்.
வங்கிகளை நாட்டுடைமையாக்கி ஏழை மக்களுக்கும் வங்கிச் சேவைகளைக் கொண்டுசெல்ல முயன்றவர் அவர்தான். அவரது ஆட்சியில் ஏழைகளின் குடியிருப்புகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன என்பதும் வரலாறுதான். பஞ்சாபில் ஆயுத வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதும் அவரது முடிவுதான். அந்த முடிவுக்குப் பழிவாங்கும் நோக்கில் அவரது உயிரும் பறிக்கப்பட்டது.
1984 அக்டோபர் 31-ந் தேதி இந்திரா காந்தியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் எடுத்த முடிவுகள் ஏற்படுத்திய அரசியல் விவாதங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இந்திரா காந்தியின் 42-வது நினைவுநாளில் அவரது அரசியல் சாதனைகளை நினைவுகூரும் அதேநேரத்தில், 1975 எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலை, பஞ்சாப் பிரச்சினை, பொற்கோயில் ராணுவ நடவடிக்கை, 1984 சீக்கியர் படுகொலைகள் ஆகியவற்றையும் வரலாற்றிலிருந்தும் நினைவுகளில் இருந்தும் ஒதுக்கிவிட முடியாது.
இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல.
இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரில்தான். நோயிலிருந்து குணமடையாத அவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திரா காந்தியின்மீது கல் வீசி எறியப்பட்டு, அவரது மூக்கு எலும்பு உடைந்தது.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மதியம் புவனேஷ்வரில் இந்திரா காந்தி ஆற்றிய தேர்தல் உரையை வழக்கம்போல் தயாரித்தவர் அவரது தகவல் ஆலோசகரான எச்.ஒய்.சாரதா பிரசாத்.
ஆனால், தயாரிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆச்சரியப்படும் விதமாக தன் விருப்பப்படி பேச ஆரம்பித்துவிட்டார் இந்திரா காந்தி.
இந்திரா காந்தியின் உரை இதுதான்: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான் இறந்தாலும், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்”.
சில சமயங்களில் தற்செயலாக திடீரென்று வெளிவரும் வார்த்தைகள் எதிர்வரும் தினங்களை சூசகமாக குறிப்பதாக அமைந்துவிடும். அதுபோலவே இருந்தது இந்திராவின் சுய உரை.
“வன்முறை, மரணம் என்று குறிப்பிட்டு என்னை உலுக்கிவிட்டீர்கள்” என்று கூட்டத்திற்கு பிறகு ராஜ்பவனுக்கு திரும்பிய இந்திராகாந்தியிடம் மாநில ஆளுநர் பிஷம்பர்நாத் பாண்டே வருத்தப்பட்டார்.
நேர்மையான மற்றும் உண்மையான விடயங்களைப் பற்றியே தான் பேசியதாக இந்திரா காந்தி பதிலளித்தார்.
அன்று இரவு டெல்லி திரும்பிய இந்திரா காந்தி மிகவும் களைப்படைந்திருந்தார். அன்று இரவு இந்திராவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை.
தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த மருமகள் சோனியா காந்தி, அதிகாலை நான்கு மணிக்கு ஆஸ்துமாவுக்காக மருந்து எடுத்துக் கொள்வதற்காக குளியலறைக்கு சென்றார், அப்போதே இந்திரா காந்தி விழித்துக்கொண்டார்.
அப்போது இந்திரா காந்தி, மருந்து எடுத்துக்கொடுக்க தனக்கு உதவியதாக சோனியா காந்தி ‘ராஜீவ்’ என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நிலை மீண்டும் மோசமாகிவிட்டால், ‘எனக்கு ஒரு குரல் கொடுங்கள் நான் விழித்திருக்கிறேன்’ என்று இந்திரா, மருமகளிடம் கூறினாராம்.
காலை ஏழரை மணிக்கு இந்திரா காந்தி தயாராகிவிட்டார். அன்று குங்குமப்பூ நிற சேலையில் கருப்பு பார்டர் போட்ட சேலையை அணிந்திருந்தார் இந்திரா.
