246 பயணிகளுடன் கொழும்பில் 3 மணித்தியாலம் வட்டமிட்ட துருக்கி விமானம்!

 

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த துருக்கி நாட்டு பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை (11) காலை 10:24 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி விமானம் 3 மணித்தியாலங்களின் பின் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான ‘TK-731’ என்ற ‘A330’ ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.

பறவை மோதியதால் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், நீர்கொழும்பு கலப்பு கடல் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தனது எரிபொருளைப் பயன்படுத்தி வந்தது.

மேலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு முன்னதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் அவசரக்கால மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழுமையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு, எவ்வித ஆபத்துகளுமின்றி விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.