ஈரானில் அணுஆயுதத் தயாரிப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பல தசாப்த கால மதத் தடையை (பத்வா) விலக்கிக் கொண்டு, நாடு உடனடியாக அணுஆயுதங்களைப் பெற வேண்டும் என அந்த நாட்டுத் தீவிரப்போக்கு நாடாளுமன்றவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பேண அணுஆயுதத் தடுப்பு ஆற்றல் மிகவும் முக்கியமானது என்றும், இது மக்களுக்கு ரொட்டியை (உணவை) விடவும் மிகவும் அத்தியாவசியமானது என்றும் ஈரான் மக்கள் பிரதிநிதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே ஈரானின் இந்தத் தீவிரமான அணுஆயுத நிலைப்பாடு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து ஈரான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், நாட்டின் அணுஆயுதக் கொள்கையில் உடனடி மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் 30-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். உச்ச தலைவர் அலி கமேனியின் மத ரீதியிலான தடை உத்தரவை தற்போதைய புதிய சூழலுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமது நாதேரி (Ahmad Naderi) வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அணுஆயுதத் தயாரிப்பில் இறுதி எல்லை வரையிலான ராணுவத் தடுப்புத் திறனை அடைய வேண்டியது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என அவர் வாதிட்டுள்ளார்.
ஈரான் எம்பிக்களின் இந்தத் தீவிரமான அறிவிப்புகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் ஈரானின் அணுஆயுத முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துக் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஈரானின் அமைதியான அணுசக்தித் தேவைகளுக்கு மட்டுமே தாங்கள் ஆதரவளிப்பதாகச் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மற்றும் சில நட்பு நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈரான் நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள இந்த அணுஆயுத விவாதங்கள் குறித்தும், நாட்டின் தேசியப் பாதுகாப்புக் குழு எடுக்கவுள்ள முடிவுகள் குறித்தும் சர்வதேச சமூகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.