அன்று காலை இந்திராவை சந்திப்பதற்கு இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படம் தயாரித்துக் கொண்டிருந்த பீட்டர் உஸ்தீனோவுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் ஒடிசாவுக்கு சென்றிருந்தபோதும் இந்திரா காந்தி தொடர்பான சில காட்சிகளை அவர் படம் பிடித்திருந்தார்.
பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி ஜேம்ஸ் கேலகன் மற்றும் மிசோரத்தை சேர்ந்த ஒரு தலைவரையும் பிற்பகலில் இந்திரா காந்தி சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை, இந்திரா காந்தி, பிரிட்டன் இளவரசி ஆன்னுக்கு விருந்தளிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை சிற்றுண்டியாக, இரண்டு ரொட்டித் துண்டுகள், தானியங்கள், ஆரஞ்சு சாறு மற்றும் முட்டைகளை சாப்பிட்டார் இந்திரா. அதுவே இந்திராவின் இறுதி உணவாகவும் இருந்தது.
காலை உணவுக்கு பிறகு, இந்திராவின் ஒப்பனையாளர் அவருக்கு ஒப்பனை செய்தார். இந்திராவை தினசரி காலைவேளையில் சந்திக்கும் மருத்துவர் கே.பி மாத்தூரும் அங்கு வந்தார்.
மருத்துவர் மாத்தூரை உள்ளே அழைத்த இந்திரா அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் 80 வயதிலும் தேவைக்கு அதிகமாக ஒப்பனை செய்துக் கொள்வது, தற்போதும் அவரது முடி கருப்பாகவே இருப்பது என இருவரும் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
9 மணி 10 நிமிடங்களில் இந்திரா காந்தி வெளியே வந்தபோது மிதமான வெப்பத்துடன் காலை சூரியன் தகதகத்தது.
இந்திரா காந்திக்கு வெயில் படாமல் இருப்பதற்காக, கறுப்பு குடையை இந்திராவின் தலைக்கு மேலே உயர்த்தி பிடித்தவாறு நடந்து சென்றார் நாராயண் சிங். இந்திராவின் சில அடிகள் பின்னதாக ஆர்.கே. தவண் மற்றும் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராம் நடந்து கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் பின்னர் நடந்துக் கொண்டிருந்தார் இந்திராவின் பாதுகாப்பு அதிகாரி துணை ஆய்வாளர் ராமேஷ்வர் தயால். இதனிடையில், பணியாளர் ஒருவர் ‘கப் அண்ட் சாஸருடன்’ சென்று கொண்டிருந்தார்.
முன்புறமாக கடந்து சென்ற அவரிடம் அது எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது என்று விசாரித்தார் இந்திரா. அந்த தேநீர் உஸ்தீனோவுக்காக எடுத்துச் செல்லப்பட்டதை தெரிந்துக் கொண்ட இந்திரா, வேறு ‘கப் அண்ட் சாஸரை` பயன்படுத்துமாறு கூறினார்.
சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டை, அக்பர் சாலையுடன் இணைக்கும் சிறிய வாயிலை நோக்கி செல்லும்போது தவணிடம் பேசிக்கொண்டே சென்றார் இந்திரா காந்தி.
ஏமனுக்கு அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், அன்று டெல்லிக்கு திரும்பவிருந்தார். இரவு ஏழு மணிக்கு அவரது விமானம் பாலம் விமான நிலையத்தில் இறங்கியதும், பிரிட்டன் இளவரசிக்கு தான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற செய்தியை ஜெயில் சிங்குக்கு இந்திரா அனுப்பச் சொன்னார் என்கிறார் தவண்.
திடீரென பிரதமரின் பாதுகாவலரான பியந்த் சிங் தனது துப்பாக்கியை எடுத்து இந்திரா காந்தியை நோக்கி சுட்டார். தோட்டா இந்திரா காந்தியின் வயிற்றில் பாய்ந்தது.
தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.
அங்கிருந்து ஐந்தடி தூரத்தில் சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்.
இந்திரா காந்தி கீழே வீழ்ந்ததைப் பார்த்த சத்வந்த் சிங், தனது இடத்தில் இருந்து அசையாமல் ஒரு கணம் சிலைபோல் நின்றார். அதைப்பார்த்த பியந்த் சிங் ‘சுடு’ என்று கூச்சலிட்டார்.
