ஒடிசாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 22 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடேலார காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘எம்வி ஓசியன் வின்னர்’ என்கிற சரக்கு கப்பல், ஒடிசாவிலிருந்து 1,700 டன் இரும்புத் தாது கனிமங்களை எடுத்துக்கொண்டு, கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் சீனாவை நோக்கி புறப்பட்டது. இந்தக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 20 பேர், மியான்மரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 24 மாலுமிகள் இருந்தனர்.
இந்நிலையில் ஒடிசாவில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் சென்று கொண்டிருந்தபோது, இந்த சரக்கு கப்பல் திடீரென கவிழ்ந்தது. சற்று நேரத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படை மற்றும் கடலோரா காவல் படையின் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அந்த குழுக்கள் மேற்கொண்ட தீவிர மீட்பு பணியில் 2 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்னும் 22 மாலுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.



