7வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதம்

ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானும், அமெரிக்காவும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இடைக்கால அமைதி ஒப்பந்தமும் எட்டப்பட்டது.

ஆனால் இடைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் நீரிணையில் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதால், அந்நாட்டின் மீது அமெரிக்காவும் கடந்த சில நாள்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 7வது நாளாக ஈரானின் முக்கிய துறைமுகமான பந்தர் அப்பாஸ் நகரத்தை நாட்டின் மத்திய பகுதி மற்றும் தலைநகர் தெஹ்ரான் ஆகியவற்றுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாலங்களை அமெரிக்கா தாக்கியது.

இதேபோல், ஈரானின் தெற்கு பகுதியான ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மின் நிலையம் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல்களை நடத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா அண்மையில் நடத்திய தாக்குதல்களில் 46 பேர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறி வைத்து ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வௌியிட்ட அறிக்கையில், “ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறி வைத்து ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினோம். இதில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் சேதமடைந்தன” என தெரிவித்துள்ளது.

இந்த போரில் மத்தியஸ்தர்களாக செயல்படும் கத்தார், குவைத் நாடுகளின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குவைத் நாட்டில் கடந்த இரண்டு நாள்களில் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் கூறியுள்ளது.