சத்வந்த் சிங், உடனே தனது தானியங்கி துப்பாக்கியில் இருந்த 25 தோட்டாக்கள் தீரும்வரை இந்திராவை நோக்கி சுட்டார்.
பியந்த் சிங் பிரதமரை நோக்கி சுட்டு 25 வினாடிகள் வரை, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
சத்வந்த் துப்பாக்கியால் சுட்டபோது அனைவருக்கும் பின்னால் நடந்து கொண்டிருந்த ராமேஷ்வர் தயால் முன்னோக்கி ஓடிவந்தார்.
ஆனால், இந்திரா காந்தியிடம் அவர் சென்று சேர்வதற்கு முன்னரே சத்வந்தின் தோட்டாக்கள் அவரது தொடைகளையும் கால்களையும் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.
தோட்டாவால் துளைக்கப்பட்டு கீழே வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை பார்த்த உதவியாளர்கள், ஒருவருக்கொருவர் உத்தரவுகளை பிறப்பித்தார்கள். துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட அக்பர் சாலையில் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் பட் உள்ளே ஓடிவந்தார்.
‘செய்ய வேண்டியதை செய்துவிட்டோம்’
இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு, 1984, சீக்கிய சமூகம்படக்குறிப்பு,இந்திரா காந்தி இறந்த பல மணி நேரத்திற்கு பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அப்போது பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டார்கள். “நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்” என்று எக்காளமிட்டார் பியந்த் சிங்.
அப்போது அங்கு குதித்து முன்னேறிய நாராயண் சிங், பியந்த் சிங்கை கீழே தள்ளினார். அருகில் இருந்த பாதுகாப்பு அறையில் இருந்து ஐ.டி.பி.பி வீரர்கள் ஓடிவந்து, சத்வந்த் சிங்கை பிடித்தனர்.
எப்போதும் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நிற்பது வழக்கம். ஆனால் அன்று அந்த அவசர ஊர்தியின் ஓட்டுநர் அவசர உதவிக்கு வரவில்லை, அவர் எங்கே என்றே தெரியவில்லை. இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகர் மாக்கன்லால் ஃபோதேதார், ‘காரை கொண்டு வாருங்கள்’ என்று கூச்சலிட்டார்.
நிலத்தில் வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை, ஆர்.கே.தவணும் பாதுகாவலர் தினேஷ் பட்டும் தூக்கி வெள்ளை அம்பாஸிடர் காரின் பின்புற இருக்கையில் கிடத்தினார்கள்.
முன்புற இருக்கையில் தவண், ஃபோதேதாரும் அமர்ந்தார்கள். காரை கிளப்பும்போது ஓடிவந்த சோனியா காந்தியின் காலில் செருப்புகூட இல்லை. இரவு உடையில் சோனியா காந்தி ‘மம்மி, மம்மி’ என்று கத்திக் கொண்டு ஓடிவந்தார்.
இந்திரா காந்தி காரில் கிடத்தப்பட்டிருந்ததை பார்த்த சோனியா காந்தி, பின் இருக்கையில் இந்திரா காந்தியின் அருகில் அமர்ந்து, அவரது தலையை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார்.
கார் வேகமாக எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கிச் சென்றது. நான்கு கிலோமீட்டர் செல்லும் வரை யாரும் ஒன்றுமே பேசவில்லை. சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது.
ஒன்பது மணி 32 நிமிடத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கார் சென்றடைந்தது. அங்கு இந்திரா காந்தியின் ஓ ஆர்.ஹெச் நெகடிவ் வகை ரத்தம் போதுமான அளவு இருந்தது.
ஆனால், இந்திரா காந்தி காயமடைந்திருப்பது, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது போன்ற எந்த ஒரு தகவலும் தொலைப்பேசி மூலமாக மருத்துவமனைக்கு சொல்லப்படவில்லை.
அவசர பிரிவு கதவு திறப்பதற்கும், இந்திரா காந்தி காரில் இருந்து இறக்கப்படுவதற்கும் மூன்று நிமிடங்கள் ஆனது. அங்கு அவரை கொண்டு செல்வதற்கு ஸ்ட்ரெட்சர் இல்லை.
