நோர்வேயில் இருந்து லண்டன் வந்து ஒரு நபரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 17வயது சிறுவன் !

 

நினைத்துப் பார்க்கவே முடியாத சம்பவங்கள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. நார்வே நாட்டின் ஸ்டவங்கர் (Stavanger) பகுதியில் இருந்து லண்டன் வந்து, அங்கே ஒரு நபரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார் வெறும் 17 வயதே நிரம்பிய ஒரு சிறுவன். சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு மாபெரும் நிழல் உலகக் கும்பலின் ‘ஹிட்மேன்’ (Hitman) ஆக இந்தச் சிறுவன் எப்படிச் செயல்பட்டான், அவன் எப்படிச் சிக்கினான் என்பதே, பரபரப்பான கதை.

ஈரான் நாட்டு உளவு அமைப்புகளால் இயக்கப்படும் ‘பாக்ஸ்ட்ராட் நெட்வொர்க்’ (Foxtrot Network) என்ற ஆபத்தான ஸ்வீடிஷ் சர்வதேசக் குற்றக் கும்பல், லண்டனில் இருக்கும் ஒரு முக்கிய நபரைத் தீர்த்துக்கட்ட பல்லாயிரக்கணக்கான பணத்தை ஆசையாகக் காட்டி இந்தச் சிறுவனை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. நார்வேயில் ஒரு கால்பந்து வீரராக வலம் வந்த இந்தத் திறமைசாலி சிறுவன், பணப் பேராசையால் ஒரு சர்வதேசக் கூலிப்படை கொலையாளியாக மாற ஒப்புக்கொண்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்காலிக பாஸ்போர்ட் மூலம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளான். அங்கிருந்த எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம், “ஆன்லைனில் ஃபார்ட்நைட் (Fortnite) மற்றும் ஃபிஃபா (FIFA) கேம் விளையாடிய நண்பர்களைப் பார்க்க வெறும் 40 பவுண்டுகளுடன் வந்திருக்கிறேன்” என்று அப்பட்டமாகப் பொய் கூறி நழுவியுள்ளான்.

விமான நிலையக் கண்காணிப்பில் இருந்து தப்பிய அந்தச் சிறுவன், ‘ஏஜென்ட் 47’ (Agent 47) என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு மர்ம நபருடன் ‘சிக்னல்’ (Signal) ஆப் மூலம் ரகசியமாகத் தொடர்பு கொண்டு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளான். மான்செஸ்டரில் இருந்து டாக்சி மூலம் ஹடர்ஸ்ஃபீல்டு பகுதிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு பாலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கரன்சி கட்டுகளை எடுத்துள்ளான். அதன் பிறகு, அருகில் இருந்த ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்து, அங்கு ரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு செமி-ஆட்டோமேட்டிக் கைத்துப்பாக்கி, ஒரு சுழல் துப்பாக்கி (Revolver) மற்றும் 12 தோட்டாக்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கி க்ளைமாக்ஸ் ஆபரேஷனுக்காகக் காத்திருந்துள்ளான்.

ஆனால், இங்கிலாந்து உளவுத்துறையும் ஆயுதப்படை போலீசாரும் (Armed Police) அவனது நடமாட்டத்தை வான்வழியாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாகவும் துல்லியமாகக் கண்காணித்து வந்துள்ளனர். மார்ச் 19-ஆம் தேதி அதிகாலை, அவன் தங்கியிருந்த பிரையர் கோர்ட் ஹோட்டல் அறையின் கதவை ஆயுதம் தாங்கிய போலீசார் அதிரடியாக உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தனர். அப்போது வெறும் பாக்ஸர் ஷார்ட்ஸ் உடம்புடன், தூக்கத்தில் இருந்து கண் விழித்த அந்தச் சிறுவன், போலீசாரைப் பார்த்துக் கொஞ்சமும் பயப்படாமல், தனது வெற்று கைகளால் துப்பாக்கி போலச் சைகை செய்து, போலீசாரைச் சுடுவது போலப் பாவனை செய்து திமிராகச் சிரித்துள்ளான்! போலீசாரால் உடனடியாகக் சுவரோடு சுவராக அமுக்கிக் கைது செய்யப்பட்ட அவனது அறையிலிருந்து கொடிய ஆயுதங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சர்வதேசக் கொலைச் சதித் திட்டம் முறியடிக்கப்பட்ட விதம், லண்டன் நீதிமன்றத்தில் நேற்று பாடிகேம் (Bodycam) காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்ட போது அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர்!