அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டது. இரு நாடுகளும் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதன் மூலமாக போரை நிறுத்துவதற்கு உடன்பாடு எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீரிணையை 60 நாட்களுக்கு அனைத்து நாடுகளும் கட்டணமின்றி பயன்படுத்தும் வகையில் திறப்பது, ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது உள்ளிட்ட 14 முக்கிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இரு நாடுகளும் உண்மையில் எதற்கு ஒப்புக்கொண்டன என்பது குறித்த பல நாள் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா 14 அம்சங்கள் கொண்ட அறிக்கை:
இந்த போரில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலமாக, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன. மேலும், இனிமேல் ஒருவருக்கொருவர் எதிராக எந்தப் போரையோ அல்லது இராணுவ நடவடிக்கையையோ தொடங்க மாட்டோம் என்றும், ஒருவருக்கொருவர் எதிராக அச்சுறுத்தல் விடுப்பதையோ அல்லது பலத்தைப் பயன்படுத்துவதையோ தவிர்ப்போம் என்றும் உறுதியளித்துள்ளன.
அமெரிக்காவும் ஈரானும் அவர்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து, அந்நாட்டின் உள் விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளன.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானுடன் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தில் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளன. மேலும், அது பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே, அடுத்த 30 நாட்களுக்குள் ஈரான் நாட்டுக்கு அருகாமையில் உள்ள அனைத்து ராணுவப் படைகளையும் விலக்கிக் கொள்ளும் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது. மேலும், ஈரானுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகைகளும் முழுமையாக நீக்கப்பட்டு, போருக்கு முன்பு எப்படி போக்குவரத்து இருந்ததோ அதேப்போல் செயல்பட வழிவகை செய்து தரப்படும் என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடலுக்கு இடையே வர்த்தகக் கப்பல்கள் 60 நாட்களுக்கு கட்டணமில்லாமலும், எந்தொரு தடையும் இல்லாமலும் பாதுகாப்பாக செல்வதற்கு ஈரான் ஏற்பாடு செய்யும். கண்ணிவெடிகள், தொழில்நுட்ப மற்றும் இராணுவத் தடைகளை அகற்றுவதன் தேவையைக் கருத்தில் கொண்டு, 30 நாட்களுக்குள் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கும்.
ஹார்முஸ் நீரிணையின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார்ந்த சேவைகளை உறுதிசெய்வதற்காக ஓமான் மற்றும் ஈரான், மற்ற பாரசீக வளைகுடாக கடலோர நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களுக்குப் பிறகு கையெழுத்தாகும் இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை மேம்படுத்தவும், உள்கட்டமைப்புகளை சீர்படுத்தவும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குறைந்தபட்சம் 300 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 28 லட்சம் கோடி) வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான அனைத்து உரிமங்கள் மற்றும் அனுமதிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ. நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்கள், சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழுத் தீர்மானங்கள் மற்றும் அனைத்து ஒருதலைப்பட்சமான முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் உட்பட, ஈரான் நாட்டுக்கு எதிரான அனைத்து வகையான தடைகளையும் நீக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவோ அல்லது உருவாக்கவோ மாட்டோம் என்று ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் பொருளைக் கையாள்வது குறித்துத் தீர்வு காண அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன; அதன்படி ஐ. ஏ. இ. ஏ. மேற்பார்வையின் கீழ், அந்தந்த இடத்திலேயே யுரேனியத்தைக் கரைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஈரானும் தற்போதைய நிலையையே பராமரிக்க ஒப்புக்கொள்கின்றன. அதன்படி, ஈரான் அணுசக்தித் திட்டத்தின் நிலைப்பாட்டை முடக்கும், அதேநேரத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எந்தவொரு புதிய தடைகளையும் விதிக்காது மற்றும் அப்பகுதியில் கூடுதல் படைகளை நிலைநிறுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அதன் வழிப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், வங்கிப் பரிவர்த்தனைகள், காப்பீடுகள், போக்குவரத்து போன்ற அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் விலக்குகள் வழங்கப்படும் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஈரானின் முடக்கப்பட்ட நிதிகள் மற்றும் சொத்துக்களை முழுமையாக திருப்பி தருவதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அத்தகைய நிதிகள், அசல் கணக்கில் தக்கவைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மாற்றப்பட்டாலும், ஈரானின் மத்திய வங்கியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு இறுதிப் பயனாளருக்கும் பணம் செலுத்துவதற்காக முழுமையாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றப்படும். அதற்கேற்ப தேவையான அனைத்து உரிமங்களையும் அங்கீகாரங்களையும் வழங்குவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் உறுதியளித்துள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வெற்றிகரமான செயலாக்கத்தையும், இறுதி ஒப்பந்தத்தின் எதிர்கால இணக்கத்தையும் கண்காணிப்பதற்காக ஒரு நிர்வாக கண்காணிப்பு அமைப்பு நிறுவப்படும் என அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஈரான் இஸ்லாமியக் குடியரசும் ஒப்புக்கொண்டுள்ளன.
முக்கிய விதிகள் செயல்படுத்தப்பட்டவுடன், இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும். மேலும், அந்த இறுதி ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் அங்கீகரிக்கப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் கிடைக்கும் ஒரே உறுதியான நன்மை என்னவென்றால், ஈரான் 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான்.



