ஈரானின் முஜ்தபா காமெனி உயிரிழக்கவில்லை- டிரம்ப் பேட்டியில் பரபரபு தகவல்!

 

ஈரானின் அதிஉயர் தலைவரான முஜ்தபா காமெனி தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக பரவி வரும் வதந்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். அமெரிக்காவின் பிரபல வானொலி தொகுப்பாளர் கிளென் பெக் உடனான நேர்காணலில் பேசிய அவர், ஈரான் தலைவர் மரணமடையவில்லை என்றும், ஆனால் தாக்குதலில் அவரது உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.வரலாற்று இடங்களை பார்வையிடுக

பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டு ராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, முஜ்தபா காமெனி இதுவரை பொதுவெளியில் நேரடியாகத் தோன்றாதது அவர் உயிரிழந்துவிட்டார் என்ற ஊகங்களை எழுப்பியது. இது குறித்து விளக்கிய டிரம்ப், “அவர் இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. தாக்குதலில் அவரது உடலின் இடது பக்கம், கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பலத்த காயமடைந்துள்ளன. இருப்பினும் அவர் உயிரோடுதான் இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் முடிவுகள் எடுக்கும் முறைகளைப் பார்க்கும் போது, அவர் இன்னமும் பின்னணியில் இருந்து இயங்கி வருகிறார் என்பதையே காட்டுகிறது என அமெரிக்கத் தரப்பில் நம்பப்படுகிறது. அதேவேளையில், அவர் படுகாயமடைந்து தீவிர மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால் தான் அவரது படங்கள் மற்றும் குரல் பதிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் தவிர்க்கப்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஈரான் நாட்டின் அதிபர் மற்றும் அரசு அதிகாரிகள் முஜ்தபா காமெனி முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வரும் நிலையில், டிரம்ப்பின் இந்த நேரடி வாக்குமூலம் சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய தலைவரின் தற்போதைய நிலை குறித்த டிரம்ப்பின் கருத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.