கடந்த ஏப்ரல் 8ம் தேதி தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் வெடித்தது. இந்த போர் உலக பொருளாதாரத்தை உலுக்கி உள்ளது. உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறி உள்ளது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 8ம் தேதி தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதால், தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது பிடியை ஈரான் தொடர்ந்து தக்க வைத்திருப்பதால் ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் நிலவி வரும் சூழலில், லெபனானில் ஈரானின் கூட்டாளியான ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா தலையிட்டும் கேட்காத இஸ்ரேல், லெபனானில் ஆழமாக ஊடுருவி உள்ளது. நேற்று முன்தினம் இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஈரானுக்கு கடும் ஆத்திரமூட்டியது.
தனது எச்சரிக்கையையும் மீறி பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேல் மீது நேற்று ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் உள்ள 2 ராணுவத் தளங்களைக் குறிவைத்ததாக ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர் படை தெரிவித்தது. இதோடு, ஈரானின் மற்றொரு கூட்டாளியான ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் சைரன்கள் ஒலித்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் அனைத்தையும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலேயே தடுத்து அழித்ததாக அந்நாட்டு ராணுவம் கூறி உள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரானின் இஸ்பஹான், கராஜ், தப்ரிஸ் மற்றும் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை ஏவியது. குறிப்பிட்ட ராணுவ தளங்களை குறிவைத்து விமானப்படை தாக்குதலும் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தன. மேற்கண்ட நகரங்களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, டெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள வான்வெளியை ஈரான் மூடியது.
குசெஸ்தான் மாகாணத்தின் மஹ்ஷஹர் நகரில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை தாக்குதலில் சேதமடைந்ததாக பார்ஸ் மற்றும் மெஹர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. சேதம் குறித்த விவரங்களை அவை வெளியிடவில்லை. பெட்ரோ கெமிக்கல் ஆலை மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்தது. கடந்த ஏப்ரல் 8ம் தேதிக்குப் பிறகு ஈரான், இஸ்ரேல் முதல் முறையாக நடத்தியிருக்கும் இத்தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் பதற்றத்தை உருவாக்கியது.
தாக்குதல் நிறுத்தம் ஈரான் அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கி நேற்றுடன் 100 நாட்களாகிறது. சரியாக 100வது நாளில் ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் குண்டுவீசி பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்நிலையில், தனது தாக்குதல் நடவடிக்கையை நிறுத்துவதாக ஈரான் ராணுவத்தின் கூட்டு தலைமையகம் நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டது. தெற்கு லெபனான் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேலோ அல்லது அதன் ஆதரவாளர்களோ மேலும் ஏதேனும் ஆக்கிரமிப்பு மற்றும் விரோதச் செயல்களை மேற்கொண்டால் முன்பை விட மிக கடுமையான நசுக்கும் நடவடிக்கைகள் தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக ஆக்சியோஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் இருக்கிறோம். இன்னும் ஒன்றிரண்டு நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். எனவே இஸ்ரேல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். ஈரானின் தாக்குதல்களால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இனி இஸ்ரேல் பதிலடி கொடுக்காது என்று நம்புகிறேன்’’ என்றார்.




