இஸ்லாமியக் குடியரசான ஈரான் அணு ஆயுதங்களைக் கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ஈரான் இன்னும் அமைதி உடன்படிக்கைக்குத் தயார்நிலைக்கு வரவில்லை என்றும், அந்நாடு சில “தீய எண்ணங்களை” (Evil Intentions) கொண்டு செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மத்திய கிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறுவது குறித்து யோசிப்பதைக் கூட அமெரிக்கா அனுமதிக்காது என்றார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கையில் எடுக்க முடியாது; இந்த நடவடிக்கை முந்தைய அமெரிக்க அதிபர்களாலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்து முடிக்கிறோம்” என்று அவர் உறுதியளித்தார்.
தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ராணுவத்தைப் பலப்படுத்தியதாக நினைவு கூர்ந்த ட்ரம்ப், தற்போது எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே ராணுவப் பலத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளையில், ஈரானிய துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் வகையில் செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தடைகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் ஈரானுக்கு எதிரான அழுத்தம் தொடரும் எனத் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தனது நடவடிக்கைகளுக்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். அதேவேளையில், ஈரானியப் புரட்சிகரக் காவல் படையும் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அறிவித்துள்ளதால், மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் உச்சக்கட்ட பதற்றத்தை எட்டியுள்ளது.
போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்! பிரம்மாண்ட தாக்குதல் நடத்த டொனால்ட் ட்ரம்ப் திட்டம்
அமெரிக்கா முன்மொழிந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தப் முன்மொழிவை ஈரான் நாடு திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிலான “பிரம்மாண்டத் தாக்குதலை” நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வரும் சூழலில், ஈரானின் இந்த அதிரடி மறுப்பு மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேரில் சந்தித்துப் பேசிய ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi), அமெரிக்கா சார்பில் தயாரிக்கப்பட்ட போர் நிறுத்த வரைவுத் திட்டத்தைச் சுமந்துகொண்டு டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், ஈரானியத் தலைமை இந்தத் தற்காலிகப் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்க மறுத்துவிட்டது.
உலகளாவிய வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியப் புள்ளியாகத் திகழும் ‘ஹார்முஸ் நீரிணை’ மீதான யாருடைய கட்டுப்பாடு என்பது குறித்துத் தெளிவான தீர்வு எட்டப்படாத எந்தவொரு தற்காலிக ஒப்பந்தத்திலும் தங்களுக்கு உடன்பாடில்லை என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பேராசை கொண்ட அணுகுமுறையே பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம் என ஈரானிய வெளியுறவுத்துறை சாடியுள்ளது.
ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது ராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், பதிலுக்குத் தெல் அவீவ் நகரின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவோம் என்றும், ஏமனின் ஹூதி அமைப்பினரைக் கொண்டு செங்கடலில் முழுமையான முற்றுகையை ஏற்படுத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இரு நாடுகளும் பின்வாங்க மறுப்பதால், உலக அளவில் எரிசக்தி நெருக்கடியும் போர்ச் சூழலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.