சக்கரம் கொண்ட ஒரு ஸ்ட்ரக்ட்சர் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திரா காந்தி கொண்டு செல்லப்பட்டார். இந்திராவின் மோசமான நிலையைப் பார்த்த அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.
அவர்கள் உடனே எய்ம்சின் மூத்த இதய சிகிச்சை நிபுணர்களுக்கு தகவல் அளித்தார்கள். சில நிமிடங்களிலேயே குலேரியா, எம்.எம். கபூர், எஸ்.பலராம் ஆகிய மருத்துவர்கள் விரைந்துவந்தனர்.
இந்திராவின் இதயம் சிறிதளவு செயல்படுவதாக எலெக்ட்ரோகார்டியோகிராம் இயந்திரம் காண்பித்தது. ஆனால் நாடித்துடிப்பு இல்லை.
இந்திரா காந்தியின் கண்கள் நிலைகுத்தி நின்றன. இது மூளை சேதமடைந்ததற்கான அறிகுறி.
இந்திராவின் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சென்றால் மூளை செயல்படலாம் என்ற எண்ணத்தில் அவரது வாயில் ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டது.
இந்திரா காந்திக்கு 80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது. இது வழக்கமானதை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
மருத்துவர் குலேரியா சொல்கிறார், “இந்திரா காந்தியை பார்த்ததுமே அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்துக்கொண்டேன். ஈ.சி.ஜியும் அதை உறுதிப்படுத்தியது. இனி என்ன செய்வது என்று அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கரானந்திடம் கேட்டேன். பிரதமர் இறந்ததை அறிவித்துவிடலாமா என்று வினவினேன். வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். பிறகு இந்திராவின் உடலை அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றினோம்”.
இந்திரா காந்தியின் உடலை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டது. இது அவருடைய ரத்தத்தை சுத்தமாக்க தொடங்கியது, இதனால் ரத்த வெப்பநிலை 37 டிகிரிலிருந்து 31 டிகிரியாக குறைந்தது.
இந்திரா இறந்துவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. ஆனாலும் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
தோட்டாக்கள், இந்திராவின் கல்லீரலின் வலது பகுதியை சேதப்படுத்திவிட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அவரது பெருங்குடலில் குறைந்தது பன்னிரண்டு துளைகள் இருந்தன, சிறுகுடலும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.
பிரதமரின் நுரையீரலையும் தோட்டா துளைத்திருந்தது.
முதுகுத்தண்டும் தோட்டாக்களின் இலக்கில் இருந்து தப்பவில்லை. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திராவின் இதயம் மட்டுமே பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்தது.
இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு, 1984, சீக்கிய சமூகம்
பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை.
“இந்திரா காந்தி மீது இது போன்ற தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை முகமைகள் எச்சரிக்கை விடுத்திருந்தன” என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தர் மல்ஹோத்ரா கூறுகிறார்.
இந்திரா காந்தியின் அனைத்து சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்கள்
ஆனால் அந்த கோப்பு, இந்திரா காந்தியிடம் சென்றபோது, நாம் மதசார்பற்றவர்கள் தானே? (Aren’t We Secular?) என்று கோபத்துடன் அவர் மூன்றே வார்த்தைகளில் முடித்துவிட்டார்.
இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் இருவரும் அவருக்கு அருகில் பணியில் அமர்த்தப்படவேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
31ஆம் தேதியன்று தனக்கு வயிறு சரியில்லை என்று சத்வந்த் சிங் சாக்குபோக்கு சொன்னார். அதனால் அவருக்கு கழிவறைக்கு அருகில் இருக்குமாறு பணி வழங்கப்பட்டிருந்தது.
இப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திராகாந்தி பிரதமராக எடுத்த ‘ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.
‘தனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்’ என்று இறப்பதற்கு முதல் நாள் இந்திரா காந்தி ஆற்றிய உரைக்கு நேர்மாறாக, இந்திரா காந்தியை கொன்ற அவரது பாதுகாவலர்களின் சீக்கிய சமூகம் பல மடங்கு ரத்தத்தை சிந்தியது, காலத்தின் கோலமல்ல, அலங்கோலம்!



