இந்தோனேசியாவின் சுந்தா நீரிணையில் அமைந்துள்ள ‘அனக் க்ரக்கதாவ்’ எரிமலை வெடித்ததால் காற்றில் பரவிய சாம்பல் புகையினால் மூடப்பட்டிருந்த தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய விமான நிலையங்கள் இன்று (08) செவ்வாய்க்கிழமை காலை முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன.
சுமார் 3,000 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு 3,40,000க்கும் அதிகமான பயணிகள் தவித்த நிலையில், தற்போது நிலைமை சீராகி வருவதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜகர்த்தாவின் பிரதான விமான நிலையமான சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் தனது சேவைகளை முழுமையாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஜகர்த்தாவிலுள்ள ஹலிம் பெர்டானாகுசுமா உள்நாட்டு மற்றும் இராணுவ விமான நிலையம், மேற்கு ஜாவாவின் பண்டுங் நகரத்திலுள்ள ஹுசைன் சாஸ்திரநேகரா விமான நிலையம் மற்றும் தெற்கு சுமத்ராவிலுள்ள சிறிய ரக விமான நிலையம் ஒன்றும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பினால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,40,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 3,000 விமானங்கள் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிமலை சுந்தா நீரிணை பகுதியில், இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
எரிமலையின் அபாய நிலை தற்போது 3ஆம் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தங்களது பயண அட்டவணைகளை சீரமைத்து சேவைகளை வழங்கி வருகின்றன.
1883 ஆம் ஆண்டு ‘க்ரக்கதாவ்’ எரிமலை வெடித்துச் சிதறியதன் மூலம் கடலுக்கு அடியில் உருவான புதிய எரிமலைத் தீவே ‘அனக் க்ரக்கதாவ்’ என அழைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து கடலுக்குள் சரிந்ததால் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி 429 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



