இதய செயலிழப்புக்கு நிவாரணம் இம்பெல்லா கருவி

 

இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் வயது வித்தியாசம் ஏதும் இன்றி திடீரென்று இதய செயலிழப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய தருணத்தில் அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கும் போது. அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இம்பெல்லா எனப்படும் நவீன கருவி பாவிக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இதய செயலிழப்பு பாதிப்பின் காரணமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது சீரான குருதி ஓட்டத்தை சாத்தியப்படுத்துவதற்காக வைத்தியர்கள் தற்காலிகமாக இதயத்தில் செலுத்தும் ஒரு கருவிதான் இம்பெல்லா. பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன்ஸ் எனும் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது இத்தகைய கருவி ஒவ்வொரு நோயாளிக்கும் அவசியமாகிறது. இதனை பொருத்தும் போது இதய தசைகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீராக வழங்குகிறது. இதன் காரணமாக இதய செயலிழப்பு காரணமாக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையின் போது நோயாளியின் உயிரிழப்பு அபாயம் கணிசமாக குறைகிறது.

எம்மில் பலருக்கும் இதய துடிப்பு சீராக இயங்குவதற்காக பேஸ்மேக்கர் என்ற கருவியை பொருத்திக் கொள்வதை பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் இதய செயலிழப்பு, மாரடைப்பு உள்ளிட்ட தருணங்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது இம்பெல்லா எனும் கருவி.. எம்முடைய உயிர் காக்கும் கருவியாக செயல்படுகிறது என்பதை எம்மில் சிலரே அறிந்திருப்பர்.

இம்பெல்லா ஹார்ட் பம்ப் கொண்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பத்து நோயாளிகளில் எட்டு பேர் முழுமையான நிவாரணத்தை பெறுகிறார்கள் என்றும், அவர்களுடைய இதய செயல்பாட்டில் சீரான முன்னேற்றம் ஏற்படுவதாகவும் அண்மைய ஆய்வுகளின் மூலம் அவதானிக்கப்படுகிறது. மேலும் இத்தகைய கருவிகளுடன் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளிடம் சோர்வு, மூச்சு திணறல், வீக்கம், இருமல் போன்ற அறிகுறிகள் குறைவதையும் காணலாம்.

அதே தருணத்தில் கார்டியோஜெனிக் ஷாக் எனப்படும் மாரடைப்பு காரணமாக ரத்த ஓட்டம் கடுமையாக குறையத் தொடங்கி, ஹைபோக்சியா என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் அபாய கட்டத்திற்கு நோயாளிகள் செல்லக்கூடும். அத்தக தருணத்தில் நோயாளிகளுக்கு ரத்த ஓட்டத்தை சீரமைக்க இம்பெல்லா எனும் இந்த கருவி பாவிக்கப்படுவதாக வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.