அஞ்சுகிராமம் அருகே 17 வயது நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் கருவை கலைக்க உதவிய பெண் டாக்டர் உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அமராவதிவிளை பகுதியை சேர்ந்தவர் தனேஷ் (28). கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனேசுக்கும், அஞ்சுகிராமம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இதை அறிந்த தனேஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்து மாணவிக்கு கரு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் மாணவி, மைனர் என தெரிந்தும் அது தொடர்பான விபரத்தை காவல் நிலையத்துக்கோ, சமூக நலத்துறை அல்லது குழந்தைகள் நல அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்தவில்லை. இந்த நிலையில் மாணவியிடம் அவரது பெரியம்மா விசாரித்த போது தான் கர்ப்பம், கரு கலைப்பு தொடர்பான விவகாரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரித்து புகார் பெற்றனர். அதன் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதையடுத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக தனேஷ் மீதும், மேலும் கரு கலைப்பு மற்றும் அதற்கு உதவியதாக தனேஷ் மனைவி அனிதா மற்றும் நர்ஸ் ரேணுகா மீதும், கருக்கலைத்த தனியார் மருத்துவனை டாக்டர் சரண்யா, அவரது தந்ைத டாக்டர் கிஷோர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் அரசு பெண் டாக்டர் சரண்யா, டாக்டர் கிஷோர் மற்றும் தனேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தனேஷ் மனைவி மற்றும் நர்ஸ் ரேனுகாவை தேடி வருகிறார்கள்.



