மேகவெடிப்பு மழை பதிவு வடசென்னை பகுதிகளில் 17.5 செ.மீ. மழை பதிவு!

 

வடசென்னை பகுதிகளில் மேகவெடிப்பு போல மழை பெய்து வருகிறது. சென்னை பாரிமுனையில் பெருமழை வெளுத்து வாங்கிவருகிறது. சில மணி நேரங்களில் 17.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வட சென்னையை புரட்டி போட்ட மழை மேகங்கள், தற்போது மத்திய சென்னையை நோக்கி நகர்ந்து தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்ப்பதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.புவியியல் காண்

சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரம் வரை வட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை வட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

 

தொடர்ந்து மழை பெய்வதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து உயர்வு

தொடர்ந்து மழை பெய்துவருவதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை செங்குன்றம், புழல் மற்றும் சோழவரம் உள்பட பல்வேறு சுற்றுவட்டார இடங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் கன மழை காரணமாக செங்குன்றத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதன்காரணமாக இன்று காலை புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.புவியியல் காண்

நேற்று மாலைவரை 315 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 663 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், இன்று 1826 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சுமார் 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில், தற்போது 14.3 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை நகர குடிநீர் தேவைக்காக, புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 174 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் தண்ணீர் 13.99 அடியாகவும், மொத்த நீரின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 1351 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 576 கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நாள்தோறும் சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைகளுக்காக 223 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

‘’தொடர்ந்து மழை பெய்தால், சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது’’ என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.