ரஷ்யா பூமியின் சுற்றுப்பாதையில் அணு ஆயுதத்தை நிலைநிறுத்த திட்டம்

பூமியின் சுற்றுப்பாதையில் அணு ஆயுதம் தாங்கிய ‘ஸ்புட்னிக்-எஸ்’  எனப்படும் செயற்கைக்கோளை ரஷ்யா நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஜெர்மனியின் என்.டி.ஆர் (NDR), டபிள்யூ.டி.ஆர் (WDR) ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் ‘சுட்டாய்ச்சே சைடுங்’ நாளிதழ் ஆகியவை நவம்பர் 23 முதல் 27, 2026 வரையிலான நாட்களில் வெளியிட்ட செய்தி அறிக்கைகளின்படி, அடுத்த 60 நாட்களுக்குள் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் மாஸ்கோ அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியின் பி.என்.டி (BND) உளவுத்துறை உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுமார் 17,000 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்பட்டால் கதிர்வீச்சு காரணமாக முதற்கட்டமாக மூன்றில் ஒரு பங்கு செயற்கைக்கோள்கள் செயலிழக்கும் என அமெரிக்க விண்வெளிப் படைத் தளபதி ஸ்டீபன் வைட்டிங் மதிப்பிட்டுள்ளார். இது தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ராணுவக் கண்காணிப்பு அமைப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தத் தகவல்கள் குறித்துப் பெர்லினில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து பேசிய ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிடுவதாக வெளியாகும் செய்திகள் புதியவை அல்ல என்றாலும் அவை அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது ரஷ்யா கையெழுத்திட்டுள்ள 1967-ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தத்தை  அப்பட்டமாக மீறும் செயலாகும் என ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம், பெர்லினில் உள்ள ரஷ்யத் தூதரகம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளதுடன், இவை ஆதாரமற்ற பிரசாரத்தின் ஒரு பகுதி எனக் கூறியுள்ளது.

ஜெர்மன் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கொர்னேலியஸ் (Stefan Kornelius), உளவுத்துறை அறிக்கைகளைத் தங்களது அரசு மிகத் தீவிரமாகக் கருதுவதாகவும், ஆனால் தற்போதைக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். விண்வெளியில் அணு ஆயுதம் வெடிப்பது ரஷ்யாவின் சொந்தச் செயற்கைக்கோள்களையும் பாதிக்கும் என்பதால், ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியாகவே இதைப் பார்க்க வேண்டும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்; இது தொடர்பாக நேட்டோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளது.