13 வயது சிறுமியை ஹோட்டல் உரிமையாளருக்கு விற்ற ரிக்‌ஷா ஓட்டுனர். 30 பேர் பாலியல் பலாத்காரம்..

.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர், ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீட்டை விட்டு காணாமல் போன அச்சிறுமியை, ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்றுள்ளார். அங்கிருந்து பல ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு, அச்சிறுமி இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வலி ஏற்படும் போதெல்லாம், குற்றவாளிகள் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற பல ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களைப் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீ கங்காநகரில் சட்டவிரோதமாக இயங்கும் 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்த கொடூரத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரண்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபிந்தர் சிங் குன்னர் இப்போராட்டத்தில் பங்கேற்று, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும், உள்ளூர் காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.