-மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் அபத்தமானவையென ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்புலம் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வாக்கு மூலமாக வழங்கியுள்ள அன்சீர் அசாத் மெளலானாவும் சந்தித்ததாக புகைப்பட ஆதாரங்கள் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில், சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளில் இந்த புகைப்பட ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் விடயங்களை முன்வைத்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னை கைது செய்ய எடுக்கப்ப்டும் நடவடிக்கையைத் தடுக்க உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, நேற்று (24) புதன்கிழமை இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதங்களை மீண்டும் ஆரம்பித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் குழு, பாராளுமன்ற தெரிவுக் குழு ஆகியவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார்.
தாக்குதல்கள் தொடர்பாகக் கடமையில் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை விசாரித்த ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
‘உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை வழிநடத்திய சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாதச் செயல்பாடுகள் குறித்து உளவு அமைப்புகள் 2017 ஆம் ஆண்டிலிருந்தே அறிவித்திருந்தன.
இது குறித்து பொலிஸார் சட்ட மா அதிபருக்கு விசாரணை அறிக்கை சமர்ப்பித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. 2017 முதல் 2019 வரை அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் இன்று கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சிக்கின்றனர். இரு வருடங்களாக விசாரணை அறிக்கை கிடைத்தும் சட்ட மா அதிபர் எதுவும் செய்யவில்லை.
இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க FBI-யும் ஒரு விசாரணையை நடத்தியது. அந்த அமைப்பிலிருந்து 33 புலனாய்வாளர்கள் விசாரணைக்காக நாட்டிற்கு வந்து அதனைச் செய்தனர். குறிப்பாக, ஆதாரங்களைப் பதிவு செய்தல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்தல் போன்ற அம்சங்களையும் அவர்கள் விசாரித்தனர்.
இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளுடன், ஆசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனுடன் பல புகைப்படங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனது சேவை பெறுநர் பிள்ளையான் மற்றும் கருணாவுடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் ஒரு அரசியல் கூட்டத்தில் எடுக்கப்பட்டவை. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இதுபோன்ற புகைப்படங்களை எடுப்பது இயல்பானது.
இந்தச் செயலின் மூலம் மனுதாரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க இயலாது.
சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தப் புகைப்படங்களை கோட்டாபயவுடன், அசாத் மெளலானவை தொடர்புப்படுத்த முழுமையான வன்மத்துடனும் நேர்மையற்ற நோக்கத்துடனும் சமர்ப்பித்துள்ளது.’ என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குற்றம் சுமத்தினார்.
இதனைவிட அசாத் மௌலானா என்பவர் அரசியல் தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றவர் எனவும், பிரித்தானியாவின் செனல்4-க்கு அளித்த பேட்டியில் நாட்டின் நீதித்துறை அமைப்பு மேலிருந்து கீழ் வரை ஊழல் நிறைந்தது என்ற கடுமையான குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சுட்டிக்காட்டினார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை, ஏனைய கொலைகள், கடத்தல்கள் போன்ற அனைத்துக் குற்றங்களுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது பழி சுமத்தும் வகையில் இந்த நபர் செயல்பட்டுள்ளார் எனவும், அத்தகைய நபர் கூறிய கூற்றுகளின் அடிப்படையில் தனது சேவை பெறுநரை எவ்வாறு கைது செய்ய முடியும் எனவும் அந்த ரொமேஷ் டி சில்வா கேள்வி எழுப்பினார்.
பிள்ளையானின் கட்சி பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அசாத் மௌலானா கூறியிருந்தாலும், அவர் பிள்ளையானின் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



