கருணா அம்மான் பெருந் தொகையான பணங்களைச் சுருட்டியதால்:முல்லைத்தீவு தலைமையகத்திற்கு வரும்படி உத்தரவு

 

ராணுவத்தினரைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி இன்னொரு போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்தினார்கள்.

கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஆட் சேர்ப்பு அதிகரித்ததோடு, அங்கு முகாம்கள் அமைக்கவும் தயாரானார்கள்.

இவை யாவும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களாகும். உளவுப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் திருகோணமலைத் துறைமுகப் பிரதேசத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. என அரசு மிக அவதானித்துக் கொண்டிருந்தது.

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் பிரிவினரின் தகவல்களைக் கவனித்தபோது பிரதமருக்கு நெருக்கமாக இருந்த சிலர் பாதுகாப்புக் குறித்து மிகவும் மெத்தனமாகவே செயற்படுவது தெரிய வந்தது. அதனால் சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து சென்றது.

ஆனால் பிரபாகரன் தனி அரசு உருவாக்கும் நோக்கத்தைக் கைவிடவில்லை. இருப்பினும் அவரது சகாக்கள் மத்தியில் விரிசல்கள் ஆரம்பித்திருந்தன.

பிரபாகரனுக்கு மிகவும் நம்பிக்கையான அவருக்கு இரண்டாவது படியிலிருந்த தளபதி கருணா அம்மானுக்கும், பிரபாகரனுக்குமிடையே படிப்படியாக இடைவெளி அதிகரித்திருந்தது.

அவருக்குக் காட்டு வாழ்க்கை சலிப்புத் தட்டி ஒரு வசதியான வாழ்க்கையை நோக்கி அவரது கவனம் திரும்பியிருந்தது. இவற்றின் விளைவாக கிழக்கு மாகாண செலவினங்களில் குழப்பம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

கருணா அம்மானில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை அவதானித்த பிரபாகரன் உள்ளக விசாரணைக்கு வரும்படி அவரை அழைத்தார்.

உண்மையில் கருணா அம்மான் பெருந் தொகையான பணங்களைச் சுருட்டியிருந்தார். விடுதலைப்புலிகளின் சட்ட விதிகளின் படி அது மன்னிக்க முடியாத குற்றம். இதன் பிரகாரம் பிரபாகரன் முல்லைத்தீவு தலைமையகத்திற்கு வரும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை கருணா அம்மான் நிராகரித்தார். ஏனெனில் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

இதனால் கருணா அம்மான் மிகவும் இறுக்கமான ஒரு முடிவுக்குச் சென்றார். அதாவது தாமே கிழக்கின் தலைவர் என பிரபாகரனுக்கு சவால் விட்டார். கிழக்கின் போராளிகள் தமக்கே விசுவாசமாக இருப்பார்கள் எனக் கருதி தாம் அங்கு சுதந்திரமாகச் செயற்படலாம் என எண்ணியிருந்தார்.

இந்த எண்ணம் காரணமாக அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்;குமா? எனத் தேடிக் கொண்டிருந்தார். அது அவருக்கு அவசியமாகவும் இருந்தது.

விடுதலைப்புலிகள் மத்தியில் பிளவு ஏற்படுவது என்பது எதிர்பாராத ஒன்று. பிரதமரைப் பொறுத்தமட்டில் இவற்றில் தலையிட்டது பிரபாகரனுக்குத் தெரிந்தால் அவை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்தாக அமையலாம் எனக் கருதி அதனைக் கருணா அம்மான் தீர்த்துக் கொள்ளட்டும் என எண்ணினார்.

ஆனால் பிரபாகரன் அதுவரை காத்திருக்கவில்லை. சில நாட்களுக்குள்ளாகவே வாகரையிலுள்ள அவரது முகாமைத் தாக்கினார்கள். அதில் வெற்றி பெற்றார்கள். அந்த முகாமைக் கைப்பற்றியதோடு பலரைப் பணயக் கைதிகளாக பிடித்தனர்.

இச் சம்பவத்தின் பின்னர் வேறு ஆதரவு இல்லாமல் கிழக்கைத் தம்மால் வைத்திருக்க முடியாது என்ற முடிவுக்கு கருணா வந்தார். அதனடிப்படையில் தம்மிடமிருந்த கனரக ஆயுதங்களைப் பதுக்கும்படி தனது போராளிகளுக்குப் பணித்தார்.

பெண் போராளிகளை ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் வீட்டுக்குச் செல்லும்படி பணித்தார். ஆண் போராளிகள் சிதறுண்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்றனர். சிலர் குடும்ப வாழ்க்கைக்குச் செல்ல இன்னும் சிலர் வடக்கிலுள்ள விடுதலைப்புலிகளின் தலைமையுடன் இணைந்தனர்.

கருணா அம்மானின் ஒரு முகாம் மீதான தாக்குதல் கிழக்கின் இயங்கு நிலையை முற்றாக மாற்றியது. அரசாங்கத்தின் ஆதரவு இல்லாத காரணத்தால் கருணா அம்மான் மிகவும் கலங்கிய நிலையில் கிழக்கின் நிலை குறித்து நம்பிக்கை இழந்து காணப்பட்டார்.

இந்த அருமையான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகள் பயன்படுத்த தவறினார்கள். அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தால் வடக்கில் மிகக் குறைவான பயங்கரவாதிகளே இருந்தமையால் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இதில் போர் நிறுத்தக் கண்காணிபபு குழுவிலிருந்த வெளிநாட்டவர்கள் அவ்வாறு செயற்படாமல் அரசைத் தடுத்திருக்கக்கூடும்.

இதன் விளைவாக கருணா அம்மான் உள்ளுர் அரசியல்வாதிகளின் உதவியுடன் தனது பிரதேசத்தை விட்டு வெளியேறி கொழும்பில் தலைமறைவானார்.

இவரது இரண்டாவது தளபதியாக செயற்பட்ட பிள்ளையான் மிகவும் அனுபவப்பட்ட தீவிரவாதி மட்டுமல்ல பல குற்றங்களுக்குப் பொறுப்பானவர்.

இவர் கிழக்கு மாகாணத்திற்கும் வட மத்திய மாகாணத்திற்குமிடையேயுள்ள சிங்கள மக்கள் வாழும் கிராமங்களுக்குள் மறைந்து வாழ்ந்தார்.

அவருடன் சுமார் 150 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் சுமார் 80 பேர் 13 வயதிற்குட்பட்ட சிறுவர்களாகும்.

கருணாவின் மூன்றாவது தர தளபதியாக இருந்த ரமேஷ் மீளவும் பிரபாகரனின் அணியில் இணைந்து கிழக்குச் செயற்பாடுகளில் ஈடுபட்டார். பிற் காலத்தில் உளவுப் பிரிவின் தகவல்களின்படி அவர் ஒரு ஈவிரமக்கமற்ற ஒருவர் எனவும், பொதுமக்கள் மீது முன்னவர்களை விட மிக மோசமாக நடந்து கொள்பவராகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு இந்தப் பயங்கரவாத அமைப்பின் உட் கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்த வேளையில் தெற்கிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைபெற்றன.

அவை குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.