சன் டிவி நெட்வொர்க்கின் உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகள்தான் காவ்யா மாறன். இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார ஊடகத் தொழிலதிபர்களில் ஒருவராகக் கலாநிதி மாறன் திகழ்கிறார்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், சன் டிவி நெட்வொர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.24,600 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் (Hurun Rich Lis ) கலாநிதி மாறன் 146-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஊடகத் தொழிலதிபர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். பொழுதுபோக்குத் துறையில், ரூ.36,300 கோடி சொத்து மதிப்புடன் உள்ள டி-சீரிஸ் நிறுவன உரிமையாளர் பூஷண் குமாருக்கு அடுத்த நிலையில் கலாநிதி மாறன் உள்ளார்.
மாறன் குடும்பத்தின் முக்கிய வருமான ஆதாரமாக சன் டிவி நெட்வொர்க் உள்ளது. இதில் கலாநிதி மாறன் கணிசமான பங்குகளை வைத்துள்ளார். மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் அவர் சொந்தமாக வைத்துள்ளார்.
iplowners.com.in இணையதளத்தின் தகவலின்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மதிப்பு ரூ.17,500 கோடி முதல் ரூ.18,400 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் மதிப்புப் பட்டியலில் அந்த அணி நான்காவது இடத்தில் உள்ளது.
நவம்பர் மாதம் அனிருத் ரவிச்சந்தரைத் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படும் காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO), இணை உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.409 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படிப்பை முடித்த காவ்யா, 2019-ஆம் ஆண்டு சன் டிவி நெட்வொர்க்கில் நிர்வாக இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு, அவரது தந்தை 2017-ஆம் ஆண்டு வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகத்திலும் முக்கியப் பொறுப்பை ஏற்றார்.
அனிருத் ரவிச்சந்தரும் காவ்யா மாறனும் நீண்டகாலமாகக் காதலித்து வருவதாகவும், இருவரும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காவ்யாவின் பெற்றோரான கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
மேலும், இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கலாநிதி மாறன் குடும்பத்தினர் இணைந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர். விஜயின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்துடன் முதல்வர் விஜய்க்கு நீண்டகாலமாக நல்லதொரு நட்பு உள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜயின் தீவிர ரசிகரான அனிருத், அவரது நடிப்பில் வெளியான ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’, ‘பீஸ்ட்’ மற்றும் அவரது கடைசி படமான ‘ஜன நாயகன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக ‘கத்தி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பரிசாக இளம் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முதல்வர் விஜய் பியானோ ஒன்றைப் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருமண அழைப்பிதழை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



