வெடிகுண்டு மிரட்டல் பல்கேரியாவில் அவசரமாகத்தரையிறக்கம் -இஸ்ரேலில் இருந்து சென்ற விமானம்

 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து வியன்னா நோக்கிப் பயணித்த ஆஸ்திரியன் எயார்லைன்ஸ் விமானம், வெடிகுண்டு மிரட்டலினால் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எயார்பஸ் A320 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானத்தில் 51 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களுமாக மொத்தம் 57 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் டெல் அவிவிலிருந்து வியன்னா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, ருமேனிய எல்லையை அண்மித்த பகுதியில் விமானக் குழுவினருக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எச்சரிக்கை கிடைத்துள்ளது. இதனை அடுத்து விமானத்தை சோபியாவுக்கு திருப்பி அவசரமாகத் தரையிறக்க விமானக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்போது, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று குறித்த பயணிகள் விமானத்தை சோபியா விமான நிலையம் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக பல்கேரிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பின்னர், அதிலிருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியன் எயார்லைன்ஸ் நிறுவனம், விமானம் சோதனையிடப்பட்ட பின்னர் பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.